கண்ணன் என்னும் கருந்தெய்வம்
இன்று 07/12/2021 ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி பெருவிழாவில் கோதைப் பிராட்டியின் நாச்சியார் திருமொழியில் பதிமூன்றாம் பத்தாக வரும் கண்ணன் என்னும் கருத்தெய்வம் பாசுரம் அரையர் சேவையில் சேவிக்கப்படும் என்று படித்த பின் அந்த பாசுரத்தை எடுத்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. கண்ணன் மேல் கொண்ட காதல் பித்து தலைக்கேறிய நிலையில் கோதை அவளது செவிலி தாய்மாரை நோக்கி, என்னை பழிப்பு செய்யாமல், என் நோய் தீர, கண்ணன் உடுத்திய பீதக வண்ண ஆடையினால் எனக்கு விசிறி விட மாட்டிரோ? அவன் சூடிய திருத்தூழயை ( துளசி) என் கூந்தலில் சூட மாட்டிரோ? அவன் தரிந்த வனமாலையை என் மார்பில் சேருங்கள், அவன் வாய் அமுததை கொண்டு வந்து ஊட்டுங்கள்,அதுவும் முடியவில்லை என்றால் அவன் ஊதும் புல்லாங்குழலில் தெறிக்கும் அமுத துளிகளையாவது முகத்தில் பூசுங்கள், அவன் இருக்கும் இடம் அழைத்து சென்று கண்ணனோடு பினைத்து கட்டுங்கள் என்று கதறுகின்றாள். மேலோட்டமாக பார்த்தால் விரக தாபம் போல் தான் தோன்றும்.பித்து முற்றிய யோகநிலை அது. முதல் பத்திலேயே ஆண்டாள் தாயார் தன் காதல் மானிடருக்கு உரித்தானது இல்லை என அறிவித்து விடுகின்றாள்.
நாச்சியாரின் கண்ணன் என்னும் கருந்தெய்வம் பாசுரத்தை மனதின் உள்ளே உருப்போட்டுக் கொண்டு ஜன்னல் வழியே பார்க்க ஒரு கருமேகம் கடந்து போக மெல்ல மழைத்தூறல் தொடங்கியது. கண்ணன் ஊதுகுழலில் தெறிந்து வழியும் அமுதத்துளி நீயோ என அந்த தூறலை பார்த்துக் கொண்டே இருந்தேன். உள்ளுக்குள் ஒரு கோதை அத்துளிகளில் நனைந்துக் கொண்டே கண்ணனுடன் கலந்துவிட்டாள்.
Comments
Post a Comment