காதல் தீபம்
கடாரமும் முந்நீர் பழந்தீவும் வெற்றி கொண்டு, கீழை கடல் பிராந்தியம் முழுவதும் வெற்றி கொண்ட சோழர் படை பெரும் ஆராவரத்துடன் நாகை துறைமுகத்தில் தரை இறங்கி கொண்டு இருந்தது. லட்சக்கணக்கான வீரர்கள், சொந்தங்களை விரைவில் காண போகின்றோம் என மகிழ்ச்சி பெருக்குடன் தரை இறங்கி கொண்டு இருந்தார்கள். வீரர்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கை கொண்டு பார்க்கும் போது தரை இறங்கவே ஒரு பொழுது கடந்து விடும் போல் இருந்தது. இதை எல்லாம் பெரிய மரகலத்தின் விளிப்பில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் மாமன்னர் ராஜேந்திர சோழர். 50 வயது கடந்தாலும் உடம்பின் தசைகள் இறுகி, வாலிப முறுக்கொடு தான் இருந்தார். கடற்கரை காற்று அவரது வெள்ளி முடிகளை அசைத்து சென்றது. மறைந்து கொண்டு இருக்கும் கதிரவனின் பொன்னொளியில் மன்னரின் தோற்றம் அழகாக இருந்தது. மன்னரின் எகாந்தத்தை கலைக்கும் வகையில் மேல் தளத்திற்கு யாரோ படி ஏறி வந்து கொண்டு இருந்தார்கள். ஓ! ராஜேந்திர சோழரின் தளபதி அருள்மொழி.50 வயது மதிக்கலாம்.
“ வா! அருள்மொழி! தரையிறங்க ஏற்பாடு ஆகிவிட்டதா?”
“ ஆகி விட்டது அரசே! தங்களை பூரண கும்ப மரியாதையோடு அழைத்து செல்ல, அனைத்தும் தயாராகி விட்டது. புறப்பட வேண்டியது தான்.”
“ சரி இன்று இரவு தங்கல் நாகை அரண்மனையில் தானே ?”
“ ஆமாம் அரசே ! அதற்கு முன்னால் நாகை திருகாரனேஸ்வர் ஆலயத்தில் தங்களுக்கு நானா தேசிக வணிக கூட்டத்தார் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருக்கின்றார்கள். தங்களது காடரம் வெற்றியை கொண்டாடும் வகையில் அவர்கள் சார்பாக தங்கள் எடைக்கு நிகரான பொன் சமர்ப்பிக்க போகிறார்களாம். இந்த வெற்றியால், கீழை கடல் முழுவதும் சோழர் ஆதிக்கத்தில் வந்ததால், அவர்கள் பாதுகாப்பாக வணிகம் செய்ய முடியும். அதற்கு, அவர்கள் நன்றியை தெரிவிக்கும் பொருட்டுஇந்த விழா ஏற்பாடு செய்துள்ளார்கள். இதைமன்னர் அவர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டு கொள்கின்றார்கள் அரசே!”
“எனக்கு அலுப்பாக உள்ளது அருள்மொழி. இந்த பாராட்டு, பொன் பரிசளிப்பு எல்லாம் வெற்று கூச்சலாக தெரிகின்றது. இது எதுவுமே நிரந்தரம் இல்லை அருள்மொழி. என் மனம் இப்போது அமைதியை நாடுகின்றது. வேண்டுமானால் பட்டத்து இளவரசன் ராஜாதிராஜனை அந்த விழாவுக்கு போக சொல். விரைவில் சோழ நாட்டின் அரியணையில் அவன் தானே அமர போகின்றான்.”
“ மன்னர் அவர்கள் அனிச்சயமாக பேசுவது எனக்கு சரியாக படவில்லை அரசே! நானா தேசிக வணிக கூட்டத்தார் இந்த படையெடுப்புக்கு பல பொருள் உதவி மற்றும் கப்பல்கள் கொடுத்து உதவி உள்ளார்கள். நீங்கள் அவர்களை புறக்கணிப்பது போல் உணர்வார்கள். வணிகர்களின் ஆதரவு இல்லாது அரசு இயங்குவது கடினம் அரசே.”
