ஜோகிமாரா
அது கிறிஸ்து பிறப்பதற்கும், மூன்று நூற்றாண்டுகள் முற்பட்ட காலம். அடர்ந்த வனப்பகுதியான தண்டகரண்யம் ( தற்போதைய சட்டிஸ்கரில் உள்ள வனம்), சலசலத்து பெய்யும் பருவ கால மழையில், நனைந்து கொண்டு இருந்தது. வனத்தின் மத்தியில் குகைகள் வரிசையாக கைகோர்த்து நின்றிருந்தன. தண்டகரண்யத்தின் , அந்த பகுதிக்கு ராமகிரி என்று பெயர். மேகங்கள் அந்த மலை முகடை ஆர தழுவி சென்றன. முன்னர் சொன்ன குகை கூட்டத்தின் வாயிலில் கவிஞர் போல் தோற்றம் கொண்ட ஒருவர், ஓலைகளில் ஏதோ எழுதி கொண்டு இருந்தார். இடையில் மலை முகட்டை உரசி செல்லும் மேகங்களிடம் வாய் விட்டு ஏதோ பேசிக் கொண்டும் இருந்தார். சத்தம் போடாமல் பின்னால் வந்து நின்றாள் சுதணுகா. அந்த ராமகிரி மலை பகுதியில் குடைந்து உருவாக்கப்பட்ட ஜோகிமாரா ஆடல்அரங்கில் நடனமாடும் மலை கிராம பெண். விண்ணில் உள்ள கந்தர்வ கன்னி தான் மண்ணில் வந்துவிட்டாளோ என எண்ண தோன்றும் யவ்வானமும் அழகும் பொருந்தியவள்.
“என்ன இன்றும் மேகத்துடன் தூது செல்ல பேச்சு வார்த்தையா? கவிராஜரே?”
“ஆம் பெண்ணே. என் காதலியிடம் மேகத்தை தூது போக சொல்லி வழி சொல்லி கொண்டு இருக்கின்றேன்”
“ அப்படியா ? எங்கே இருக்கின்றாள் உம் காதலி?”
“ வடக்கே வெகு தூரத்தில் இமய மலைத் தொடரில்.”
“ஓஹோ அந்த தேசத்தின் பெயர் என்ன?”
“ காஷ்மீரம்”
“மிகவும் குளிர் பிரதேசமோ??”
“உயிரை உருக்கும் குளிர் இருக்கும். ஆனாலும் அந்த கைலாச மலையும் அதன் அடிவாரத்தில் உள்ள மனோசரவர் நதியும் , நட்சத்திரங்கள் கொட்டிய அதன் இரவும் வார்த்தையில் விவரிக்க முடியாதது சுதணுகா. “
“நீங்கள் சொல்லும் போதே அங்கு செல்ல துடிக்கின்றது மனது. சொர்க்கம் போலும் உள்ள அந்த பூமியை ஏன் நீங்கினியிர்கள் கவிராஜரே?”
“பரந்து விரிந்த இந்த உலகத்தை காண தெற்கு நோக்கி புறப்பட்டு விட்டேன் சுதணுகா. அங்கம் வங்கம் என பல நாடுகள் கடந்து, இந்த தண்டகரண்யம் வந்தடைந்தேன். இங்கும் அதிக நாள் தங்கும் உத்தேசம் இல்லை. இன்னும் தெற்கே நகர்ந்து பாண்டிய நாடும், அதற்கும் தெற்கே நகர்ந்து மணிபல்லவ தீவு (இலங்கை) செல்ல போகின்றேன்.”
“தெற்கே ராவணாதிகள் தேசம் அல்லவா? அங்கே உள்ள மக்கள் முரடர்கள் அல்லவா?”
“அப்படி இல்லை சுதனுகா. அவர்கள் மிகவும் பண்பட்டவர்கள். பல்கலை வல்லுனர்கள். உலகம் துவந்தமயமானது ஸ்தனுகா. இங்கே எப்போதும் போராட்டம் தான். வலதும் , இடதும் இணைவதே இல்லை. இரு இன குழுக்களின் மோதல் ஒருவரை ஏற்றியும் மற்றவரை தாழ்த்தியும் கருத்தாக்கங்கள் உருவாக்குகின்றது. ஆனால் இந்த உலகில் தாழ்ச்சியுற்றது என்று எதுவுமே இல்லை ஸ்தணுகா. எல்லாமே பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பு”
“அதனால் தான் மேகத்துக்கும் உயிர் கொடுத்து கவி புனைகீன்றீர்கள் போலும் கவிராயரே?”
சுதனுகாவின் கேள்விக்கு புன்னகை முறுவலால், பதிலளித்த காளிதாசர், அவளிடம் “என்னுடன் வாய் பந்தல் போட்டு நின்று கொண்டு இருக்கிறாயே, உன் நாட்டிய நிகழ்ச்சிக்கு தயாராக வேண்டாமா ?” என்று கேட்டார்.
“அதற்கு அவசியம் இல்லை கவிராஜரே. மழை காலம் என்பதால், ஜோகி மாரா குகை பகுதியிலும், ஆடல் மகளிர் தங்கும் சீதாம்மா குகையிலும் ஓவியம் வரைய சொல்லி, ஓவியர் தேவதத்தனுக்கு அரசர் அக்னிமித்தரன் உத்தரவு போட்டு விட்டார். ஓவியம் வரைய வந்த தேவ தத்தன் என்னை கண்டு காதல் மொழிகள் பேச ஆரம்பித்து விட்டான். அவனிடம் இருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது”
“ஏன் தேவதத்தன் ரூப அழகிற்கு பெயர் போனவன் ஆயிற்றே. உனக்கு அவனை பிடிக்கவில்லையா?”
“என்னை பொறுத்தவரை காதல் என்பது மனதில் தோன்றுவது கவிராஜரே, விழிகளுக்கு அங்கு இடம் இல்லை.”
“ அருமையாக சொன்னாய். ஆம் இப்போது சீத்தம்மா குகையில் ஆடல் மகளிர் ஒப்பனை செய்வது இல்லையா?
“இல்லை ஓவிய பணியின் காரணமாக தேவதத்தன் மட்டும் அங்கு உள்ளார். நாங்கள் எங்கள வீடுகளில் இருக்கின்றோம்.. இந்த குகையை விட சீத்தம்மா குகை தங்குவதற்கு உகந்ததாக இருக்கும். நீங்கள் வேண்டுமானால் அங்கே நகர்ந்து விடுங்கள் கவிறாஜரே.”
“நானும் அதை தான் யோசித்து கொண்டு இருக்கின்றேன்”
“சரி கவிராஜரே நான் சென்று தண்ணீர் சேர்த்தி வரவேண்டும். விடைப் பெற்று கொள்கிறேன்.”
“நல்லது. சென்று வா.”
அடர்ந்த அந்த வனத்தில் ஒடும் சிற்றோடையை நோக்கி அன்னம் என அவள் நடந்து சென்று கொண்டு இருந்த போது, தூரத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டது. புதர்களை விலக்கி சென்று பார்த்த போது, ஓடையின் கரையில் அரவம் தீண்டி கிடந்தார் முனிவர் போலும் ஜடா முடி தரித்த ஒருவர். பர பர வென செயல்பட்டாள் சுதனுகா . தன் சீலையின் ஒரு பகுதியை கிழித்து, அரவம் தீண்டிய அவர் கால் பகுதியின் மேல் பகுதியின் மேல் இறுக்கி கட்டினாள். பக்கத்தில் உள்ள புதரில் தேடி சில பச்சிலைகள் பறித்து கடிபட்ட இடத்தில் விட்டு, சில துளிகளை வாயிலும் விட்டாள். மெல்ல கண் திறந்து பார்த்தார் அவர்.
“அம்மா நீ யார். பாம்பு கடித்து மயங்கியது வரை தான் எனக்கு நினைவு உள்ளது. நீ தான் எனக்கு சிருக்ஷை செய்ததா? உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என தெரியவில்லையே.”
