என் பார்வையில் பொன்னியின் செல்வன் -1 திரைப்படம்


புகழ்ப்பெற்ற வர்ணனை மிகுந்த சரித்திர  நாவலை விறுவிறுப்பான திரைப்படம் ஆக்குவதும் , நாவலை படித்தவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதும் இமாலய சாதனை தான். பொன்னியின் செல்வன் முதல் பகுதி அதை நிறைவேற்றி உள்ளதா என்றால், என்னை பொறுத்தவரை 70% நிறைவேற்றி உள்ளது என்பேன்.
முதலில் தொய்வாக நகரும் திரைப்படம் இடைவேளை நெருங்கும் போது வேகமெடுத்து, இரண்டாம் பகுதி ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படமாக திரைக்கதை தீயின் வேகத்தில் பயனிகின்றது. நாவலை திரைக்கதைக்காக சில மாற்றங்கள் செய்துள்ளார் அதுவும் நன்றாக இருக்கின்றது வசனங்களை குறைத்து, பார்வைகளாலும், பின்னனி இசையாலுமே பல விஷயங்களை கடத்தி உள்ளது நன்றாக இருக்கின்றது.
பிறகு என்ன 30% குறை என்கிறீர்களா? கல்கி பொன்னியின் செல்வனை கல்கி வராந்திர தொடராக எழுதியதாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ட்விஸ்ட்டுடன் முடிய வேண்டும் என்று non linier பாணியில் சொல்லி இருப்பார். சம்பவங்கள்  தொடர்பு இல்லாமல் தொக்கி நிற்கும் போது “ அவரே கதை சொல்லியாக “நம் கதாநாயகனை விட்டு விட்டு வந்து விட்டோம்” என்பது போல் தொடங்கி தொடர்பு படுத்திவிடுவார். இந்த யுத்தி தான் kgf படத்தில் பயன்படுத்தப்பட்டது. கமலின்  voicd over ஐ படம் நெடுக பயன்படுத்தி இருக்கலாம் . அப்படி இல்லாததால் சில இடங்களில் காட்சிகள் அப்படியே தொக்கி நின்று, ஒரு மேடை நாடக உணர்வை தருகின்றது.
அடுத்து கல்கி ஒவ்வொரு கதாபாத்திரம் இன்னின்ன குணம் என்று வார்த்திருப்பார்‌. படத்தில் ஆதித்த கரிகாலன், நந்தினி குண வார்ப்பு அழுத்தமாக காட்டப்பட்டுள்ளது.  வந்தியதேவன் அருள்மொழிவர்மன் குணவார்ப்பு கூட மேலோட்டமாக நாவலை தொட்டு செல்கிறது. பூங்குழலி கதாபாத்திரத்திற்கு திரைக்கதை அவ்வளவு அழுத்தம் கொடுக்கவில்லை என்றாலும் அய்ஸ்வர்ய லக்‌ஷ்மி தன் முகபாவங்களில் அதை கொண்டு வந்து விடுகின்றார்.
ஆனால் குந்தவை, வானதி குண வார்ப்பு ஒரு ஏமாற்றம் பயந்த சுபாவம் உள்ள அப்பாவியான வானதி திரையில் இல்லை. குந்தவையாக திரிஷா ஆதித்த கரிகாலனிடம் பேசும் போது வெளிப்படும் கடுமை கூட ஆளுமையாக தொனிக்காமல் ஆதிகாரமாக வெளிப்படுகின்றது. குந்தவை சோழ தேசத்தை மிகவும் நேசித்தாள். அவளிடம் அறவுணர்வு அதிகம் இருந்தது. அந்த குணவார்ப்பு திரையில் பிரதிபாலிக்க வில்லை.
அடுத்து என்னை ஏமாற்றியது படம் காட்சிப் படுத்தப்பட்ட பூகோள ரீதியான இடங்கள் சோழ தேசத்தை பிரதிபலிக்கவேயில்லை.கல்கி யின் நாவல் இந்தளவு பேசப்பட காரணம் அவர் நாவலில் வரும் இடங்களை புவியியல் ரீதியாக வர்ணிக்கும் அழகு. பொன்னியின் செல்வனில் வரும் இலங்கை சம்பந்தப்பட்ட இடங்களை காண அவர் நேரடியாக இலங்கை போய் பார்த்து எழுதினார். அவர் சோழ நாட்டை விவரிக்கும் எழுத்துக்களை படிக்கும் போதே சோழ நாட்டின் பச்சை நெல் வயல்களின் மண் மணத்தை மனம் நுகரும். ஆனால் இங்கே தஞ்சை என்று காட்டப்பட்ட இடங்கள் என் மனத்தில் ஒட்டவே இல்லை. தாய்லாந்தில் எடுக்கப்பட்ட இலங்கை காட்சிகள் மட்டும் விதிவிலக்கு.  ஆயிரம் வருடங்களுக்கு முன் உள்ள நிலப்பரப்பு இப்போது தஞ்சையில் இருக்காது என்ற வாதம் முன்வைக்கப் படுகிறது. குறைந்த பட்சம் காவிரி பாயும் இடங்களில் செட் போட்டாவது எடுத்திருக்கலாம் என தோன்றியது. வந்தியத்தேவன் முதலில் தஞ்சை கோட்டையை பார்க்கும் அரண்மனை பல வட இந்திய படங்களில் வந்த ராஜஸ்தான் அரண்மனை என்று நினைகிறேன் அது மனதில் ஒட்டவே இல்லை. இந்தி படம் பார்ப்பது போன்ற உணர்வை தான் எனக்கு தந்தது.
போர்காட்சிகள் யதார்த்தமாக பயன்படுத்தி இருப்பது பார்க்க நன்றாக தான் இருந்தது.
குறைகள் இருந்தலும் இந்த படம் வரவேற்க வேண்டிய ஒன்று. எனென்றால் இப்படைப்பின் வெற்றியை வைத்தே அடுத்தடுத்து தமிழ் வரலாற்றை அடிப்படையாக கொண்ட புதினங்கள் திரைப்படமாக மலர வாய்ப்பு அமையும்.
எனவே பொன்னியின் செல்வன் மகத்தான வெற்றி பெறட்டும்.

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு