ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி2)
ரவிதாசன் யார் என்று அறிந்து கொள்வதற்கு, அருண்மொழி என்னும் இயற்பெயர் கொண்ட ராஜ ராஜ சோழரின் முதல் யுத்தம் பற்றி அறிவது அவசியம். இராஜராஜனின் மெய்கீர்த்தியின் படி அவரது முதல் போர் நிகழ்வு காந்தளூர் சாலை கலம் மறுத்த நிகழ்வு ஆகும். ஒரு நுற்றாண்டு போர் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும், காந்தளூர் சாலைப் போர் பற்றி இப்போது காண்போம். காந்தளூர்ச் சாலைப் போர், சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மேற்கொண்ட மிக முக்கியமான போர். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தப் போர், முதலாம் ராஜராஜனுக்கும் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மனுக்கும் இடையில் நடந்தது. காந்தளூர்ச் சாலை காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம் என ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இந்த இடம் முற்காலத்தில் ஒரு கல்விக்கூடமாக இருந்தது. இங்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் போர்த் திறன் மட்டுமல்லாது புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்கியுள்ளனர். போர்க் கலைகள் மட்டுமின்றி போர் நுட்பங்களும், வியூகங்களும் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. தனுர்வேதம் எனப்படும் வில்...