ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?


தமிழக வரலாற்றில் ஒரு அழியாத கறையை அளித்துச் சென்றுவிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலன் கொலை. தமிழக வரலாற்றில் அதற்கு முன் முற்காலச் சோழர்களில் கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னியும் கொலை செய்யப்பட்டதாக சங்க காலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆதித்த கரிகாலன் கொலையைப் போன்ற நிகழ்வாக அது அமையவில்லை. இந்த நிகழ்வு இத்துணை பிரபலமானதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று கூறலாம்.

ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்.

ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம்போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன்தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும்பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன்இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.[1]

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழிஅரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

என்று தெரிவிக்கின்றன.

உடையார்குடிக் கல்வெட்டு


ஆதித்த கரிகாலன் கொலைபற்றிக் குறிப்பிடும் வரலாற்றுச் சாசனமான உடையார்குடி கல்வெட்டின் வாசகத்தினை இனி காண்போம்.


"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ

வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி

ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம்

பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ

ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையன்.

இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி

ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச

தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன்

அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன"

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கின் முக்கிய சான்றாவனங்கள், திருவாலங்காடு செப்பேடுகளும், உடையார்க்குடி கல்வெட்டும் ஆகும். 

வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள் சூழ்ந்தது...’
என்று திருவாலங்காட்டு செப்பேடுகளில் ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. புருவத்தை உயர்த்துவதும் இதுதான். ஏனெனில் இளவரசர்களுக்கு எல்லாம் சோழ நாட்டின்மீது ஆசை இருக்கும்போது ஆதித்த கரிகாலனுக்கு மட்டும் வானுலகம் மீது எப்படி ஆசை இருந்திருக்க முடியும்?!

அடுத்து, இந்த படுகொலை ரவிதாஸன் என்பவரின் தலைமையில் நடைபெற்றது என்கிறது கல்வெட்டு ஆதாரங்கள். இந்த ரவிதாஸனை , பஞ்சவன் மாராயன் என கல்வெட்டு குறிப்பிடுவதால், பஞ்சவன் என்பது பாண்டிய  நாடு என பொருள் கொண்டு, அந்நாட்டின் ஆபத்துதவிகளில் ஒருவராக அமரர் கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வடிவமைத்திருக்கிறார்.
உண்மையில் ரவிதாஸன் யார்?

உடையார் கோயில் கல்வெட்டில் (முதல் யாத்திரை) ஆதித்த கரிகாலனைக் கொன்றதைப் பற்றிக் குறிப்பிடுகையில் -
‘துரோகிகளான ரவிதாஸனாகிய பஞ்சவன் பிரும்மாதிராயன், அவன் உடன்பிறந்தோன் சோமன் சாம்பவன்...’ என செதுக்கப்பட்டுள்ளது. இதை அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு, அந்த நாட்டைச் சேர்ந்தவன்தான் துரோகம் செய்ய முடியும். அண்டை நாட்டுக்காரன் பகைவன் அல்லது விரோதிதான். இது கல்வெட்டை செதுக்கியிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். அறிந்தே  துரோகம் என குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் பஞ்சவன் என்ற பட்டம் சோழ அரச குடும்பத்தினர் ஏற்பது தான். இராஜேந்திரனின் பட்ட பெயரே பஞ்சவன் மாராயர் தான். அப்படியானால் இரவிதாசன் சோழ அரச குடும்பத்தை  சேர்ந்தவரா? இருக்க முடியாது. பஞ்சவன் என்னும் சொல்லோடு வரு பிரம்மராயர் என்னும் பட்டம் பிராமண அமைச்சர்களுக்குக் கொடுப்பது. அப்படியானால் ரவிதாசன் யார்? அவனுக்கும் ஆதித்தனுக்கும் என்ன விரோதம்? 

     ( தொடரும்)

1 நீலக்கண்ட சாஸ்திரியின் சோழர்கள் நூல்

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

அப்பம் வடை தயிர்சாதம்