அவள் பெயர் கண்ணகி ..
சித்திரை மாத முழுநிலவு நாள் இரு தினங்களுக்கு முன் கழிந்தது. மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் நடந்த விழா நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பார்த்ததில் இருந்து மனதில் சுழற்று கொண்டு இருக்கின்றது கண்ணகி பற்றிய சிந்தனைகள். உலக பரம்பரிய தினமான இன்று தமிழ் சமூகத்தின் முக்கிய தொன்ம குறியீடான கண்ணகியை பற்றி எழுதுவதும் பொருத்தமான ஒன்று தான்.
காப்பிய நாயகி அவள்; வெறும் கற்பனை பாத்திரம், என கடந்து போய் விட முடியாது கண்ணகியை.
அவள் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த பெண் மலர். இதற்கு மானுடவியல் சான்று பல உண்டு.
கோவலனை கைப்பிடித்த போது அவள் பால்யம் மாறா குழந்தை தான். கண்ணகியை முதிராக் குளவியள் என்று சிலம்பு குறிப்பிடுக்கின்றது.
கிள்ளை பருவத்திலேயே மணமுடித்து கொடுக்கப்பட்டு, இனி உன் வாழ்வு என்பது உன் பதியை சார்ந்தது என கணவனை மட்டுமே சார்ந்து தன் வாழ்வை துவங்கிய பேதை அவள்.
மாதவி என்னும் அழகி மீது மையல் கொண்டு கோவலன் கண்ணகியை பிரிய, வாழ்வு இருண்டு தான் போனது கண்ணகிக்கு.
இருண்ட வாழ்வில் மீண்டும் முளைத்த வெள்ளியாக, செல்வம் கரைந்த பின்னும் மீண்டு வந்த செல்வமாக கணவன் திரும்பி வர, நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கி மதுரை சென்ற மடந்தைக்கு, மீண்டும் காலம், கசப்பையே கொடுத்தது.
மன்னன் செய்த தவறுக்கு கண்ணகி மதுரையை எரித்தது சரியா? மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என கண்ணகியை இன்றும் குற்றவாளி கூண்டில் ஏற்றி குற்றம் சாட்டி கொண்டேதான் இருக்கின்றனர்.
கணவனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்ட அவளின் நீதியை பேச இங்கு யாரும் இல்லை.
கண்ணகி மதுரையை எரித்தல்:
சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்த நிகழ்ச்சியானது மதுரைக் காண்டத்தில் வஞ்சின மாலையிலும் அழற்படு காதையிலும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் வஞ்சின மாலை கண்ணகியின் சீற்றத்தினை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது. கணவனை இழந்த நிலையில் சொல்லொணாத் துயரமும் சீற்றமும் கொண்ட கண்ணகி மதுரையினை எவ்வாறு எரித்தாள் என்று கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்
- பா.எண்: 5
இதற்கு கொடுக்கப்பட்டுள்ள தற்போதைய விளக்கமானது ' இடது மார்பகத்தினை கையால் திருகி, மதுரை மாநகரினை மூன்றுமுறை வலமாகச் சுற்றிவந்து, மிகுந்த வருத்தத்துடன், தேன் நிறைந்த தெருவிலே, விளங்கிய அணியினள் ஆன கண்ணகி, அம் மார்பகத்தினை வட்டித்து விட்டெறிந்தாள்.' என்பது ஆகும். ஆனால் முலை என்பதற்கு கண் என்றும் ஒரு பொருள் உண்டு. மட்டார் என்பது கள்ளை குறிக்கும். மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து என்பதற்கு , கள்வடியும் கண் என்ற பொருள் உண்டு. கோபம் கொண்டு பார்வை வழி தன் சினத்தின் வெப்பத்தை கடத்தினாள் என்று தான் நான் புரிந்து கொள்கிறேன்.
மதுரை முற்றாக எரிந்ததா?
மொத்த மதுரையும் எரிந்து போயிருந்தால், எப்படி மறு நாளே, நெடுஞ்செழியன் மன்னனின் தம்பியான வெற்றிவேற் செழியன் முடி சூடியிருப்பான்? மொத்த மதுரையும் எரிந்திருந்தால் அடுத்த நாளே முடிசூட்டு விழா நடைபெற்றிருக்காது. எனவே மதுரை முற்றாக எரியவில்லை. அடுத்ததாக, ஒரு பெண்ணின் சினத்தால் ஒரு நாடு எரியுமா? அவரின் உள்ளம் வேண்டுமானால் எரியலாம்.
அவ்வாறாயின் என்னதான் நடந்தது?
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ஒரு உத்தியினைக் கையாளுவார். அதாவது கதையில் பின்னே வரும் நிகழ்வுகளை முன்னரேயே நிமித்தங்களாகக் காட்டிவிடும் ஒரு நாடக உத்திமுறையே அதுவாகும். அந்த வகையில் விண்கல் விழப்போகும் நிகழ்வும் காட்டப்படுகின்றது. கோவலன் கொலையுறுவதற்கு முந்திய நாள் இரவில் பாண்டியன் தேவியானவள் கொடுமையான கனவொன்றைக் கண்டாள். அக் கனவில் `பகலில் விண்மீன்கள் எரிந்து விழுந்தன. எட்டுத்திக்கும்அதிர்ந்தன`. இங்ஙனம் அவள் கண்ட கனவினைத் தனது தோழியிடம் கூறினாள்.
`கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா
கருப்பம் ` : (வழக்குரை காதை : 1-8)
கருப்பம் = அறிகுறி
எனவே விண்கல் விழப்போவதனை இளங்கோ அடிகள் முற்கூட்டியே காட்டிவிட்டார். இப்போது விண்கல் விழுந்ததற்கான பாடலைப் பார்ப்போம்.
`மாலை எரி அங்கி வானவன் தான்தோன்றி,
மாபெரும் பத்தினி நின்னை மாணப் பிழைத்தநாள்
பாய்எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர்
ஏவல் உடையேனால், யார் பிழைப்பார்?`
:வஞ்சின மாலை :50
மதுரையின் ஒரு பகுதி எரிகல் விழுந்ததால் எரிந்துப் போய் இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் தமிழர் தொல்குடியில், வஞ்சிக்கப்பட்ட பெண்ணை தெய்வம் ஆக்கும் வழக்கம் உள்ளதால், அவளுக்கு மதுரையை எரிக்கும் சக்தி இருந்ததாக கருத்தாக்கம் ஏற்பட்டது.
கண்ணகியின் மனநிலை அப்போது யாரையும். அழிக்க நினைத்து இருக்காது. எல்லாம் இழந்து விரக்தியின் விளிம்புக்கு சென்றவள், யாருக்கு அழிவை தர விரும்புவாள். நொந்து போன மனநிலையில், கால் போன போக்கில், மதுரைக்கு மேற்கு திசையில் இருந்த வேங்கை கானல் மலைப்பகுதியை அடைந்தவள் கண்ணுக்கு, மலை முகட்டின் உச்சியில் எழுந்த நிலவின் தன்னொளியில் கோவலன் தெரிந்தான். இருக்கை நீட்டி அவளை அழைக்க, வீசும் மலை காற்றில் , மாலையிட்டவன் வாசம் தேடி , நிலவை நோக்கி பாய்ந்த கண்ணகியை, பள்ளத்தாக்கின் கரும் இருட்டு கருப்பை இருட்டென தாங்கி கொண்டது. வாழ்வு மொத்தம் அவள் தேடி அலைந்த அமைதி மலை காற்றென அவளை சூழ்ந்தது. அவள் ஆரூயிர் கணவன் சித்திரை மாத தன்னொளியில் அவள் கரம் பிடித்து, பிரபஞ்ச பெருவெளிக்கு அவளை அழைத்து சென்றான். அவள் இழந்த மங்கலம் அவளை பரிபூரண அமைதியாக சூழ, மங்கல மடந்தை கண்ணகியானாள்.
மூவேந்தரும் கண்ணகியை போற்றினர். கடல் தாண்டி ஈழத்திலும் பத்தினி தெய்வமாக கொண்டாடப்பட்டாள் கண்ணகி. கண்ணகி கற்பனை இல்லை என்று எப்படி சொல்கிறாய் என கேட்பீர்கள். முதல் சான்று, கண்ணகி கோட்டத்தில் உள்ள மூல கல் இமயமலை பகுதியை சேர்ந்தது என்று நிரூப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்ணகி மதுரை எரிந்த பின் மலையகம் சென்ற பாதையின் புவியியல் அமைப்பும் இன்று போலவே உள்ளது.
சிலம்பிற்கு முன்பே நற்றினையில் கண்ணகி பற்றி குறிப்பு உண்டு. வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டே, கண்ணகி கதை காப்பிய வடிவம் எடுத்திருக்க வேண்டும்.
காலத்தின் நிகழ்வுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் நடப்பது. கடல் அலை கலைந்து போட்ட மண்கோட்டையை திரும்ப கட்டும் குழந்தையும், அந்த கோட்டையை மீண்டும் அழிக்கும் அலையாக திரும்ப திரும்ப நிகழ்வது தான் கால கணக்கு. இன்றும் பல கண்ணகிகள் மறுக்கப்பட்ட நீதிக்காகவும், அமைதியான வாழ்வுக்காகவும் போராடி கொண்டே இருக்கின்றனர். ஆனால் மானுட குல வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட பெண் தெய்வமாக கொண்டாடப்படுகின்றாளே தவிர அவள் விரும்பும் அமைதியான வாழ்வை தருவது சமூக கடமை என்பது கட்டமைக்கபடவேயில்லை.
இறுதியாக கண்ணகி கோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் ராஜராஜர் கல்வெட்டின் வார்த்தைகளோடு முடிக்கின்றேன். பூரண ஆளுடைய நாச்சியார் என கண்ணகியை புகழ்கிறது அக்கல்வெட்டு. இராஜராஜர் அக்கோவிலுக்கு வந்து கண்ணகி அந்த இடத்தில் அடைந்த பூரண அமைதியை உணர்ந்து வடித்த வார்த்தைகளாகவே அதை நான் காண்கிறேன். அந்த பூரண அமைதி எங்கும் சூழட்டும். எனெனில் அமைதியான மனமே உலகை உய்விக்கும் கருணையின் ஊற்று.
Comments
Post a Comment