“ஒன்றும் வேண்டாம் அய்யா. மனிதருக்கு சக மனிதர் உதவுவதற்கு கைமாறு எதற்கு? இந்த கானகத்தில் சில சமயம் புதை குழியில் மான்கள் மாட்டி கொள்வது உண்டு. அப்படி மாட்டிக் கொண்ட மானை சக மான்கள் எப்படியாவது போராடி வெளியே இழுத்து தள்ளிவிடும். அவை என்ன பிரதிபலன் பார்த்தா உதவுகிறது? மனிதன் மட்டுமே சுயநல கணக்கொடு சுற்றி திரிகிறான்.”
“தெளிவாக பேசும் நீ என் கண்களுக்கு அந்த சரஸ்வதி தேவி போலவே தெரிகின்றாய். உன் பெயர் என்னம்மா?”
“சுதணுகா, ஆடல் நங்கை”
“அற்புதம். ஆடல் சாஸ்திரம் தெரிந்ததால் தான் உனக்கு இயல்பாகவே இயற்கையை கவனிக்கும் நுண்ணுணர்வு வாய்த்து இருக்கின்றது. என் பெயர் பரதன், ஆடல் சாஸ்திரம் பற்றி கந்தர்வ வேதம் புனைந்து கொண்டுள்ளேன்”
அப்போது சுதனுகா அவர் காலடியில் கிடந்த சுவடிக் கட்டை எடுத்து அவர் கையில் கொடுத்தாள்.
“இதை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் போல் உள்ளது “
“ஆம் தாயே. இது தென்னக ஆடல் கலைகளின் பொக்கிஷம். சிலப்பதிகாரம் என்பது இதன் பெயர். தெற்கே 11 வகையான ஆடல் வகைகள் உண்டு தெரியுமா?”
“ தெரியாது முனிவரே. நாங்கள் ஏதோ மல்லிகைப்பூ மாலை சூடி கை கோர்த்து ஆடுவோம் எங்கள் ஆட்டம் சந்தோஷ குதியலாக இருக்குமே தவிர வரைபடுத்த பட்ட நடனம் இல்லை.”
“தென்னவர்கள் கலையின் உச்சம் தொட்டவர்கள். அவர்கள் ஆடல் கலையை கூத்து என்று அழைக்கின்றார்கள். அவர்களின் கூத்து கலையுடன் யோக முத்திரைகளை கலந்து, பரத சாஸ்திரம் என்ற ஒரு சாஸ்திரத்தை வடிவமைத்து கொண்டு உள்ளேன். என் சாஸ்திரத்தை நிஜத்தில் கொண்டு வர ஆடல் கலை தெரிந்த பெண் வேண்டும். அதற்காக தான் இங்கே ஆடல் நங்கைகளை தேடி சீத்தாம்மா குகைக்கு வந்தேன். வழியிலேயே உன்னை கண்டேன். உன்னை போன்ற சாஸ்திர ஞானம் கொண்ட பெண் எனது சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பாள். உன்னால் எனக்கு உதவ முடியுமா?”
“ கண்டிப்பாக முனிவரே. உங்கள் வசிப்பிடம் ?”
“ ராமகிரி மலைக்கு பின்னால் ஒரு குன்று உள்ளதே அதன் உச்சியில் உள்ள கைலாச நாதர் கோவிலில் தான் நான் தங்கி உள்ளேன்.”
“ சரி நாளை உங்கள் வசிப்பிடத்தில் வந்து சந்திக்கிறேன். இப்போது விடைபெற்று கொள்கின்றேன்”. என விடைபெற்று தன் இருப்பிடம் சேர்ந்தாள் சுதனுகா.
