அப்பம் வடை தயிர்சாதம்

பாம்பேக்குப் போயிட்டு, மயிலாப்பூரையும் அம்மாவையும் அப்பாவையும் நினைச்சுண்டிருக்காதே... பாம்பேயே உன்னுடைய இடம். பாம்பேயே உன் வீடுன்னு வெச்சுக்கோ. நான் மாயவரத்தை விட்டுட்டு மெட்ராஸ் தான் எனக்குன்னு எப்படி வந்தேனோ... அதே போல, இந்த மண்ணை நன்னா உதறிட்டு, பாம்பேயை இறுகப் பிடிச்சுக்கோ. ஊரை கெட்டியா பிடிச்சுண்டா, உத்தியோகத்துல பிரியம் ஏற்படும். சொந்த ஊர் நினைப்பே இருந்ததுன்னா, உத்தியோகம் ஒட்டாது. உத்தியோகம் ஒட்டலைன்னா உயர முடியாது. உயரம் இல்லைன்னா, தாழ்த்தித்தான் பேசுவான். மண்மேல பாசம் வெச்சவன், மண்ணை விட்டுப் போகக்கூடாது. போறவன், பாசம் வைக்கப்படாது...’  அப்பம் வடை தயிர்சாதம் நாவலில் எழுத்து சித்தர் பாலகுமாரன்.
அப்பம் வடை தயிர்சாதம் பாலகுமாரன் அவர்களின் பிரபலமான நாவல். 2000ல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. இப்போது மீண்டும் கண்ணில் பட மனதில் ஒரு சிலிர்ப்பு. அ.வ.த ,ஒரு பிராமண குடும்பத்தின் 100 வருட கால ஐந்து தலைமுறை கதையை சொல்லும்   நாவல். புரோகிதத்தை விடுத்து உணவு தொழிலை நாடி செல்லும் குடும்பம், காலத்தின் நகர்வுகளுக்கு ஈடுகொடுத்து ஐந்தாம் தலைமுறை  மென்பொருள் தொழிலில் தலைத் தூக்குவதில் முடியும்.
 அ.வ.த தயிர்சாதம் இளம் வயதில் எனக்கு போதித்த பாடம் updation. புரோகிதம் புறக்கணிக்கப்படும் போது உணவு தொழிலை கையில் எடுக்கும் குடும்பம், அடுத்தடுத்த தலைமுறைகளில் கோட்டையில் துபாஷி வேலை, சுதந்திர இந்தியாவில் ஏற்றுமதி, 80 களில் வளைக்குடா எண்ணெய் கிணறு வேலை, 2000 ல் அமெரிக்காவில் மென்பொருள் வேலை என்று தன்னை தகவமைத்து தக்க வைத்துக் கொள்ளும். ஒழுக்கத்தையும் முன்னோரின் தியாகத்தையும் நினைவில் கொண்டு உழைக்க வேண்டும். மேலே போகிறோமோ இல்லையோ கீழே விழ கூடாது என்ற பாடத்தை இளவயதில் என் மனதில் விதைத்த நாவல். ஆனால் இப்போது யோசிக்கும் போது என்னுள் வேறு பார்வையையும் விதைக்கின்றது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும்  ஒரு கதை உண்டு. முன்னோரில் தேங்கி நின்றவரும் உண்டு. ஓடி உழைத்தவரும் உண்டு. கீழேயும் மேலேயும் சென்று வரும் சுழற்சியும் உண்டு. நாம் கொராணாவில் பட்ட கஷ்டத்தை விட பல மடங்கு கஷ்டத்தை நம் தாத்தாக்கள் முதலிரண்டு உலகப்போர்களில் பட்டு இருக்கின்றார்கள். உணவு பஞ்சத்தை சந்தித்து இருகின்றார்கள். ப்ளேக் நோயாலும் காலராவிலும் செத்து மடித்து இருக்கின்றார்கள். பார்மா, இலங்கை மொரிஷியஸ் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு கூலியாகவோ வியாபாரம் செய்யவோ போய் அல்லல்ப்பட்டு இருக்கின்றனர். நமக்கு ஐந்து தலைமுறை முன் வாழ்ந்தவர் கதை, நமக்கு தெரியுமா. முன்னோரின் கதைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது இல்லை.
அத்தனை கதையையும் கரையில் கட்டிய கோட்டையை அலை வந்து அழிப்பது போல, நினைவுகளின் தடம் அழித்து சிரிக்கின்றது காலம். இப்போது நடக்கும் நம்கதை கூட ஒரு மண்கோட்டை தான் என புரிய தொடங்கும் போது எதுவும் கடந்து போகும் காலத்தின் கணக்கில் எதற்கு இந்த பரபரப்பு என மோனத்தில் முழ்குகின்றது என் மனம்.

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)