காபி புராணம்

காபி
இன்று டல்கோனா காபி, இந்த லாக் டவுன் நேரத்தில் , இணையத்தில் ஒரு ரவுண்டு வந்தது. டல்கோனா, காபி குடிக்காவிட்டால், தெய்வ குத்தம் போல் பார்க்கப்பட்டது. ஆனால், என்னை பொருத்தவரை, காபிக்கு ஒரு தனி குணம் உண்டு. இப்படி ஃப்ரிட்ஜில் உறைய வைத்து குடிப்பது காபி அல்ல
எங்கள் தஞ்சை மாவட்டத்தில் , கும்பகோணம் டிகிரி காபி பிரசித்தி பெற்றது. அது என்ன டிகிரி காபி? காபி எப்போது டிகிரி படித்தது?
பித்தளையில் டம்ளர் - டவரா ‘செட்’டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். அதாவது சிக்கரியின் அளவு குறைவாக, காபியின் அளவு அதிகமாக உள்ள டிகிரி கணக்கு. அது தான் டிகிரி காபியின் அடித்தளம். அடுத்து டிகாஷன். ஒரு வாட்டி டிகாஷன் போட்டு, 3 முறை காபி போட்டால் சுவை கெடும். அடுத்து தண்ணி கலக்காத, கள்ளி சொட்டு பதத்தில் உள்ள பசும் பால் இது முன்றும் தான் டிகிரி காபியின் சூட்சமம். பித்தளை டபரா டம்பளர் அலங்காரம் தான்
டிகிரி காப்பிக்கு பால் ரொம்ப முறுக கூடாது. பதம் ஆக முதல் முறை பொங்கி வரும் போதே இறங்கி வச்சு, முதல் தர பி தர காபி  டிகாஷனை ஸ்ட்ராங்கா போட்டு,  காபிக்கு சரிசமமாக சக்கரை தூக்கலாக போட்டு,ஆத்தி டம்ளர்ல, ஊற்றி, மேலப்புல, கொஞ்சூண்டு, பசும்பால் சொட்டு விட்டு, டபார வில் ஆற்றி கொடுத்தால், கழனி தண்ணியை மாடு உருஞ்சுற மாறி, குடிக்க கூடாது. முதல, அந்த காபியோட மணத்தை சுவாசித்து உள் இழுக்கணும், அதுக்கு அப்புறம் சொட்டு சொட்டா ரசிச்சு குடிக்கணும். நுனி நாக்குல இனிப்பும், உள் நாக்குல காபி கசப்பும்,  தொண்டையில் காபி சூட்டின் கதகதப்பும்,,மூக்கு நுனியில் காபியின் வாசனையும் சேர்ந்து ஒரு நொடி உங்கள சொர்க்கத்துக்கே அழைச்சிட்டு போகும். இந்த டல்கோனா எல்லாம் பக்கத்திலேயே வரமுடியாது.
கும்பகோணத்தில் காபிக்கு ஃபேமஸ், பஞ்சமி ஐயர் கிளப் கடை.  கிளப் கடை என்றால் இப்போது உள்ள பப், கிளப் இல்லை. இப்போது உள்ள cafeteria  வின் தாத்தா தான் கிளப்கடை.1900களின் ஆரம்பத்தில், 20மாடுகள் உள்ள மாட்டு கொட்டகையோடு இந்த கடையை ஆரம்பித்தார் அவர்.  எங்க வீட்டில் என் பாட்டி காலத்தில் காபி வறுத்து அரைக்கும் இயந்திரம் இருந்தது . பிறகு கிரீன் லேபில் டிகாஷன் காபி வந்தது. அதன் பின் இப்போது இஸ்டன்ட் காபியில் வந்து நிற்கிறது. என் நினைவு தெரிந்து, 1990களின் பிற்பகுதியில் நான் சுவைத்த, என் நினைவில் இன்றும் உள்ள காபியின் தரம் இப்போது இல்லை என்றே சொல்வேன்.
ஆயிரம் தான் காபி மனம் வீசினாலும், ஏழை பங்காளன், தேநீர் என தேன் நாமம் சூடிய டீ தான். அன்று கிராமங்களை இணைக்கும் முக்கூட்டு சாலைகளில் தேநீர் கடைகள் தான் ஆக்ரமித்து இருந்தன. ஒரு டீயும் வடையும் எளியவர்களின் பசி தீர்க்க போதுமாக இருந்தது. கிளப்பு கடை ஆடம்பரம் நமக்கு எதுக்கு என இப்போதும் 75 வயது கடந்த கிராமத்து பெரியவர்கள் சொல்ல கேட்டு உள்ளேன். இப்போது எங்கள் தஞ்சை பக்கம் தொழிலாளர்களுக்கு நீங்கள் எவ்வளவு கூலி கொடுத்தாலும், இரண்டு வேளை டீ யும் , பொட்டலம் எனப்படும் நொறுக்கு தீனியும் வாங்கி கொடுத்து பாருங்கள், உங்களை கனிவாக பார்ப்பார்கள். ஏன்னெறால், ஒட்டிய அவர்களின் வயிருக்கு சோறு உண்டால் கூட சிறு வலியெடுக்கும். டீ தான் அவர்களுக்கு எப்போதும் இதமான பானம்❤

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)