தண்டகாரண்யத்தின் அந்த இரவு மிகவும் குளிராக இருந்தது. சீத்தம்மா குகையில் காளிதாசரும், தேவதத்தனும் மட்டும் இருந்தனர். விற்குகளை குவித்து தனல் போட்டு இருந்தார்கள் அடுப்பில் எள்ளும் கோதுமையும் வெண்ணையும் கலந்த ரொட்டிகள் வெந்து கொண்டு இருந்தது. தொட்டு கொள்ள மாலையிலேயே ரேணுகா என்ற ஆடல் நங்கை, சிறுப்பருப்பும் மிளகும் கலந்த கூட்டை கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்று இருந்தாள்.அது பவுத்தம் பரவி கொண்டு இருந்த கால கட்டம். மக்கள் மெல்ல பவுத்தம் பால் ஈர்க்கப்பட்டு, மரகறி உணவுக்கு மாறி கொண்டு இருந்தார்கள். பவுத்தம் சாராதவர்களும் மெல்ல மரகறி உணவுக்கு மாறி கொண்டு இருந்தார்கள். தேவதத்தனுக்கு, இந்த குளிருக்கு கோழி கறியும் திராட்சை பிழியும் சாப்பிட வேண்டும் போல் இருந்தது ஆனால் கவிஞரோ சைவ பட்சினி. பிழியை குடித்து விட்டு போதையில் உளரினால், சுதனுகா திரும்பி கூட பார்க்க மாட்டாள். இப்போது மட்டும் என்ன வாழ்கிறது. அதிரூப ஓவியன் என புகழப்படும் தன்னை அவள் கடைக்கண்ணால் கூட காண விருப்பவில்லை. மற்ற ஆடல் நங்கைகள் வலிய வந்து அவனிடம் பேசுகின்றார்கள். ஆனால் சுதனுகா தன்னை பொருட்டாக மதிப்பது இல்லை. தன் இறங்கி போவதால், அலட்சியப்படுத்தி விளையாட்டு கான்பிகின்றாளோ என்னவோ? சிந்தனையின் ஓட்டத்தில் ரொட்டியை கருக விட்டான். கவிஞர் அதை கவனித்து அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தார்.
“என்ன சுதனுகா நினைவா?”
ஆம் கவிஞரே! கனவிலும் அவள் நினைவு தான். ஆனால் அவளுக்கு தான் என்னை காண்டால் பிடிப்பதே இல்லை. கொஞ்சம் ராங்கி பிடித்தவள்”
“அப்படி சொல்லாதே. பனித்துளி போல தூய எண்ணம் கொண்டவள் சுதனுகா. உன்னை பற்றி பேச்சு வந்த போது என்ன சொன்னாள் தெரியுமா?”
“ என்ன சொன்னாள்?”
“காதல் என்பது இதயத்தில் தோன்றுவது. விழிகளுக்கு அங்கு வேலை இல்லை என்றாள். அவள் உள்ளத்தை கொள்ளையிட உன் அழகை காட்டி மயக்க முடியாது. அவளுக்கு பிடித்த பண்பாளனாக நீ மாற வேண்டும்.”
“அதற்கு என்ன செய்வது. ?”
“அவளுக்கு பிடித்தது ஆடல் கலை தான். அது சம்பந்தமாக ஏதாவது செய்.”
“ செய்கின்றேன். இந்த குகை முழுவதும் சுதனுகாவின் ஆடல் ஓவியங்களாக நிறைகின்றேன். அதோடு இதில் அவளை பற்றிய கவிதையும் பொறிக்க நினைக்கின்றேன். ஒரு கவிதை எழுதி தருங்களேன்.”
“காதல் உணர்வுகளை கடன் வாங்க முடியாது அப்பா. உன் காதலை நீயே உன் வார்த்தைகளில் வடி”
“ ஹ்ம்ம் செய்கிறேன். மல்லிகைப்பூ மாலை சூடி ஆட வாருங்கள் தோழியரே…” அவன் தொடர்ந்து தன் காதல் கவிதைகளை சுவற்றில் செதுக்க தொடங்கினான்.
