ஐப்பசி சதய விழா

 இன்று‌ ஐப்பசி சதய விழா.. எனக்கு சிறுவயத்தில் இருந்தே சரித்திரம் மிகவும் பிடிக்கும். கடந்த தலைமுறையின் அனுபவம் வரும் தலைமுறைக்கு பாடம் என நம்புகின்றேன்.  சரித்திர பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்த மன்னர் ராஜராஜ சோழன் . நிர்வாகதிறனும் ஆளுமையும், பெருந்தன்மையும் இறை உணர்வும் இறை தேடலும் கொண்ட மன்னன் ராஜராஜர். ஆட்சி பீடம் ஏற சொந்த சகோதரர்களை பலி கொடுத்த  மன்னர்கள் சரித்திரத்தில் உண்டு. ஆனால் நாடு நகரம் மக்கள் அனைவரும் முடி சூட்டி கொள்ள வற்புறுத்தி இளமையில் ஆட்சி பீடத்தை கையில் கொடுத்தும், தன் ஒன்று விட்ட சித்தப்பாவிற்கு ஆட்சி மீது ஆசை என்பதால் விட்டு கொடுத்து அவர் காலத்திற்கு பின் 15 ஆண்டுகள் கழித்து தன் மத்திய வயதில் தான் சோழ அரசாட்சியை ஏற்றுக் கொண்டார் என திருவாலங்காடு செப்பெடுகள் கூறுகின்றன.
அடுத்து பழம்பெருமை பேசாமல் செயல்திறனை காட்டியது. முதலாம் ராஜராஜர் வரை சோழ மன்னர்கள் கல்வெட்டு சூரிய குல தோன்றல் என் அரம்பித்து மனுநீதி சோழன் சிபி சக்கரவர்த்தி, கரிகால் சோழன் என முற்கால சோழரின் பெருமை பேசி தான் ஆரம்பிக்கும் . அதில் முக்கால்வாசி புராண கதை கலந்து இருக்கும். ராஜ ராஜர் தான் பழம் பெருமை பேசி பயன் இல்லை நான் என் ஆட்சிகாலத்தில் என்ன செய்தேன் என்பதை மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறிக்க உத்தரவிட்டார். பின்வந்த சோழ மன்னர்களும் அந்த வழக்கத்தை கை கொன்டனர். இந்த மெய்கீர்த்திகளே சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு‌ ராஜராஜ சோழன் நடத்திய பெரும் போர்கள் பற்றிய பார்வையை தருகின்றன.
 ராஜராஜர் மெய்கீர்த்தி
"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."
ராஜராஜரின் ஆட்சிமுறை
சோழ தேச முழுவதும் நிலம் அளக்கப்பட்டு, நிலத்தின் தன்மைக்கு ஏற்ப புஞ்சை நிலமா, நஞ்சை நிலமா? என வகைப்படுத்தப்பட்டு நிலவரி விதிக்கப்பட்டது.அளவைக்கு பயன்படுத்திய கோலின் பெயர் உலகளந்தான் கோல். ராஜராஜருக்கு முன் இருந்த மன்னர்கள் எடுக்காத நடவடிக்கை இது. ராஜராஜர் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது.
கொடை கொடுத்துள்ளனர். 
அதிகாரிச்சி என்ற பெயருடன் அரசு அலுவலர்களாக இருந்தனர்.
சரித்திரத்தில் முதல் முறையாக  திருவையாறு அருகே பிரம்மதேயமாக கொடுக்கப்பட்ட நிலங்கள், அதில் உழைத்த மக்களுக்கு வேளான் வகை நிலமாக மாற்றி சாசனம் செய்து கொடுக்கப்பட்டது.  1000 ஆண்டுகளுக்கு பின் வந்த inam abolishment act க்கு அன்றே முன்னோட்டம் பார்த்தவர் ராஜராஜர். அது மட்டும் அல்ல சோழ மண்டலத்தில் 16 இடங்களில் ஆதுலர் சாலை என்னும் இலவச அரசு மருத்துவமனைகள், அரசு மானியத்துடன் இயங்கியது. இதற்கு வித்திட்டது ராஜராஜரின் அக்கா குந்தவை.
மன்னராக இருந்து பெரும் வெற்றி பெற்றாலும் ராஜ ராஜரிடம் இறை தேடல் அதிகம் இருந்தது. திருவிளையாடல் புராணம் பாண்டிய தேசத்தின் அடையாளம் என்றால், திருத்தொண்டர் புராணம் என்னும் நாயன்மார் கதை சோழ தேசத்தின் அடையாளமாக கொண்டார். தில்லை வாழ் அந்தனரிடம் இருந்து தேவார ஏடுகளை மீட்டது ராஜராஜர் பக்தி இலக்கியத்திற்கு செய்த பெரும் தொண்டு.நாயன்மாரில் அவர் மனம் கவர்ந்தவர் கண்ணப்பர். பெரிய கோவிலில் கண்ணப்பர் சரித்திரத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. விஸ்வமயமாக எங்கும் பிரமாண்டமாக நிறைந்து இருக்கும் இறைவனுக்கு ராஜராஜர்  பிரம்மாண்டமாக அளித்த கணிக்கை தான் பெரிய கோவில். அந்த கோவிலின் ஒவ்வொரு கல்லும் ராஜராஜரின் உள்மன தேடலை பிரதிபலிக்கும்.
பெரிய கோவிலுக்கு‌வந்த நன்கொடைகளை கல்வெட்டில் செதுக்க உத்தரவிட்ட கல்வெட்டில் ராஜராஜர், நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் என சொல்லிவிட்டு, கொடுத்தார் கொடுத்தனவும் என முடிகின்றார். சோழ தேசத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது. அதனால் பெண்கள் நிறைய தானம் கொடுத்து உள்ளனர். அது போலவே பெரிய கோவிலுக்கு ராஜராஜர், அவர் அக்கா குந்தவை அவர் மனைவிகள் கொடுத்த கொடையை கல்வெட்டில் வெட்ட சொல்லிவிட்டு இறுதியாக கொடுத்தார் கொடுத்தனவும் என பொதுமக்களில் பாகுபாடு இல்லாமல் , சிறிய தொகையோ சிறிய தொகையொ கொடையளித்தவர் பேரை பாகுபாடு இல்லாமல் கல்வெட்டில் பொறிக்க சொன்னார். மன்னருக்கு என்ன மரியாதையோ அதுதான் குடியானவனுக்கும். அந்த பெருந்தன்மை தான் இராஜராஜர்.
வடநாட்டு அசோகரை போல் தென்னாட்டில் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி அமைத்து, இறுதியில் இறை தேடலில் தன்னை கரைத்து கொண்ட ராஜராஜ பெரு வேந்தனை அவரது பிறந்தநாளில் கை கூப்பி வணங்குகின்றேன். சூரிய சந்திரர் இருக்கும் வரை தஞ்சை பெரிய கோவில் நிலைக்கும். பெரியகோவில் இருக்கும் வரை உம் புகழ் இந்த வண்டல் மண் காற்றோடு, இந்த மண்ணில்‌ பிறந்த மக்களின் மனங்களோடு என்றும் கலந்து இருக்கும். 
வாழ்க சோழம்!🙏🏻🙏🏻🙏🏻

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு