கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வரலாற்று பின்னணி


 

 இந்திய இராணுவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ட்ரிஞ்சர்  லாரன்ஸ் இங்கிலாந்திலிருந்து மெட்ராஸ் (இந்நாள் சென்னை) வந்து ஒரு தரமான படையை கம்பெனிக்காக உருவாக்கினார். 1757 வாக்கில் மெட்ராஸ் இராணுவம் கச்சிதமாக தயாராகி விட்டது. அதே வருடம் ராபர்ட் கிளைவ் தலைமையில் வங்காளத்துக்கு அணிவகுத்து பிளாசி போரில் வெற்றிவாகை சூடியது. 1760ல் எயரி  கூட் தலைமையில் வந்தவாசியை கைப்பற்றியதோடு பிரெஞ்சுக்காரர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது. 

அதன்பின்னர் நடந்த போர்களில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு அளப்பரியது. கம்பெனி அரசு இந்தியாவில் அசைக்க முடியாத அளவுக்கு காலூன்றியதில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு மிக அதிகம். முக்கியமாக தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமா இருந்த படைப்பிரிவுகளே, ஒழுக்கத்துக்கு பேர்போனதாகவும் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும் இருந்ததாக மனஸ் தத்தா குறிப்பிடுகிறார்

மதுரை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஜே பாலசுப்ரமணியன், மெட்ராஸ் இராணுவத்தில் சேருவது பறையர்கள் சமூகத்தில் உயர உதவியதை சுட்டிக்காட்டுகிறார். தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த சாதி விலங்குளை உடைக்க அதை ஒரு கருவியாக அவர்கள் கருதினார்கள். வெறுத்து ஒதுக்கப்படும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழும் ஒரு வாய்ப்பாக  இராணுவத்தில் வேலை செய்வது அவர்களுக்கு உதவியது, என்று பாலசுப்ரமணியன் கூறுகிறார்

ஆனால் இந்த இராணுவம் கொடுத்த முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கென்று இருந்த ரெஜிமெண்ட்டுகள்  நீண்ட நாட்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலைக்கவில்லை. 1857 முதல் இந்திய சுதந்திர போருக்கு பின் மாகாண இராணுவங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் முடியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1890ல் எல்லா மாகாண இராணுவங்களும் இணைக்கப்பட்டு பிரிட்டிஷ் இந்திய இராணுவம் உருவாக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் கமாண்டர் இன் சீப் லார்ட் கிச்சனர் இராணுவத்தில் மாற்றங்களை கொண்டு வந்தபோது தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து பெருவாரியாக ஆளெடுப்பதை நிறுத்தி ‘வீர வம்சங்கள்’  என கருதப்பட்ட ஜாதிகளில் ஆளெடுக்க பரிந்துரை செய்தார். 

இந்த கொள்கை மாற்றம் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் பாதித்தது. மெட்ராஸ் இராணுவத்தின் பறையர் ரெஜிமென்ட் போல பம்பாய் இராணுவத்தின் மஹர் ரெஜிமெண்ட்டும் பாதிக்கப்பட்டது. 

சட்டமா வசதியா என்று வரும்போது வெள்ளை அரசாங்கம் வசதியை மட்டுமே விரும்பும் எனவும் தேவை முடிந்தவுடன் தனக்காக இரத்தம் சிந்திய மக்களை வசதியாக ஒதுக்கி விட்டதாக அம்பேத்கர் தன்னுடைய பேச்சுகளிலும் எழுத்துகளிலும் குறிப்பிட்டுள்ளார். ராணுவ விதிகளை மாற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரிய துரோகம் இழைத்தது என் அம்பேத்கர் கூறுகிறார். தாழ்த்த பட்ட  மக்களின் நியாயங்களையும் சுதந்திர போராட்டத்தின் இருமை பக்கங்களையும் அழுத்தமாக பதிவு செய்கின்றது கேப்டன் மில்லர். எனக்கு படம் பிடித்து இருந்தது.

 சுயமரியாதையும் மனித நேயமும் சுதந்திரத்தின் முக்கிய கூறு.வரலாற்றில் இருந்தாவது பாடம் கற்று ஒற்றுமை உணர்வையும் ஒருமைப்பாட்டையும் எப்போதும் காப்போம்.

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு