சுஜாதா

இன்று எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள்.இவருடைய, இயற்பெயர் ரங்கராஜன். "இடது ஓரத்தில்" என்ற இவருடைய சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார். 
சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, கட்டுரை, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம் என்று கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனது அழுத்தமான, தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் சுஜாதா (1935-2008). ஆண்டாள் முதல் அறிவியல் வரை எதையும் புதுமையாகவும் வசீகரிக்கக்கூடிய வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவை இவருடைய எழுத்துகள். சுஜாதாவின் விரிவான வாசிப்பும் அதற்கு ஒரு வகையில் காரணம்.   சுஜாதா சொல்லின் செல்வர்.‌ தொழில்முறை எழுத்தாளர் இல்லை அவர். அடிப்படையில் அவர் பொறியாளர். ஆனாலும் தம் மனதிருப்திக்காக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி இருக்கின்றார்.
மனத்தின் குரல் வார்த்தைகளாக வடிந்த அழகியலே சுஜாதாவின் எழுத்துக்களை சாகாவரம் பெற செய்தது. சுஜாதாவின் எழுத்துக்களில் என்னை ஈர்த்தது, அவர் எழுத்துக்களில் விரவி கிடக்கும் ஆன்ம தீண்டல். தான் உய்ந்து உணர்ந்த அனுபவங்களையே தன் எழுத்துக்களாக படைத்தார்.  அவரின் பிரிவோம் சந்திபோம் கதாநாயகி மதுமிதா எவ்வளவு அழகான கதாபாத்திர வார்ப்பு?
 அவரின்‌  ஸ்ரீரங்கத்து தேவதைகள் நூல் எனக்கு விருப்பமான நூல். அதில்‌ வரும் தேவதைகளில்‌ என்னை அதிரடித்தவள் குண்டு ரமணி.
எதிர்பாராமல் கணவனையும் குழந்தையையும் இழந்து, சொத்துக்களை பறிக் கொடுத்துவிட்டு, மனநிலை பிறழ்ந்தவளாக ஸ்ரீரங்கத்தை சுற்றி வரும் ஜீவன். அவள் உண்மையில் மனநிலை பிறழ்ந்தவளா? இல்லை அது அவள் தற்காப்பிற்க்கு போட்ட வேடமா? ரமணியே அறிவாள். அவள் கதையை சுஜாதா முடிக்கும் வரிகளை படித்த பிறகு என்னை அறியாமல் என் விழிகள் கண்ணீரை சுரந்தன. எழுத்தின் வீரியம் அது தான்.
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் நூலில் இருந்து..
 " ‘உங்குழந்தை என்னடி ஆச்சு?’ அவள் கடிப்பதை நிறுத்தாமல், ‘செத்துப் போச்சு மாமி’ என்றாள். நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். ‘எப்படிச் செத்துப் போச்சு?’ ‘கீழே போட்டுட்டேன் மாமி.’ அடுத்து ரமணி, நான் சற்றும் எதிர்பாராத வகையில் கையில் ஒரு கற்பனைக் குழந்தையைப் பார்த்துக்கொண்டே, ‘வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தைப் போல் சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்தென்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்’ என்று மிக இனிய குரலில் கற்பனைக் குழந்தையை முதுகில் சாய்த்து ஆடிக்கொண்டே பாடினாள் அந்த ராட்சசி. என்னைப் பார்த்துக் கண்களில் கண்ணாடி போல ஜலம் திரையிடச் சிரித்தாள்."
#writer_sujatha_birthday_remembering_sujatha

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)