கிறுக்கல்

விவேக்கின் உடலுக்கு அவர் மகள் கொள்ளி வைத்துவிட்டு அழுத காட்சியை பார்த்த போது, நானும் 10 வருடங்கள் முன் அதே நிலையில் நின்றது நினைவுக்கு வந்தது. காயத்தை கீறி கீறி அதற்க்குள்ளே சுகம் கண்டு கிடாக்காதீர்கள், கடந்து வாருங்கள் என என் குரு பாலகுமாரன் சொல்வார். இது காயத்தை கீறி பார்ப்பதல்ல. என் வாழ்க்கையை ஓரு பார்வையாளராக திரும்பி பார்க்கிறேன்.  
சிறிய வயதில் இருந்தே புராண இதிகாசங்கள் அதிகம் படிப்பேன்.அதில் அரக்கர்கள் தவம் செய்யும் போது இறவா வரம் கேட்பார்கள். முனிவார்கள் மீண்டும் பிறவா நிலை கேட்பார்கள். எனக்கு சிறுவயதில் தோன்றும், இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது. இதை அனுபவிக்க தெரியாமல் இந்த முனிவர்கள் மீண்டும் பிறவா நிலை கேட்கின்றார்களே என்று தோன்றும். காரணம் என் வாழ்வு அவ்வளவு இனிமையானதாக கவலைகள் இல்லாத பட்டாம்பூச்சியின் வாழ்வாக இருந்தது. கேட்டது அனைத்தும் கிடைத்தது. கிடைத்தது, என் தந்தையின் உழைப்பினால் என்பது மனதில் பதியவில்லை. என்னை பொருத்தவரை வாழ்வு என்பது இன்ப ஓடம்.
ஆனால் வாழ்வின் கொடூரம் என் முகத்தில் அறைந்தது என் அப்பாவின் மரணத்தில் தான்.ஓரு பிணத்தை கண்டு துறவு பூண்டான் சித்தார்த்தன் என புத்த கதைகள் சொல்லும். வாழ்வின் நிலையாமையை எனக்கு முகத்தில் அறைந்து சொன்னது என் அப்பாவின் மரணம். ஆனால் அப்போதும் எனக்கு வாழ்வின் மீதான பிடித்தம் முற்றிலும் ஓழிந்துவிடவில்லை. அப்பாவை இழந்தாலும் வாழ்வில் ஓரு நிலையான இடத்தை பெற வேண்டும் என்ற வேகமும் தேடலும் என்னை வாழ்வை நோக்கி ஓடச் செய்தது. 
இப்போது வாழ்வின் மத்தியில் நிற்கின்றேன். என்னளவில் ஓரு saturation point க்கு வந்துவிட்டேன் என தோன்றுகிறது. எனக்கு வாழ்வை நோக்கி ஓட தோன்றவில்லை.காரணம் எவ்வளவு தான் ஓடினாலும் அந்த கவலை இல்லா பருவத்தை நான் அடையவே முடியாது என்று தோன்றுகிறது.
ஏன் அந்த முனிவர்கள் மீண்டும் பிறவா வரம் கேட்டார்கள் என எனக்கு புரிக்கின்றது. இந்த வாழ்க்கை ஓரு மாய நிலவு. கானல் நீர். நிலையாமை என்பது இதன் அடிப்படை. நிலையற்ற இந்த வாழ்க்கையில் பிடித்தம் கொள்வதை விட நிலையானதை பிடித்துக் கொள்ளலாம் என தோன்றியது. நிலையானது ஏது என்பதில் தான் தேடல் இருக்கின்றது. இறை நம்பிக்கையா? இறை என்னும் சொரூபத்தின் மேல் பக்திக் கொண்டால் அதுவும் பற்று அல்லவா. வாழ்வின் பற்று அறுத்து எதில் பற்று வைக்க? பற்று என்பதையே அறவே விடும் ஓரு நிலை வேண்டும். துக்கம் சந்தோஷம் கோபம் எல்லாம் கடந்த நிலை. செத்தாரை போல திரியும் ஓரு நிலை. அந்த நிலையில் உங்கள் வாழ்வு பிரபஞ்சத்தின் ஓரு அங்கம் ஆகிவிடும். நீங்களே ஓரு ஸ்தூல பொருள் ஆகிவிடும் போது இன்பம் என்ன துன்பம் என்ன? கருங்கல் என்ன கண்ணீர் வடிக்குமா? இந்த நிலை எல்லாருக்கும் கிடைக்காது. எல்லாராலும் முடியாது. அது ஓரு ஸ்திதி. உள்ளே கனிந்தால் தானே நடக்கும். கனிவதற்கும்  கர்மாவில் இடம் இருக்க வேண்டும்.
- குந்தவியின் கிறுக்கல்கள்.

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)