“சரி வருகின்றேன்”.
பூரண கும்ப மரியாதையுடன் வேத மந்திரங்கள் முழங்க, களிறு மேல் ஏறி வெற்றி ஊர்வலம் போனார் ராஜேந்திரர்.
ஊர்வலம் நாகை காரனேஸ்வரர் கோவிலை அடைந்தது. இறங்கி கோவிலை நோக்கி செல்லும் போது பல ஆடல் நங்கைகள் பூ தூவி மன்னரை நடனத்தால் வரவேற்றனர். அதில் நடுநாயகமாக இருந்தாள் அவள். முப்பதுகளின் பிற்பகுதியில் இருந்த பேரிளம் பெண்ணாக இருந்தாள் அவள். பெயர் பரவை நாச்சியார். கடைத்து எடுத்த சந்தன தேகமும் திருத்தமான முக அமைப்பும் கொண்டு இருந்தாள் அவள். உள்ளே சென்றதும் பரவையின் சிறப்பு நடனம் அரங்கேறியது. அவள் மின்னல் பார்வையும் , வசீகரிக்கும் நடன அசைவுகளும் மன்னரை ஈர்த்தன. கண்டிப்பாக இவள் தலை கோலி யாக தான் இருப்பாள். இவளை கங்கை கொண்ட சோழபுரத்தில் தளி சேரி பெண்டிராக நியமித்தால் என்ன என்று தோன்றியது. உடனே ஒலை நாயகத்தை அழைத்து உத்தரவு பிறப்பித்தார் . விழா முடிந்ததும் நாகை அரண்மனைக்கு திரும்பினார்.
நாகை அரண்மனை கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனை போல் பெரியது கிடையாது. மதிலுக்கும் அரண்மனைக்கும் இடையில் உள்ள தூரம் குறைவுதான். உப்பரிக்கையில் உலாவி கொண்டு இருந்த மன்னரின் கவனத்தை திருப்பியது பெண்ணின் கோப குரல்.
“நான் மன்னரை பார்க்க வேண்டும்”
“ நீ நினைத்த உடன் எல்லாம் மன்னரை பார்க்க முடியாது. உனக்கு எதுவும் பிராது இருந்தால், உங்கள் ஊர் மூலபருட சபையில் சென்று சொல்லு.”
“ எந்த ஊர் மூலபரூட சபையில் சொல்லுவது அய்யா? நான் திருவாரூர் தியாகேசருக்கு பொட்டு கட்டிய தாசி. தியாகேசர் கோவில் செங்கல் கோவிலை கருங்கல் கோவிலாக மாற்ற நிதி திரட்ட, வணிகர்கள் நடத்திய பாராட்டு விழாவில் நடனமாட வந்தால், ஒரே ஓலையில் உங்கள் மன்னர் என்னை கங்கை கொண்ட சோழபுரம் துரத்தி அடிக்கிறார். திருவாரூர் தியாகேசருக்கு வாழ்க்கைப் பட்ட நான், அந்த கோவிலை விட்டு வேறு கோவிலில் பணி புரிய மாட்டேன். உங்கள் மன்னர் வேண்டுமானால் என்னை சிரசேதம் செய்யட்டும்”
“மன்னரை அவமரியாதை ஆக பேசினால் சிறையில் தள்ளப்படுவாய்!”
“ சிரம் கொய்தாலும் பயம் இல்லை என்கின்றேன் . சிறைக்கா பயப்படுவேன்?”
“ உனக்கு வாயால் சொன்னால் புரியாது!கையால் சொன்னால் தான் புரியும்!” என அந்த காவலன் சொல்லி, அவளை அடிக்க கை ஓங்கும் போது, மன்னர் உப்பரிகையில் இருந்து நிறுத்து என குரல் கொடுத்தார். நிலா வெளிச்சமும் தீப்பந்த வெளிச்சமும் பரவையின் முகத்துக்கு தனி அழகை கொடுத்தன. இவள் தெய்வதா சொரூபம்!” மன்னர் மனத்துக்குள் சொல்லி கொண்டார்.
