ஒரு சதய இரவு
கூரையில் இருந்து முத்துமாலையாய் கோர்த்து, முழுமை அடையாமல் மண்ணை தழுவும் மழைத்துளிகளை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெயந்தன்.
ஜெயந்தன் வழி வழியாக பாண்டிய வம்சத்திற்கு விஸ்வாசம் காட்டும், பாண்டிய அமைச்சர் மானபரணின் மகன். மரண படுக்கையில் அவன் தந்தை சொல்லிய வார்ததைகள் அவன் செவிகளுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.”ஜெயந்தா! மீண்டும் செழிஞரை அரியனையில் ஏற்றி நீ அழகு பார்க்க வேண்டும். செழிஞரை தேசு கொள் என கர்வமாக மெய்கீர்த்தி கொண்ட, ராஜனுக்கு ராஜன் என அகம்பாவமாய் அபிடேக நாமம் முடி சூடிய அந்த ராஜராஜன் கர்வம் அழிய வேண்டும்.” என சொல்லியவாறே உயிரை விட்டார்.ஆனால் பாண்டிய வம்சம் மீண்டும் ஏழ இன்னும் முன்று தலைமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. சோழ படை , பாண்டியர் படையை நிர்மூலமாக்கி விட்டது. பெரிய பாண்டியர் சேர நாட்டின் எல்லை பகுதியில் மறைந்து வாழ்ந்து வருகின்றார். இந்த மழைத்துளி முத்துக்கள் சகதியில் விழுவதை போல், சோழர் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பாண்டியரின் அனைத்து முயற்சிகளும் வீணானது. காரணம் ஒரே பெயர் தான் இராஜ ராஜன் என அபிடேக நாமம் சூடிய அருள்மொழி. விவேகம் இருப்பவரிடம் வீரம் இருக்காது. வீரம் இருப்பவரிடம் விவேகம் இருக்காது என சொல்வார்கள். ஆனால் இந்த அருள்மொழியிடம் இரண்டும் உண்டு. ஆரல்வாய்மொழி கணவாயில் மலைக்கோட்டையின் மேலிருந்து விழும் அம்பு மழைக்கு சோழ சைனியம் தயங்கி நிற்க, ஒரே நொடியில் அம்பு விழும் மணிக் கணக்கை கணக்கிட்டு, துணிந்து அம்பு மழைக்குள் புகுந்து கோட்டையை நோக்கி முன்னேறிய ராஜராஜர் இன்னும் கண்ணுக்குள் நிற்கின்றார். அவரின் ஆவேசம் சோழ சையத்திற்குள் இறங்க இரண்டே நாழிகையில் ஆரல்வாய்மொழிக் கோட்டை விழுந்தது. தொடர்ந்து சேரனின் விழிஞம் துறைமுகமும் சோழரால் வெற்றி கொள்ளப்பட்டது.ஒரே பாய்ச்சலில் சேரன் பாண்டியன் இரண்டு பேரையும் வெற்றி கொண்டது சோழ புலி. எதிரியாக இருந்தாலும் ராஜராஜரை உள்ளுக்குள் ரசிக்கின்றோமோ என தோன்றியது ஜெயந்தனுக்கு. இருக்கலாம். ராஜராஜரின் ஜனவசியம் மிக பிரபலம் ஆயிற்றே.வீரபாண்டியன் தலையை கொய்து தஞ்சை கோட்டையில் மாட்டி வைத்து அக்கிரமம் செய்த ஆதித்த கரிகாலனை சபித்து ஒப்பாரி பாடிய, மதுரை மக்கள், அவன் தம்பி ராஜராஜனை, சோழ பாண்டியன் என ஏற்றுக் கொள்கின்றார்கள் என்றால் ராஜராஜரின் முகவசியம் எப்பேர்ப்பட்டது.
ஆனால் “ராஜராஜரே உங்கள் முகவசியத்தை தாண்டியும், உங்கள் வீரத்தின் மீதான என் பிரமிப்பை காட்டிலும் வழி வழியாக என் இரத்ததில் கடத்தப்பட்ட பாண்டிய தேசத்தின் அபிமானத்தின் அடர்த்தி அதிகம். உங்கள் சிரிப்பின் கடைசி துளியை பருக இதோ இந்த விஷ அம்பு துடித்து கொண்டு இருக்கின்றது. உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் உங்கள் ஜென்மம் முடிக்க வருகின்றேன்.”
தனக்குள் பேசிக்கொண்ட ஜெயந்தனின் கவனத்தை கலைத்தது ஆந்தையின் குரல். அது சங்கேத மொழி. தஞ்சையின் தென்கிழக்கு எல்லை பாண்டிய எல்லையை ஒட்டிய கடல்புறம். அந்த எல்லையை பயன்படுத்தி சுமார் 50 பாண்டிய ஆபத்துதவிகள், சாமான்ய மக்கள் போல் தஞ்சையின் ஜனத்தொகையில் கலந்து விட்டு இருந்தனர். இது ஒரிரு மாதங்களில் நடந்தது இல்லை. ஆண்டுக்கணக்கில் இந்த செயல்பாடு நடந்து வருகின்றது. சோழர் ஒற்றர்படையின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, குடியானவராகவோ, குதிரைக்காரனாகவோ பரிசாரகனாவோ பாண்டிய ஆபத்துதவிகள் கலந்து விட்டிருந்தனர். அவர்களும் இராஜராஜரை கொல்ல பலவிதங்களில் முயற்சித்தும் ஒவ்வொரு முறையும் இறை அருளும் சோழ வேளக்கார படையும் அவர் உயிரை காத்து வந்தது.
இன்று ஐப்பசி சதயம். பெருவுடையார் கோவில் மைதானத்தில் சாந்திகூத்தரின் இராஜராஜ விஜயம் நாடகத்தை பார்க்க மன்னர் வரும் போது விஷ அம்பை மறைவில் இருந்து எறிய வேண்டும். மக்களுடன் கலந்து இருக்கும் மற்ற ஆபத்துதவிகள் கலக குரல் எழுப்ப, அந்த களேபரத்தை பயன்படுத்தி தப்பிக்க வேண்டும். இது தான் ஜெயந்தனின் திட்டம். நெஞ்சில் வழியும் வன்மம் கண்களில் கசியாமல், சேர நாட்டின் ஊதுகுழல் அம்பை கச்சத்தில் மறைத்து அப்பாவி குடியானவன் வேடம் தாங்கி ஜனதிரளில் கலந்தான் ஜெயந்தன். அடுத்து என்ன நேருமோ என்ற பதைபதைப்புடன் எழுந்தது அந்த தசமி நிலவு.
கூத்து களைக்கட்ட துவங்கி விட்டது மன்னர் இன்னும் வரவில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் கரைய வாயிலின் அருகே சலசலப்பு. மன்னரின் வருகையை அறிவிக்கும் எக்காளம் எதுவும் ஒலிக்கவில்லையே என யோசிக்கும் போதே, பெரிய பிராட்டி குந்தவை தேவியின் வருகை அந்த சபையில் நிகழ்ந்தது. உடையார் ராஜராஜ தேவரின் திருத்தமக்கையார்! வல்லவரையர் வந்திய தேவரின் பிராட்டியார் ஆழ்வார் பராந்தக குந்தவை பிராட்டியார் என வாழ்த்து குரல் விண்ணதிர எழும்பியது. மன்னர் வரவில்லையா என? ஒரு ஏமாற்றம் ஜெயந்தனின் உள்ளத்தில் பரவியது. மன்னர் வராவிட்டால் என்ன? இந்த பெண் புலியை கொன்றால் அந்த சோழ புலி உயிருடன் நடைப்பிணம் ஆகிவிடுமே.எல்லாவற்றிலும் அக்கனை முன்னிலைப்படுத்தும் இராஜராஜருக்கும் தமக்கையின் மரணத்தை விட வலி தருவது வேறோன்றும் இருக்க முடியாது. முடித்து விடலாமா என யோசித்தது மனம். வேண்டாம் ஒரு பெண்ணை மறைந்து நின்று கொன்றார்கள் என்ற இழிச்சொல் வேண்டாம் என யோசித்துக் கொண்டே அவன் இடைக்கச்சை அனிச்சையாக தடவிய போது அந்த ஊதுகுழல் அம்பை காணவில்லை. பதறி துடித்த ஜெயந்தனின் வாயை பொத்தி இருளின் மூலை நோக்கி நகர்ந்தது ஒரு உருவம். துணியில் தோய்க்கப்பட்ட மயக்க மருந்து, ஜெயந்தனின் சுயநினைவை பறித்தது.
கண்ணை விழித்த ஜெயந்தனின் காதுகளில் அலையின் ஓசை ரீங்காரமிட்டது. சுயநினைவுக்கு வந்த ஜெயந்தன் தன் உடலை அசைக்க முயற்சித்த போது தன் உடல் ஒரு கட்டுமரத்தில் கட்டியிருப்பது புரிந்தது. தூரத்தில் ஒரு ஒற்றை பணைமரம். அதன் மீது ஒரு சுளுந்து கட்டப்பட்டு இருந்தது. சுளுந்தின் ஒளியில், மரத்தின் அடியில் வேல் தாங்கிய வீரர்கள், கண்ணுக்கு புலனானார்கள். ஜெயந்தனுக்கு புரிந்து விட்டது. இந்த இடம் தஞ்சைக்கு தென்கிழக்கில் மூன்று காத தூரத்தில் உள்ள கடல்பகுதி. தன் திட்டம் சோழரின் ஒற்றர் படைக்கி தெரிந்து விட்டது போல. எந்த பகுதியின் வழியாக ஊடுருவினோமோ அதே பகுதியில் ஜலசமாதி ஆக்க இங்கே கொண்டு வந்துள்ளார்கள் போலும். அடுத்து இந்த பகுதியை ஊடுருவ வரும் பாண்டிய ஆபத்துதவிகளுக்கு பயத்தை உண்டாக்க தன் உடலை இங்கேயே குத்தி தொங்க விடாலாம் என தோன்றியது. தொங்க விடட்டும் பாண்டிய வீரம் பயத்து பின்வாங்காது. நான் சித்தும் இரத்தம் பாண்டிய வீரர்களுக்கு நெஞ்சுரத்தை தான் விதைக்கும். ஜெயந்தான் யோசித்து கொண்டே இருக்கும் போது ஒரு குதிரையின் குளம்படி சத்தம்.பனை மரத்தின் கீழ் நின்றிருந்த வீரர்களிடம் ஒரு சலசலப்பு. வெள்ளை குதிரையில் அரோகனித்து வரும் அந்த மனிதர் யார்? இராஜராஜரா? ஆம் அவரே தான்.
நிலவின் தன்னொளியும், சுளுந்தின் பொன்னொளியும் கலந்த வெளிச்சத்தில் கம்பீரமாக ஜெயந்தனை நோக்கி வந்தார் இராஜராஜர்.
“ என்ன மனாபாரனின் புதல்வரே உங்கள் திட்டம் எப்படி பாழானது என யோசிக்கின்றீரா? உங்கள் பாண்டிய படை சாமான்ய வேடம் போட்டு தான் ஊடுருவ முடியும். எங்கள் சோழ நாட்டிலோ சாமான்யருக்கே அந்த ஊடுருவலை தடுக்கும் சக்தி உண்டு. ஒரு தயிர்க்காரி கூட உங்கள் திட்டத்தை பாழாக்கி விடலாம்” சொல்லிவிட்டு பளீர் என சிரித்தார் ராஜராஜர்.
சட்டென புரிந்தது ஜெயந்தனுக்கு தன் மீது இன்று மோதிய தயிர்க்காரி அவளே கச்சையில் உள்ள ஊதுகுழல் அம்பை எடுத்திருக்க வேண்டும். தன்னை ஒற்றறிந்து இருக்க வேண்டும். சோழ நரிகள் என மனதில் கருவிக் கொண்டான்
“மறைந்து நின்று கொல்ல முயற்சிப்பது நரித்தனம் ஆகாதா பாண்டிய தளபதியே?” இராஜராஜர் ஜெயந்தனின் மனதை படித்தது போல் கேள்வியை வீசினார்.
“தாய்நாட்டின் விடுதலைக்காக முன்னேடுக்கப்படும் எந்த செயலும் தவறாகாது சோழ சக்கரவர்த்திகளே.”
