பூரணை


சுற்றிலும் பசுமை போர்த்திய மலை குன்றங்கள் சூழ்ந்திருக்க உயர்ந்திருந்த அந்த மலைமுகட்டின் சதுர பீடத்தில் சிலையாய் நின்றிருந்த தேவியின் திருமுகத்தையே வெறிந்து பார்த்து கொண்டே இருந்தன சோழ இளவரசர் அருள்மொழியின் கண்கள். ஆம் அவர் இப்போது இளவரசர் தான். ஆனால் இளவரசருக்குரிய பகட்டுகளை துறந்து, தன் சிற்றப்பா மதுராந்தகருக்கு பட்டம் கட்டி விட்டு, சித்தாப்பாவிற்கு சோழ சிங்கதனத்தின் மீது உள்ள ஆசை அகலும் வரை, சோழ சிங்காதனத்தை மனதிலும் நினையேன்‌ என்று அரசபீடத்தை விட்டு விலகி வந்த இளவரசர். இப்போது அவர் அருள்மொழி தெரிஞ்ச கைக்கோளர் படையின் தலைவர் மட்டுமே. 
அருள்மொழி மக்களோடு மக்களாக கலந்து பழக விரும்பினார். அதனால் சோழ நாட்டை கடந்தும், பல நாடுகளை சாதாரணனாக அலைந்து திரித்து காலார அந்த தேசங்களை கடந்து மண்ணோடு நேசம் பழகினார். அப்படி தான் காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரை சேர்ந்த கூல வாணிபம் செய்யும் காடன்மைந்தனோடு சேர்ந்து மதுரைக்கு தென்மேற்கில் மலை நாட்டுக்கு செல்லும் பொதினி மலை தொடரில் உள்ள ஆரை நாடு வந்து சேர்ந்தார். இடையில் ஒரு யானையின் துரத்தலில் வணிக குழுவை பிரிந்து, இந்த மலை முகட்டில் ஏறும் படி ஆகிவிட்டது. பொழுது மங்கி கொண்டு இருக்க, பூரண நிலவு வான் ஏற தொடங்கியது. அது சித்திரை மாத முழு பூரணை.
பூரண நிலவொளி அந்த தேவியின் முகத்தில் விழ, அத்திருமுகம் அவரை பெற்ற அன்னையின் சாயை பெற்றது போல் தோன்றியது அருள்மொழிக்கு. அன்னையின் நினைவு நெஞ்சில் எழுந்ததும், அவரையறியாமலேயே அவர் இதயம் இளகியது.
அம்மா! அம்மா! என்னை விட்டு செல்ல உனக்கு எப்படி மனது வந்தது. கட்டிய கணவன் முக்கியம் என்று உடன்கட்டை எறிய உனக்கு பெற்ற பிள்ளைகள் நினைவில்லையா? என்று அவர் மனதின் ஓரத்தில் ஒரு அரற்றதல் எப்போதும் இருந்தது. அருள்மொழியின் அன்னை, தன் கணவர் சுந்தர சோழர் இறந்த போது, உடன் கட்டை ஏறியவள். “ இராஜராஜர் என்னும் புலியை புயந்த பொன் மான் , முலைமகவு பிரியாத தையல் “ என்று திருக்கோவிலூர் கல்வெட்டு பறை சாற்றும்.
ஆனால் தாயாரான வானவன்மாதேவி உடன்கட்டை எறிய போது, இராஜராஜர் பால்குடி மாறாத பிள்ளை இல்லை தான். வயது வந்தவர் தான். இருப்பினும் பெற்றோரின் இறப்பு அது எந்த வயதானாலும் நெஞ்சில் ஆற்ற முடியாத வடுவை விதைத்து விட்டே செல்லும். அதுவும் சிறுப்பிள்ளையும் இல்லாமல் வளர்ந்து குடும்பஸ்தானாகவும்  இல்லாமல் வளரிளம் பருவத்தில் பெற்றோரை இழப்பது நெஞ்சில் தைத்த முள். வாழ்க்கையின் ஒவ்வொரு முன்னெற்றத்திலும் நெஞ்சம் பெற்றோரையே தேடும். எல்லாம் இருந்தும் இந்த விஷயத்தில் நீ பிச்சைக்காரன் தான் என விதி கைக்கொட்டி சிரிக்கும். அருள்மொழியின் தந்தை சுந்தர சோழராவது நோய்வாய்ப்பட்டு இறந்தார். ஆனால் அவர் அன்னை வலிய சென்று உடன்கட்டை ஏறி  தன் உயிரை உகுந்தாளே!
அந்த வலியை தந்த அன்னை மீது அடியாளத்தில் அவருக்கு கோபம் இருந்தது. “எனக்காக நீ இருந்திருக்காலமே அம்மா. தீக்குள் இறங்கிய நேரம் உனக்கு என் நினைவு வரவில்லையா? அக்கா எனக்கு அன்னையாக மாறினாள் . இருப்பினும் உன் கண்வழி எனக்கு கடத்தும் தாய்மையின் கதகதப்பை உன்னை தவிர வேறு யாரிடமும் என்னால் உணர முடியாது அம்மா. நான் ஏன் இப்படி தேசாந்தரியாக அலைக்கின்றேன்?  மக்களை புரிந்துக் கொள்ள என்று என் சுற்றத்தினர் நினைக்கின்றனர். சிலர் மதுராந்தகருக்கு எதிராக ஊர் ஊராக சுற்றி படை திரட்டுகின்றேன் என்கின்றார்கள். ஆனால் உன்னை பிரிந்ததும் வாழ்க்கை வெறுமை ஆயிற்று அம்மா. அந்த வெறுமையை துறக்கவே இப்படி ஊர் சுற்றுக்கின்றேன். எனக்கு உன் தாய்மையின் கதகதப்பு வேண்டும். உன் கைக்குள் சுருண்டு, தாய் பறவையின் அரவனைப்பில் தூங்கும் குஞ்சுகளை போல நிம்மதியான வாழ்வு வேண்டும். எனக்கு உன் தாய்மடி மீண்டும் வேண்டும் அம்மா!” அந்த தனிமையின் சூழலில் அந்த தேவியின் திருமுகத்தை தன்  அன்னையாகவே கருதி தன் ஆதங்கத்தை கொட்டி அழுதார் இளவரசர்.
அப்போது ரீங்காரம் இடும் காற்றில் கலந்த ஒரு மெல்லிய  பெண் குரல் “ அருள்மொழி உன் அன்னையின் ஆன்மா மட்டும் அல்ல, இந்த மண்ணில் பிறந்த எந்த தாயின் ஆன்மாவும் தன் பிள்ளைகளை விட்டு பிரிவது இல்லை” ஆள் அரவம் இல்லாத வேளையில் காதில் விழுந்த குரல் அருள்மொழியை துள்ளி ஏழு செய்தது. “ யார் ? யார் பேசியது” பதில் இல்லை. அவரும் அந்த தேவியின் பிரதிமை மட்டும் தான். மீண்டும் அவர் அந்த தேவியின் முகத்தையே பார்த்தார்.
மீண்டும் அந்த தேவி காற்று குரலாக அவளிடம் பேச அரம்பித்தாள். இந்த முறை அருள்மொழி பதறவில்லை அந்த தேவியின் திருமுக தரினத்தில் லயித்து இருந்தார். அவள் விழிகளை கூர்ந்து நோக்கினார். அது அவர் அன்னையின் விழிகளாக மலர்ந்தது. அவள் அன்னை அங்கு வந்து அமர்ந்தாள். அவர் தலை கோதினாள். தொடர்ந்து காற்று குரல் அவர் காதில் பேசி கொண்டே இருந்தது”. உன் அன்னை உன்னை விட்டு பிரியவில்லை.  பிரபஞ்சத்தின் தோற்ற சக்தியே தாய்மை. அந்த தாய்மை உணர்வு எல்லா ஆன்மாவுக்குளும் உண்டு. உனக்குளும் உண்டு. ஆண் பெண் பேதம் எல்லாம் உடலுக்கு தான் அருள்மொழி ! ஆன்மாவுக்கு இல்லை. உன் ஆன்மாவை பூரணமான அன்பால் நிரப்பிடு. உன் கர்மவினை உன்னை கத்தி தூக்க வைக்கும்! போர்களம் பல புக வைக்கும் ஆனால் போர்களம் பல கண்டாலும் உன் ஆன்மாவை பூரணமான அன்பால் நிரப்பி வை. உன் அம்மா அந்த அன்பில் கரைத்து உன்னுள் தான் வாழ்ந்து கொண்டு இருப்பாள். இது நாள் வரை உன் கண்கள் மட்டும் ஸ்பரிசித்த உன் தாயின் கண்கள் வழி வெளிப்படும் தாய்மையின் கதகதப்பை உன் வழி உன் குடிகள் அனைவரும் அடையட்டும். வாழ்வு என்பது பூரணமாக துலங்கட்டும்”. அந்த வார்த்தைகள் அவர் மனதோடு கலக்க தன்னையும் அறியாமல் தாயின் மடியின் உறங்கும் குழந்தை போல் உறங்க தொடங்கினார். 