“பெண்ணே! உன் குறை என்ன என்று மேலே வந்து சொல்லு”
வழிமறித்த வேல்கம்பு வழி விட பரவை அரண்மனையில் நுழைந்தாள். மன்னரின் அறைக்கு காவலர்கள் வழிகாட்ட, மன்னர் தங்கியிருந்த அறையினுள் மருண்ட விழிகளுடன் நுழைந்தாள்.
“ உட்கார் !” மன்னார் அருகே இருந்த ஆசனத்தை அவளுக்கு காண்பித்து, கட்டிலில் அமர்ந்தார்.
“யாராங்கே ! சூடாக பசும் பால் கொண்டு வர சொல்லு.”
“சொல்லு! எதற்கு இந்த நேரத்தில் அரண்மனை வாசலில் ஆராவரம் செய்கிறாய்? விடிந்த பிறகு உன் சச்சரவை வைத்து கொள்ள கூடாதா?”
“ அய்யா மன்னித்து விடுங்கள். உடனே கங்கை கொண்ட சோழபுரம் ஏக வேண்டும் என தங்களின் ஓலையை என் கரத்தில் கொடுத்து, உடனே திருவாரூர் சென்று என் பொருட்களை எடுத்து கொண்டு புறப்பட மந்திரி உத்தரவிட்டார். திருவாரூரை நிரந்தரமாக பிரிவது என்ற எண்ணத்தையே என்னால் சகிக்க முடியவில்லை அய்யா. செடியை வேர் ஓடிய மண்ணில் இருந்து பிடுங்குவது போல் உணர்ந்தேன். அதனால் தான் உடனே ஓடி வந்து விட்டேன்.”
“ திருவாரூர் என்றால் அவ்வளவு இஷ்டமா?”
“ தியாகேசர் என்றால் பித்து”
“ எல்லா கோவில்களிலும் இருப்பது சிவம் தானே? உன்னால் சோழிஸ்வரரிடம் அந்த பிரேமையை காட்ட முடியாதா?”
“ எல்லா ஆண்களிலும் ஈஸ்வர அம்சம் உள்ளது. ஆனால் கணவராக ஒருவரை தானே அரசே வரிக்க முடியும்.”
மன்னர் புருவம் உயர்த்தி மெலிதாக சிரித்தார். அந்த சிரிப்பு பரவையை கோபப்படுத்தியது. கோவிலுக்கு பொட்டு கட்டிய தாசி, ஒரே கணவரை வரிப்பது பற்றி பேசுகிறாள் என ஏளன படுத்தியது போல் இருந்தது. தீக்குள் விரல் வைத்த வேதனை போன்ற வேதனை அவள் நெஞ்சை எரித்தது.
“ மன்னர் சிரிப்பதன் காரணம் நான் அறிவேன். இறைவனுக்கு மனைவியாய் பொட்டு கட்டிய பெண்கள் பலர் பொற் காசுக்கு பல்லிலித்து பொது மகளிராய் திரிவதன் அவலம் அது. ஆனால் மன்னரே அந்த தியாகேச பெருமானை தவிர வேறு ஆடவனை மனத்தாலும் நினைக்காத்தவள் நான். எனக்கு ஒரே கணவரை வரிப்பதுப் பற்றி பேசுவதில் எனக்கு தகுதி உள்ளது.”
“உனக்கு தகுதி இல்லை என யார் சொன்னது. நான் சிரித்தது குழந்தை போன்ற முகத்தில் இருந்து இவ்வளவு பெரிய கருத்துக்கள் வருகிறதே என்று தான்.”
அவர்கள் உரையாடலை கலைப்பது போல் சேவகன் வந்து, இரண்டு குவலைகளில் சூடான பனகற்கண்டு கலந்த பாலை வைத்து சென்றான். பரவை அதை பக்குவமாக ஆற்றி மன்னர் கையில் கொடுத்தாள். மன்னருக்கு அவர் மனைவியர் நினைவு வந்தது. இவ்வாறு அவர்கள் அவரை உபசரித்தது இல்லை. ஐந்து மனைவிகள் மன்னருக்கு. எல்லாமே ராஜரீக திருமணம். அவர்கள் சிற்றரசர் குல பெண்கள். எப்பொழுதும் ராணியாக தான் நடப்பார்கள். சேவை செய்ய சேடிகள் உண்டு. ஆனாலும் மனைவி கவனிப்பது போல் வருமா? ராஜேந்திரருக்கு ஐந்து வயதான போதே, அவருடைய தங்கை சந்திர மல்லியான கங்கம்மாளை பிரசவிக்கும் போது அவர் தாய் வானமாதேவி இறந்து விட்டாள். கங்கம்மாளை தாய்க்கு தாயாக மகளுக்கு மகளாக பாசம் காட்டி வளர்த்தார். ஆனால் அந்த பாசமும் அவருக்கு நிலைக்கவில்லை. சிற்றனை பஞ்சவன்மாதேவியின் அரவணைப்பில் சிறிது நாள் பாசத்தின் சாயலை அனுபவித்தார். அவருடைய மறைவுக்கு பின் ராஜேந்திரருக்கு வெறுமை தான் சூழ்ந்தது. அரண்மனை பெண்டிரின் அகம்பாவம் தாங்க முடியாம லே அவர் போர் முனைக்கு ஓடினார். ஆட்சி பீடம் ஏறி பல ஆண்டுகள் போர்களத்தில் கழித்து விட்டார். வடக்கே கங்கை வரையும் தெற்கே ஈழமும் மேற்கே முநீர் பழந்தீவும், கிழக்கே கடாரம் வரை வெற்றி பெற்றாகி விட்டது. பாண்டியர் மணிமுடியும் இந்திர ஹரத்தையும் கைப்பற்றி தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றி ஆகிவிட்டது. தஞ்சையை போலவே கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்து, சோழபுரத்தில் சோழீஸ்வரருக்கு, பெருங்கோவில் எழுப்பி ஆகிவிட்டது. இனி என்ன இருக்கின்றது வாழ்வில்? இறையே என்ன செய்ய காத்திருகின்றாய் என்னை?”
மன்னரின் நினைவு ஓட்டத்தை கலைத்து, குவளை பாலை அவர் கரங்களில் கொடுத்தாள் பரவை. மன்னர் அவள் முகத்தையே பார்த்தார்.
“என்ன பார்க்கிறீர்கள்?”
“ஒன்றும் இல்லை.
திருவாரூர் பெருமான் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என நினைத்தேன்.”
“என்ன அபசாரம்? அவருக்கு பக்தி செய்ய நம் அல்லவா கொடுத்து வைத்தவர்கள். தெய்வம் தாயாக, சேயாக, நாயக பாவத்தில் வருவது உண்டு. ஆனால் தோழமை ஆக, காதல் தூது செல்லும் தூதாதனாக வந்தவர் எங்கள் தியாகேசர் அய்யா”
பரவை பேசி கொண்டே போனாள். தியாகேசரை பற்றி, சப்த வீடங்க தலங்கள் பற்றி, தியாகேச மூர்த்ததின் உட்பொருள் பற்றி என அவள் பேச்சு நீண்டது. பொழுது புலர்ந்தது. மன்னர் அயர்ந்து உறங்கி விட்டார்.
புள்ளினங்கள் கீதம் இசைக்கும் அழகை கான உப்பரிகை அருகே நின்றவளை கை சொடக்கி கிழே அழைத்தார் முதன் மந்திரி . பரவை கீழே இறங்கி சென்றாள்.