“பாண்டிய நாட்டை யார் அடிமைப்படுத்தி வைத்திருப்பது போரினால் பாதிக்கப்பட்ட பாண்டிய நாட்டிற்கு வரியை நீக்கி ஆகிவிட்டது. நீர் ஆதாரங்களை செப்பனிட உத்தரவிட்டுள்ளேன். அடுத்து கீழ்திசை நாடுகளை நோக்கிய ஒரு பெரும் படையெடுப்பை உத்தேசித்து, மதுரைக்கு அடுத்த கப்பலூரில் தான் மரகலங்கள் பெருமளவில் தாயாராகி வருகின்றது. பாண்டி நாட்டு பரதவரே அதில் பணியாற்றி வருக்கின்றார்கள்.பாண்டிய மக்கள் சந்தோஷமாக தான் இருக்கின்றார்கள்.”
“ஆனால் ஆள்வது பாண்டியர் இல்லையே. வழிவழியாக வைரியாக இருந்த குலத்தின் ஆட்சியில் பாண்டிய மக்கள் அடிமையாக தானே உணர முடியும்?”
ராஜராஜரிடம் பெருமுச்சு வெளிப்பட்டது. “ஜெயந்தா! தமிழ் பேசும் இருகுலங்களில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பே இல்லையா? பராசீகர்களும் யவணர்களும் பரதக் கண்டத்தை அடிமைப்படுத்துவார்கள் என ஒரு ரிஷி சொன்னார். அதே போல் வடக்கில் பரசீகர்களின் ஊடுருவல் அதிகரித்து இருக்கும் நேரத்தில் தட்சின பகுதியில் வலுவான அரசு அமைவது அவசியம் இல்லையா?”
“அந்த அரசு ஏன் பாண்டிய அரசாக இருக்க கூடாது சக்கரவர்த்தி? மேலே சொன்ன அதே காரணத்திற்காக பாண்டிய மன்னருக்கு சோழ சிங்கதானத்தை விட்டு தர உங்களால் முடியுமா?”. ஜெயந்தன் சொல்லி முடிப்பதற்குள் வாளின் கூரிய முனை அவன் கழுத்தை அழுத்தியது.
“பிரம்மராயரே ! விடுங்கள்”
“இல்லை! சக்கரவர்த்தி இவனை அதிகம் பேச விடுகின்றீர்கள்”
“எனது ஆணை வாளை எடுங்கள்!”
ராஜராஜரின் கர்ஜிப்புக்கு கட்டுப்பட்டு பிரம்மராயரின் வாள் உறைக்குள் அடங்கியது.
“ஜெயந்தா உன் விடுதலை உணர்வை மதிக்கின்றேன். ஆனால் வீரம் என்பது மறைந்திருந்து தாக்குவது அல்ல. உன் வீரத்தை காட்ட இலங்கையின் தமிழ் மன்னன் ஏலேலோ சிங்கன், சிங்கள இளவரசன் துஷ்டகம்னுவிற்கு கொடுத்த வாய்ப்பு போல உனக்கு வாய்ப்பு அளிக்கின்றேன். உன் கட்டுக்களை அவிழ்த்து விட செய்து ஒரு உடை வாளை தருகின்றேன். நீயும் நானும் மட்டும் கலந்துக் கொள்ளும் வாட்போரில் நீ ஜெயித்தால் பாண்டிய தேசத்தில் உள்ள சோழப்படைகள் உடனே பின்வாங்கப்படும். நீ தோற்றால் இந்த கட்டுமரத்தில் கட்டி உன்னை வெகுதூரத்தில் உள்ள கீழ்திசை நாடுகளில் கொண்டு போய் விடுவார்கள்.உன் உயிரை கொல்லாமல் உனக்கு இப்படி ஒரு வாய்ப்பளிப்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எனக்கே என்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள இதை செய்கின்றேன்.நான் வெற்றிக் கொண்ட எந்தவொரு நாட்டையும் சர்வதிகார வெறிக் கொண்டு வெல்லவில்லை. இறையின் சித்தத்தால் தென்னாட்டில் ஒரு பேரரசை ஸ்தாபிக்க வேண்டும் என்றே போர் தொடுத்தேன். இப்போது நடக்கும் வாட்போரின் முடிவு கூட இறையின் சித்தமாக இருக்கட்டும். அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றேன்.ம்ம் எடு வாளை.”
ஜெயந்தனின் கட்டுக்கள் தளர்த்தப்பட்டு வாள் கொடுக்கப்பட்டது. வெறியுடன் தான் வாட்போரை தொடங்கினான். ஆனால் இராஜராஜரின் நகர்வு நிதானமாக இருந்தது. இரண்டு நாழிகைக்கும் மேல் நடந்த வாட்போரில் ஒரு நொடி ஜெயந்தன் தடுமாற அந்த ஒரு நொடி ராஜராஜருக்கு வெல்ல போதுமானதாக இருந்தது. வெற்றியே உனக்கு பாண்டியரின் மேல் கருனையே இல்லையோ.
“ஜெயந்தா இறையின் சித்தம் சோழர்கள் பக்கம் இருக்கின்றது. ஏற்கனவே சொன்னது போல் உன்னை கீழ்திசை நாடுகளில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அங்கே இருந்து உன் பாண்டியரை தேடி போய் சேர்ந்து கொள்ளலாம்” மெல்லிய முறுவல் வெளிப்பட்டது இராஜராஜரிடம்.
“உங்களுக்கு என் மேல் கோபமே இல்லையா?”
“உன் பக்க நியாயம் புரிவதால் கோபத்திற்கு வழியில்லை.”
ஜெயந்தனுக்கு ஏனோ அழ வேண்டும் என தோன்றியது. தோல்வி தந்த காயமா? இல்லை இந்த மனிதரின் பெருந்தன்மை தன்னை தலைக்குனிய வைக்கின்றதா? இவர் தன்னை கொன்று போட்டு இருந்தால் கூட பெருமிதத்துடன் செத்து போய் இருப்போம் என தோன்றியது. ஒருவேளை தப்பிக்க விட்டு பலகீனத்தை கீறி பார்க்கின்றாரோ.
ஜெயந்தா! உன்னை தப்பிக்க விட்டு பேடி ஆக்கும் எண்ணம் எனக்கு இல்லை என அவன் மனதை படித்தது போல் பேசினார். உண்மையிலேயே உன் விடுதலை உணர்வை நான் மதிக்கின்றேன். ஆனால் சோழ நாட்டின் சக்கரவர்த்தியாக இந்த நாட்டின் இறையாண்மையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளதால், உன்னை நாடு கடத்துகின்றேன். சென்று வா! இறையருளால் உனது மனோரதமும் பாண்டிய வம்சத்தின் வேட்கையும் நிறைவேறட்டும்.” ஆசிர்வதிப்பது போல் கைத்தூக்கினார். பகையை மறந்து ஜெயந்தனுக்கு அவரை வணங்க தோன்றி, வணங்க முற்பட்ட போது தடுத்து தழுவிக்கொண்டார். கட்டுமரத்தில் ஏற்றப்பட்டு கீழ்திசை நாடு நோக்கி பயனப்பட்டன் ஜெயந்தான்.
“உயிரை கொல்ல வந்த எதிரிக்கு இவ்வளவு பரிவு யாரும் காட்ட மாட்டார்கள் மன்னா! இது அதிகம்!” புலம்பினார் பிரம்மராயர்.
“பிரம்மராயரே சோழ நாடு மூன்று தலைமுறைக்கு முன் பல்லவருக்கு அடிமைப்பட்டு கிடந்த போது எங்கள் முன்னோர்கள் இப்படி தானே துடித்து இருப்பார்கள். அந்த துடிப்பை அவன் கண்களில் பார்த்ததால், அதில் அறம் இருந்ததால் தப்பிக்க விட்டேன்”
“பகையை முடிக்காமல் விடுகின்றீர்கள் அரசே! இது எத்தனை தலைமுறை ஆனாலும் திரும்ப வரும்.பகை முடிக்கும்.”
ஆம்! முடிவே இல்லாத ஒன்று உலகத்தில் இல்லை பிரம்மராயரே! உயர்ந்தது தாழும்! தாழ்ந்தது உயரும் ! இது இயற்க்கையின் நியதி. வாருங்கள் போகலாம்!”
கிழக்கு அடிவானில் வெள்ளி முளைக்க, அவர்கள் தஞ்சையை நோக்கி புறவியில் பறந்தார்கள். மன்னர் சென்ற திசை நோக்கி நகர்ந்து வந்த அலைக்கடல் சோழர்குடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் உம் புகழ் மறையாது வீர ராஜராஜ சோழனே என ஒங்காரமிடுவது போல், உயர அலைகளுடன் கரையை தழுவியது.
Comments
Post a Comment