பொழுது விடிந்தது. அவர் வாய் பூரணி ! என்று முனுமுனுத்து கொண்டு இருந்தது. எப்படியோ அவரை தேடி வழி கண்டு பிடித்து கூல வாணிகன் காடன் மைந்தன் வந்து சேர்ந்தான். இளவரசரை எழுப்பி அழைத்து சென்றான்.
வருடங்கள் ஓடியது. சோழ சிங்காதனம் அருள்மொழியை தேடி வந்தது. தேவி சொன்னது போல் அவர் பல போர்களங்கள் கண்டார். பாண்டியரையும் சேரரையும் சாளுக்கியரையும் சிங்களரையும் வென்றார். ஆனால் கத்தி தூக்கினாலும் அந்த மலைமுகட்டின் தேவி சொன்னது போல்  அவர் இதயம் அன்பால் நிறைந்திருந்தது. மக்கள் ஜனநாதன் என அவரை கொண்டாடினர். வாழ்வின் பூரணத்துவத்தை தனக்கு உணர்த்திய தேவிக்கு மகர வாயில் எழுப்பி பூரணி என அவளை போற்றி கல்வெட்டு வெட்ட சொன்னார். 
பூரணி கோவில் குடமுழுக்கில், சோழ தேச சக்கரவர்த்தி இராஜராஜ தேவராக கலந்து கொண்ட போது , கூட்டத்தில் காடன் மைந்தன் கையசைப்பதை கவனித்து விட்டு அருகில் வர சொன்னார்.
அருகில் வந்து காடன் தயங்கி நிற்க, பழைய நட்பை நினைவூட்டி பேசிய பேரரசர் காடனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, உங்கள் நலத்திற்காக விளக்கு எரிக்க நிவத்தம் தர அனுமதிக்க வேண்டும் என்று காடன் கேட்டார். என் நலத்திற்கு என்று கேளாமல் ஊரார் எல்லோர் நலத்திற்கும் என்று விளக்கு ஏற்றேன் என்றார் பேரரசர்.  அவர் பதிலில் தெரிந்த அன்பின் பூரணத்தில் மகிழ்ந்து சிரித்தாள் பூரணை.
( ராஜராஜர் சதய விழாவை ஓட்டி நான் எழுதிய சிறுகதை. மங்கல மடந்தையாம் கண்ணகி கோவிலில் பூரணி என்று கண்ணகியை குறிப்பிடும் ராஜராஜர் கல்வெட்டை அடிப்படையாக கொண்டும், காடன் மைந்தன் என்ற கிராம அதிகாரி தன்னுடைய ஊரில் இருக்கும் கோயிலில் தன் மன்னர் பெயரில் அவர் நலத்திற்காக தொடர்ந்து விளக்கெரிக்க அனுமதி கேட்க, அதற்கு ராஜ ராஜன் தன் ஒருவர் நலத்திற்கு விளக்கெரிப்பதை விட இந்த நாட்டு மக்கள் நலத்திற்காக விளக்கேற்றுங்கள் என்று சமாதானம் செய்து அனுப்ப, ஊருக்கு வந்த கிராம அதிகாரி தன் மன்னனின் விருப்பத்திற்கேற்ப நாட்டு மக்களுக்காக ஒரு விளக்கும், தன் விருப்பத்திற்கேற்ப தன் மன்னனுக்காக ஒரு விளக்கும் ஏற்றியதைக் குறித்த களக்காட்டூர் கல்வெட்டை அடிப்படையாக கொண்டும் இந்த கதையை எழுதினேன்)

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)