ஆடி திருவாதிரையன்
சிறு வயதில் இருந்தே சோழர்கள் எனக்கு ஆதர்சமானவர்கள். பொன்னியின் செல்வன் நாவல் தான் என் சோழ பித்துக்கு விதை போட்டதோ என்று யோசித்தால், இல்லை என்பதே பதில். இந்த சோழ பித்துக்கான விதை என் தந்தை போட்டது. சோழ வரலாற்றில் என் தந்தையின் மனம் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் முதலாம் இராஜ இராஜ சோழனின் தமக்கையும் சோழர்களின் ஒப்புயர்வற்ற மாதரசியுமான குந்தவை பிராட்டி. அந்தப்புர பதுமைகளாக வலம்வந்த இளவரசிகள் மத்தியில், தம் புத்தி கூர்மையினால், தற்போதைய அரசு மருத்துவமனைகள் போல், இலவச சிகிச்சை வழங்கும் ஆதுல சாலைகளை சோழ மண்டலம் எங்கும் தமக்கு கிடைத்த சொத்துக்களை கொண்டு ஸ்தாபித்த அந்த மாதரசியின் அறிவாற்றலையும் , ஈகை குணத்தையும் எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டு இருப்பார் என் தந்தை. சோழ வரலாற்றில் என் தந்தையின் மனங்கவர்ந்த இரண்டாவது நபர் இராஜேந்திர சோழன். வடக்கே கங்கை வரையிலும் கீழ்திசை நாடுகளில் பெரும்பாலான நாடுகளை ஒரு தமிழ் மன்னனாக கைப்பற்றிய இராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் வெற்றிகள் பற்றிய பெருமித உணர்வு என் தந்தையிடம் எப்போதும் மிளிரும். ஒரு மன்னன் நாடு பிடிப்பது பெரிய விஷயமா? இதில் விதந்தோந்த எ...