ஆடி திருவாதிரையன்

சிறு வயதில் இருந்தே சோழர்கள் எனக்கு ஆதர்சமானவர்கள். பொன்னியின் செல்வன் நாவல் தான் என் சோழ பித்துக்கு விதை போட்டதோ என்று யோசித்தால், இல்லை என்பதே பதில். இந்த சோழ பித்துக்கான விதை என் தந்தை போட்டது.
சோழ வரலாற்றில் என் தந்தையின் மனம் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் முதலாம் இராஜ இராஜ சோழனின் தமக்கையும் சோழர்களின் ஒப்புயர்வற்ற மாதரசியுமான குந்தவை பிராட்டி.
அந்தப்புர பதுமைகளாக வலம்வந்த இளவரசிகள் மத்தியில், தம் புத்தி கூர்மையினால், தற்போதைய அரசு மருத்துவமனைகள் போல், இலவச சிகிச்சை வழங்கும் ஆதுல சாலைகளை சோழ மண்டலம் எங்கும் தமக்கு கிடைத்த சொத்துக்களை கொண்டு ஸ்தாபித்த அந்த மாதரசியின் அறிவாற்றலையும் , ஈகை குணத்தையும் எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டு இருப்பார் என் தந்தை.
சோழ வரலாற்றில் என் தந்தையின்  மனங்கவர்ந்த இரண்டாவது நபர் இராஜேந்திர சோழன். வடக்கே கங்கை வரையிலும் கீழ்திசை நாடுகளில் பெரும்பாலான நாடுகளை ஒரு தமிழ் மன்னனாக கைப்பற்றிய  இராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் வெற்றிகள் பற்றிய பெருமித உணர்வு என் தந்தையிடம் எப்போதும் மிளிரும்.
ஒரு மன்னன் நாடு பிடிப்பது பெரிய விஷயமா? இதில் விதந்தோந்த என்ன இருக்கின்றது என்று தோன்றலாம். இராஜேந்திரனின் படையெடுப்புகள் வெறும் நாடு பிடிக்கும் முயற்சிகள் இல்லை. சோழ நாகரிகத்தையும் சோழ பொருளாதாரத்தையும்  உச்சியில் நிறுத்த ஒரு மன்னன் மேற்கொண்ட பெருமுயற்சி. ராஜேந்திர சோழன் மேற்கொண்ட கடற்போர்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அவ்வளவு விஷயம் அதில் உள்ளது.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நிலத்தில் சீனாவில் இருந்து இமயம் வழியாக மேற்கை இனைக்கும் பட்டு வர்த்தக பாதையை போன்ற,  கடல்வழி பட்டு வர்த்தக பாதையில் (maritime silk route) சோழர் ஆதிக்கத்தை நிறுவுவதே, இராஜேந்திர சோழனின் கீழ்திசை படையெடுப்புகளின்  நோக்கம்.
ஏன் கடல்வழி பட்டு வர்த்தக பாதையில் சோழர் ஆதிக்கம் வேண்டும் என்று ராஜேந்திர சோழன் விரும்பினார்? சோழ வணிக குழுக்கள் பாதுகாப்பாக கீழ்திசை வாணிபம் மேற்கொள்ள சோழ சேனை கடல்வழி பட்டு வர்த்தக பாதையில் ஆதிக்கம் செலுத்த விரும்பியது. சோழ அரசியலை கூர்ந்து கவனித்தால், வேளாண்மைக்கும் வணிகத்திற்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது புலனாகும். விளைச்சல் பொருட்களை வர்த்தக செய்து, உலக முழுவதும் உள்ள புதுமை பொருட்களை சோழநாட்டில் இறக்குமதி செய்து, நாகரிக வளர்ச்சியின் தூண்டுக்கோலாக இருக்கும் வணிக குழுக்களின் பாதுக்காப்பான கீழ்திசை வாணிப்பத்தை உத்தேசித்தே ராஜேந்திரன் சோழனின் கீழ்திசை படையெடுப்பு நடந்தது.
அந்த வாணிபத்தால் அந்நிய செலவாணி அதிகரிக்கும் போது, அந்த பொருளாதாரத்தை உள்நாட்டை நோக்கி திருப்பிவிடவே பெரும் கலை கோவில்கள் உருவாக்கப்பட்டன. அந்த வழியில் தந்தையை போலவே தனயனும், கங்கை கொண்ட சோழபுரம் கண்டார். தந்தையை பிள்ளை மீறி நின்றிட கூடாது என்பதாலோ என்னவோ, தஞ்சை பெரிய கோவிலை விட கங்கை கொண்ட சோழ புரம் கோவில் விமானம் உயரம் குறைவு. ஆனால் கோஷ்டத்தில் உள்ள சிலைகள் தஞ்சையையும் மிஞ்சிய அழகு கொண்டவை.
இவ்வாறு போர் திறனும் கலைச் செறிவும் கொண்ட மாமன்னன், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாற்றில் ஒளிவிட்டு பிரகாசிக்கும் மாபெரும் சோழ நாகரிகத்திற்கு அடித்தளமாக இருந்து வாளின் முனையில், அமைதியை வழங்கி சோழர்கால பொற்கால அரசை கொடுத்த தமிழரின் பெருமை, இராஜேந்திர சோழரின் பிறந்த நாளாம் ஆடி திருவாதிரை இன்று.

இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் காணப்படும் கங்கைப்படையெடுப்பில் அவர் வென்ற நாடுகள்

1. சக்கரக்கோட்டம். இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரக்கூடா என்னும் நகரம்.  2.மதுரை மண்டலம். இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா,  3.நாமனைக்கோனை. இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி என்று யூகிக்கப்படுகிறது.  4.பஞ்சப்பள்ளி.ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் அருகே உள்ள பஞ்சப்பள்ளி.  5.மாசுனிதேசம். சட்டீஸ்கர் மாநிலப்பகுதியாக இருக்கலாம். 6. ஆதிநகர்.ஒடிசா மாநிலத்தின் கான்ஜம் மாவட்டப்பகுதி. 7.ஒட்டவிஷயம்.இன்றை ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி.  8.கோசலைநாடு. இன்றைய ஜார்கண்ட் மாநிலம்.  9.தண்டபுத்தி. மேற்குவங்காளத்தின் மேற்குப்பகுதி. 10. தக்கணலாடம். இன்றைய பீகாரின் ஒரு பகுதி. 11.வங்காளதேசம்.இன்றைய அஸ்ஸாம் , பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதி. மேற்கண்ட நாடுகளை இராஜேந்திரன் தலமையிலான சோழர் படை வென்றுள்ளது இப்படையெடுப்பில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக அந்தந்த நாட்டின் கலைச் செல்வங்களை வெற்றிச் சின்னமாக தமிழகம் கொண்டுவந்தனர். அந்நாடுகளில் சோழர்களது சாசனங்களும் பொறிக்கப்பட்டன.
இராஜேந்திரனின் மெய்கீர்த்தி சாசனத்தில், கங்கைநீரை எடுத்த இடம்பற்றி கூறுகையில்.."நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்  என்று வரும்.
உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி செல்லும் பாதையில் கங்கா நானியில் ரிஷி குண்ட் என்று அழைக்கப்படும் இடத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது. எறிபுனல் கங்கை என்று கங்கையின் வெந்நீர் ஊற்றுகளை குறிப்பிடுக்கின்றது மேற்படி கல்வெட்டு.பலநாடுகளை கைப்பற்றினாலும் அந்த நாடுகளை அந்தந்த மன்னர்களிடம் திரும்ப கொடுத்தது தான் இராஜேந்திரரின் பெருந்தன்மை.
இராஜேந்திரர் என்றாலே போர் தானா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையா என்றால், இராஜேந்திர சோழர் ஆட்சியின் நீர் மேலாண்மையை காட்ட கூடிய பல கல்வெட்டுகள் உண்டு.
கடந்த தலைமுறையின் வரலாறு அடுத்த தலைமுறைக்கு பாடம். இராஜேந்திர சோழரின் வரலாற்றில் இருந்து நாம் அறிய வேண்டிய பாடம் பல உண்டு. ஒப்புமை இல்லா அந்த மாமன்னனின் புகழ் தமிழ் உள்ள வரை இப்புவியில் நிலைத்திருக்கும்.
வாழ்க சோழம்!
ஆடி_திருவாதிரை_முதலாம் ராஜேந்திர_சோழன்_பிறந்த நாள்.

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)