காலம் வேகமாக ஓடியது. மழை காலம் முடிந்து வேனில் காலம் ஆரம்பித்து இருந்தது.அவன் காதலின் வேகம், அந்த குகை முழுவதும் ஓவியங்களால் நிறைத்தது. மற்றொரு பக்கம் சுதனுகா பரத முனிவரிடம் 11 வகை கூத்து கலையயும், 108 கரணம் எனப்படும் அடவுகளையும் கற்று தேர்ந்தாள். ஏற்கனவே நடனம் ஆடி வில்லாக வளைந்த அவள் உடல் வாகு, குறுகிய காலத்தில் 108 அடவுகளை கற்று கொள்ள உதவியது. இந்த நாட்களில் சிவனின் தாண்டவமாக சொல்லப்படும் அடைவுகளை கற்று கொள்ள, முதலில் சிவனின் கதைகளை கேட்டதால், சிவன் என்ற அந்த பௌருஷம் மீது சுதனுகாவிற்கு காதல் அரும்ப தொடங்கி விட்டது. (ஆம் தெய்வத்தின் மீது காதல் கொண்ட முதல் இந்திய பெண் கல்வெட்டு படி சுதனுகா தான்) அன்று பாடத்தின் கடைசி வகுப்பு. 108 கரணங்களில் கடைசி கரணம். கங்காவதரணம். கங்கை சிவனின் ஜடா முடியில் இருந்து பாய்ந்து வருவதை காட்சிப்படுத்தும் அடவு. இந்த அடவை பயிற்சி செய்யும் போது, ஒரு கணம், சிவனின் மேனியில் தான் கங்கையாக பொங்கி ஓடி வருவதை போல ஒரு கற்பனை அவள் உள்ளத்தில் பரவ வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது. . சட்டென ஆட்டத்தை நிறுத்தி விட்டாள். பரத முனிவருக்கும் அவளுடைய நிலை விளங்கியது ஆனால் யாரோ ஒரு ஆண் மகனின் மேல் காதல் கொண்டு இருப்பாள் என எண்ணினார். சிவனின் மேல் சுதனுகாவிற்கு ஏற்பட்ட தெய்வீக காதல் பற்றி அவர் அறியவில்லை.
“உன் மனம் சஞ்சலபட்டு உள்ளது போலும் பெண்ணே. வசந்த பஞ்சமி விழாவும் நெருங்கி வருகின்றது. மன்னர் வருகின்றார் என கேள்விப்பட்டேன். நீயும் அதற்கு தயாராக வேண்டும் அல்லவா? நீ இனி அந்த வேலைகளை பார். வசந்த பஞ்சமி முடிந்த பிறகு கரண சாஸ்திரத்தை தொடருவோம். நானும் இதுவரை செயல் படுத்திய கரண விளங்கங்களை எழுத்தில் வடிக்க வேண்டும் “ என்றார். சுதணுகா விடைபெற்று தன் இருப்பிடம் சேர்ந்தாள்.
• வசந்த பஞ்சமி விழாவும் வந்தது. உஜ்ஜயினி மன்னர் அக்னிமித்திரன் வந்திருந்தார். நூற்று கணக்கான மக்கள் முன்னிலையில் சுதனுகா நடனம் ஆடினாள். 108 கரண முத்திரைகள் சேர்த்து அவள் ஆடிய நடனம் புதுமையாக இருந்தது. மன்னர் அவள் நடத்தில் மயங்கி போயிருந்தார். இப்படிப்பட்ட ஆடல் அரசிக்கு அவள் விரும்பிய பரிசில் கொடுக்க விரும்பினார். அவளுடைய விருப்பமான பரிசை அவையரிய கேட்க சொன்னார். அவள் தான் ராமகிரி மலைக்கு அருகில் உள்ள கைலாச நாதரை மணந்து தேவதாசியாக ஆக விரும்புவதாக சொன்ன போது, கூட்டம் அதிர்ந்தது. அவள் பெற்றோர் கதறினர். உடன் பிறந்த ஒரே தம்பி அவள் சொல்வது புரியாமல், குழம்பி நின்றான்.
தேவத்ததன்அதிர்ந்தான் . மன்னர் சுதனுகாவை பார்த்து அலறினார். “உனக்கு என்ன பைத்தியமா? கடவுளை நீ எப்படி மணக்க முடியும். ஒரு மனித பெண் கடவுளை மணக்க முடியாது”
“என் முடியாது கைலாச தேவரின் தேவியாக, தாசியாக மாற அவரின் தாலியாக பொட்டு கட்டி கொள்ள போகின்றேன் . இனி என் வீடு கைலாச நாதர் கோவில் தான். அதற்கு தயவு செய்து அனுமதி கொடுங்கள். மன்னர் அவையறிய பரிசை கேட்க சொல்லி விட்டு இப்படி மறுக்கலாமா. அரசே ! என் உள்ளத்தை அந்த சிவனிடம் கொடுத்து விட்டேன். இனி வேறு ஒரு ஆடவனை என்னால் மனதாலும் நினைக்க முடியாது. தயவு செய்து சிவனை மணக்க அனுமதி தாருங்கள்.”