“ இந்தா”
ஒரு பொன் முடிப்பை நீட்டினார்
“எதற்கு அய்யா இது”
“நீ செய்த வேலைக்கு கூலி”
“ எந்த வேலையும் செய்யவில்லையே “
“ எந்த வேலையும் செய்யாமல் இரவு முழுவதும் பாகவதம் படித்தாயா?” மந்திரியின் குரலில் விரசம் வழிந்தது. உடல் முழுவதும் கூசி போக, விழிகளில் கண்ணீர் கொப்பளிக்க அங்கு இருந்து வெளியேறினாள் பரவை.
மன்னர் எழுந்து பரவையை தேடினார். திருவாரூர் நகருக்கு உடன் செல்ல உத்தரவிட்டார். ஒரு நாள் இரவு போதாது போல என மந்திரி மனத்திற்குள் சிரித்து கொண்டான். திருவாரூரில் தன் வீட்டில் மன்னரின் தேர் வந்து நிற்பது கண்டு பரவைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கொடியில் படர்ந்த மல்லிகையை கை முழுவதும் எடுத்துக்கொண்டு பூ தூவி பூரண கும்ப நடனமாடி வரவேற்றாள். இனிப்பு பலகாரங்கள் பரிமாறினாள். கோவில் பட்டருக்கும் மூல பருட சபைக்கும் தகவல் அனுப்பினாள். முலபரூட சபை பரவை வீட்டிற்கு வந்து மன்னரை நமஸ்கரித்தது. திருவாரூர் கோவிலை மன்னருக்கு சுற்றி காட்டினாள். திருவாரூர் முழுவதும் பரவைக்கு நல்ல பெயர் இருப்பதை மன்னர் கண்டு கொண்டார். நாகையில் நானா தேசிக வணிகர் கொடுத்த பொன் முமுவதும் பரவையிடம் கொடுத்து திருவாரூர் கோவிலை கருங்கல் கோவிலாக மாற்ற பயன்படுத்தி கொள் என சொல்லிவிட்டு விடைபெற்றார்.
கங்கை கொண்ட சோழபுரம் வந்து சேர்ந்த மன்னரை நோக்கி அவரது பட்டத்தரசி வீசிய முதல் கேள்வியே திருவாரூரில் தாசிகளோடு சரியான கூத்து அடித்தீர்களாமே என்பது தான். வயதிற்கு தகுந்தது போல நடந்து கொள்ள வேண்டும் என பாடம் நடத்த தொடங்கின பட்டத்தரசி கோக்கிலான் அடிகள் வாயை மன்னரின் ஒரே வாக்கியம் மூட செய்தது.
“ அவள் தாசி இல்லை. என் மனைவி!”
சொல்லிவிட்டு மன்னரே தடுமாறி போனார். என் அப்படி சொன்னோம். அவளுக்கும் நமக்கும் தவறான உறவு எதுவும் இல்லையே. இது என் உள்மன இச்சையா? என் இச்சைக்கு அவளை பலியிடுகின்றேனா? அவள் பெயரையும் கெடுகின்றேனா? பரவை என்னை விரும்புவாளா? அவ்வாறு விருப்பினாலும் அந்த விருப்பம் ராஜேந்திரன் என்ற தனி மனிதன் மேல் இருக்குமா? அல்லது இந்த ஆட்சி செல்வம் செல்வாக்கினால் வருமா? பரவை அப்படி பட்ட பெண் இல்லை. தாசிகளின் உடல் மொழியை அவர் பல சந்தர்ப்பங்களில் கவனித்து இருக்கின்றார். எதிரே இருக்கும் ஆடவனை விழ்த்திவிடும் முனைப்பு இருக்கும். ஆனால் பரவையிடம் அது இல்லை. அவள் உள்ளம் முழுவதும் அந்த தியாகேசரிடம் ஈடுபட்டு உள்ளது. எது தன்னை அவளை நோக்கி ஈர்த்தது என யோசித்தார். அவளது இயல்பான தன்மை. பரவையிடம் அலட்டல் இல்லை. போலி தனம் இல்லை. பரவை அம்மாவின் சாயல் கொண்ட பெண் என்று தோன்றியது. ஐந்து வயதில் இழந்த அம்மாவை தான் எல்லா பெண்களிடமும் அவர் தேடி கொண்டு இருப்பது உரைத்தது. பரவை எனக்கு காமம் வேண்டாம். என் தாயின் அரவணைப்பு வேண்டும். தருவாயா? என்னை ஏற்று கொள்வாயா? மனதிற்குள் அராற்றினார் அவர்.
