ஒரு சதய இரவு
கூரையில் இருந்து முத்துமாலையாய் கோர்த்து, முழுமை அடையாமல் மண்ணை தழுவும் மழைத்துளிகளை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெயந்தன். ஜெயந்தன் வழி வழியாக பாண்டிய வம்சத்திற்கு விஸ்வாசம் காட்டும், பாண்டிய அமைச்சர் மானபரணின் மகன். மரண படுக்கையில் அவன் தந்தை சொல்லிய வார்ததைகள் அவன் செவிகளுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.”ஜெயந்தா! மீண்டும் செழிஞரை அரியனையில் ஏற்றி நீ அழகு பார்க்க வேண்டும். செழிஞரை தேசு கொள் என கர்வமாக மெய்கீர்த்தி கொண்ட, ராஜனுக்கு ராஜன் என அகம்பாவமாய் அபிடேக நாமம் முடி சூடிய அந்த ராஜராஜன் கர்வம் அழிய வேண்டும்.” என சொல்லியவாறே உயிரை விட்டார்.ஆனால் பாண்டிய வம்சம் மீண்டும் ஏழ இன்னும் முன்று தலைமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. சோழ படை , பாண்டியர் படையை நிர்மூலமாக்கி விட்டது. பெரிய பாண்டியர் சேர நாட்டின் எல்லை பகுதியில் மறைந்து வாழ்ந்து வருகின்றார். இந்த மழைத்துளி முத்துக்கள் சகதியில் விழுவதை போல், சோழர் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பாண்டியரின் அனைத்து முயற்சிகளும் வீணானது. காரணம் ஒரே பெயர் தான் இராஜ ராஜன் என அபிடேக நாமம் சூடிய அருள்மொழி. விவேகம் இருப்பவரிடம் வ...