விலங்கு வெப் சீரிஸ்
விலங்கு வெப் சீரிஸ் இப்போது தான் பார்த்தேன். திருச்சியில் நடைப்பெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஒரு காவல்நிலையத்தின் அன்றாட செயல்பாடுகளை காட்சி அமைப்பில் நுணுக்கமாக கொண்டு வர, முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சி, முதல் எபிசோட்டின் முதல் ஷாட்டிலேயே தெரிய வருகின்றது.
பணி நேரத்தில், காது குத்து விழாவிற்கு செல்லும் இன்ஸ்பெக்டர், ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசராக எஸ்.ஐ யை நியமித்து, ஜிடி மெயின்டெயின் செய்ய சொல்லுவது , எஃப் ஐ ஆர், சிடிஆர் விவரங்கள், கிச்சா விமலிடம் பேசிய ஆடியோ ரிக்கார்ட் நீதிமன்றத்தில் சாட்சியமாக கொடுக்க முடியாது என முனிஷ் காந்திடம் ஏடிஸ்பி கத்துவது, காவல் அடைப்பிற்கு பிறகு, குற்றவாளியை விசாரித்து,ஒப்புதல் வாக்குமூலம் பெற, நீதித்துறை நடுவரிடம் போலீஸ் காவல் எடுப்பது, ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் தடயத்தை கைப்பற்றி குற்றத்தை நிருப்பிக்க முயல்வது என யதார்த்த நடைமுறைகளை நுணுக்கமாக தர இயக்குநர் முயன்றிருக்கின்றார்.
இந்த டீடெயிலிங், வெப் சீரிஸை சுவரஸ்யம் ஆக்குகின்றதா என்றால் இல்லை என்பதே பதில்.
சப் இன்ஸ்பெக்டராக விமல் மனதில் பதியவே நேரம் எடுக்கின்றது. அந்த தாடி, களவானி படத்தை நினைவுப்படுத்துக்கின்றது. கிளிஷேவான கர்ப்பினி மனைவி செண்டிமென்ட் காட்சிகளும் ஒரு வேக தடை தான். அதே போல் போலீஸ் கைக் கொள்ளும் தேர்ட் டிகிரி ட்ரிட்மெண்ட் காட்சிகளும் ஒவர் டோஸாக தோன்றுகின்றது.
எல்லா குறைகளையும் குற்றவாளியாக கிச்சா கதாபத்திரத்தில் நடித்துள்ள நடிகரின் நடிப்பு சமன்படுத்தி விடுகின்றது. அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு அவர் குற்றச் செய்கையை விவரிக்கும் இடத்தில் புதுமுக நடிகர் போலவே தெரியவில்லை. அதே போல் டிரோன் காட்சிகள் , சம்பவத்துடன் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
குறைகள் இருந்தாலும், எனக்கு விலங்கு வெப் சீரிஸ் பிடித்திருந்தது. நிச்சயமாக இது விமலுக்கு நல்ல கம்பேக் தான்.
Comments
Post a Comment