பரவைக்கும் இராஜேந்திர சோழனின் நினைவாகவே இருந்தது. அவருடன் இருந்த இரண்டு நாட்கள் ஒரு குடும்பத்தின் அரவணைப்பில் இருப்பது போல் இருந்தது. பரவைக்கு தந்தை யார் என்று தெரியாது. தாயும் சிறு வயதில் இறந்துவிட தாயின் சகோதரியிடம் வளர்ந்தாள் அவள். ஜதி தவறினால், சுளீர் என காலில் விழும். சித்தி பாசமாக பேசியதே கிடையாது. ஏதோ திருவாரூர் மூல பருட சபை பாதுகாப்பாக இருந்ததால், சித்தியிடம் இருந்து பரவை தப்பினாள். இல்லாவிட்டால் பணத்தை வாங்கி கொண்டு, பரவையை விற்று இருப்பாள் அவள் சித்தி. தியாகேசர் தான் கணவர் என்று மன்னர் முன் முழங்கி விட்டு மன்னர் மேல் உனக்கு பிரேமையா? உன் விருப்பம் உனக்கே கேவலமாக இல்லையா? பரவை கண்ணாடி முன்னின்று தன்னை தானே கேள்வி கேட்டு கொண்டு இருந்த போது வாசலில் குதிரையில் குளம்படி சத்தம். தேரோடும் திருவாரூர் வீதிகளில் குதிரைக்கா பஞ்சம் என அவள் முதலில் அலட்டி கொள்ளவில்லை. தொடர்ந்து கண்ணாடியை பார்த்து பேசி கொண்டே இருந்தாள். கண்ணாடியில் அவள் பிம்பத்துடன் மன்னர் பிம்பமும் தெரிந்தது. இது உருவ மயக்கமா இல்லை. மன்னர் தான் அவரது மூச்சு காற்று மேனியை தழுவுகின்றதே. சட்டென திருப்பினாள். இருவர் கண்களும் பேசாமல் பேசி கொண்டான. பிரிந்தவர் சேரும் போது அங்கு வார்த்தைகள் ஊமை ஆகி விடுகின்றதே.
மன்னர் திருவாரூர் கோவிலில் வைத்து ஊரறிய, அவளது பொட்டு தாலியை அகற்றி, குல மகளுக்கு உரிய காதொலை பெருக்கி மனைவியாக ஏற்று கொண்டார். மன்னர் பிறந்த ஆடி திருவாதிரை அன்று, அவர்கள் கணவன் மனைவி ஆக நின்று வணங்கிய இடத்தில் வைக்க பெரிய குத்து விளக்கு ஒன்றும் மேலும் 28 குத்து விளக்குகள் தியாகேச பெருமானுக்கு பரவை நிவந்தமாக அளித்தாள். அந்த குத்து விளக்கின் தீப ஒளி , தியாகேச பெருமானின் கருவறை தீப ஒளியுடன் கலந்து ஆயிரம் ஆண்டுகளாக அவர்களது காதல் மொழி பேசி வருகின்றது. அடிமுடி காணா ஆதிரையான் சேர்த்து வைத்த காதல் ஒளி காலத்தால் அழிந்திடுமோ?
(முற்றும்)
( உடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவரும் அணுக்கியார் பரவை நங்கையாரும் நிற்குமிடத்தெரியும் குத்து விளக்கொன்றும்" என தொடங்கும் திருவாரூர் கோயில் கல்வெட்டை அடிப்படையாகக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய சிறுகதை இது)
#ஆடி_திருவாதிரை_மீள்_பதிவு.
Comments
Post a Comment