மன்னனுக்கு மறுக்க வழியில்லை . சுதனுகாவும் தன் முடிவில் இருந்து மாறவில்லை. அடுத்து வந்த பௌர்ணமியில் சூல லட்சனை பொருத்தி தேவ தாஸியாக மாறி, கைலாச நாதர் கோவிலிலேயே தங்கி விட்டாள் சுதனுகா. தேவ தத்தன் அவளுக்காக பார்த்து பார்த்து ஓவியம் வரைந்த குகைக்குள் வந்து பார்த்தான் அந்த குகையில் கீழ்கண்டவாறு செதுக்கினான்.”
தேவதாசியான சுதானுகாவின் நடன அரங்கேற்றத்தை ஒட்டி, ஓவியக்கலை நிபுணனான தேவதத்தன் இந்த ஓவியங்களை வரைந்தான் என செதுக்கினான்.”
சுதனுகா என செதுக்கப் பட்ட அவள் பெயரை வருடிய போது அவன் கண்களின் கண்ணீர் குகையின் தரையில் விழுந்து , அப்போது வெளியில் பெய்து கொண்டு இருந்த கோடை மழை சாரலில் கலந்து தெரிந்தது. சற்று தொலைவில் கைலாச நாதர் கோவிலில் பணி செய்து கொண்டு இருந்த சுதனுகவின் கன்னத்திலும் மழை சாரால் தெறித்தது. இது மழை விடும் தூது போலும். சுதனுகாவின் மனம் இறைவன் மேல் பிரேமை கொண்டது காதலில் விசித்திர கணக்கு தான். ஆனால் பாவம் அந்த பேதை பெண், தன்னுடைய இந்த முடிவு பரதகண்டத்கில் வரும் நூற்றாண்டுகளில் பெண்களை பெரும் அளவில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்க போகின்றது என அறியவில்லை. பனி துளி போல் சுதனுகா மனதில் தூய்மையாக உண்டான தெய்வீக பிரேமம், மனிதர்களின் வக்கிரங்களால் அடுத்து வந்த நூற்றாண்டுகளில் பெண்களை சுரண்டும் சாக்கடை ஆனது. காமமும் காதலும் ஆடும் பரமபதத்தில் பெண்களே எப்போதும் கடிபடுகின்றார்கள் என்பதை அறியாத அந்த பேதை சிவனின் முன் கங்கையாக நர்த்தனம் ஆடிக் கொண்டு இருந்தாள். அவள் அறியாது தேவதத்தன், அவள் அடவுகளை ஓவியமாக வடித்து கொண்டே இருந்தான். சுதனுகாவும் தேவதத்தணும் கால வெளியில் மறைந்து போனார்கள். ஆனால் அவர்கள் பதிவு செய்த கரணங்கள் இன்றும் பரத நாட்டியமாக பாரதத்தின் அடையாளம் ஆகி போனது. பரத நாட்டியத்தின் கர்த்தாவாக பரத முனி அறியப்பட்டாலும், சுதனுகா, தேவதத்தன் பெயர்கள் அறியப்படவில்லை. அதனால் என்ன ஜோகி மாரா குகைகள் உள்ள வரை அவர்கள் பெயரை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது. தூய நெஞ்சங்கள் என்றும் வாழும். அவற்றுக்கு அழிவில்லை.
(முற்றும்)
குறிப்பு:-
முதல் தேவதாஸி
கல்வெட்டுகளில் பதியிலாராக அறியப்பெறும் தேவரடியார்களைப் பற்றிய முதல் கல்வெட்டு குறிப்பு ஜோகிமாராவில் உள்ள குகைக் கல்வெட்டில் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு மௌர்யரின் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காலம் பொயுமு மூன்றிலிருந்து இரண்டாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் ஸுதனுகா என்னும் தேவதாஸி குறிப்பிடப்பட்டுள்ளாள். அவளுடைய காதலைப் பற்றிய தகவலும் இடம்பெற்றுள்ளது.. இந்த குறிப்பை கொண்டு என் மனதில் தோன்றிய சிறுகதையே ஜோகிமாரா.
Comments
Post a Comment