முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன்

இன்று சித்திரை மூலம் பிற்கால பாண்டியரில் புகழ்ப்பெற்ற முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனின்  ஜென்ம நட்சத்திரம். பொன்னியின் செல்வன் நாவலின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு, ராஜராஜ சோழரும், ராஜேந்திர சோழரும் கொண்டாடப்பட்ட அளவுக்கு வேறு தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படவில்லை.. ஆனால் இராஜேந்திர சோழருக்கு இனையாக தமிழக நிலப்பகுதிகள் தாண்டி, இன்றைய கேரளா, ஆந்திரா நெல்லூர் பகுதி, கர்நாடகாவின் கோலார் பகுதி, இலங்கை மற்றும் தாய்லந்து நாடு வரை கைப்பற்றி மிகப்பெரிய பிற்கால சாம்ராஜ்யத்தை கட்டி அமைந்தவர். ஆனால் இவரின் பிற்கால வாரிசுகள், பங்காளி சண்டையிட்டு, மாலிக் கபூரின் படையெடுப்பிற்கு காரணம் ஆனார்கள். 
ஆனால் இவர் அமைந்த ராஜப்பட்டையை சரியாக பயன்படுத்தி அமைந்தது தான் விஜயநகர சம்ராஜ்யம்.
பழுத்த சிவ பக்தரான இவர், சிவ ஆலயங்களுக்கு மட்டும் அல்ல வைணவ ஆலயங்கள் பலவற்றுக்கும் திருப்பணி செய்துள்ளார். திருவானைக்காவல் கோவில் மூலஸ்தான நுழைவு வாயிலில் உள்ள பாண்டியர் சின்னமாம், இரட்டை கயல் இன்னும் சுந்தரபாண்டிய மன்னரின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவர் செய்த திருப்பணிகள் பல. சிதம்பரம் கோவிலுக்கு பொன் வேய்ந்தவர். திருநெல்வேலி, மதுரை ஆலயங்களிலும் திருப்பணி செய்தவர்.
காஞ்சிபுரம் திருபுட்குழி பெருமாள் கோவில் கல்வெட்டு சுந்தரபாண்டிய மன்னரை கீழ்க்கண்டவாறு புகழ்கிறது.

"வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்

வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்

வாழ்க!
 சோழர் குலத்திற்கு  முடிவு கட்டிய பெருமையும் இவருக்கு தான். இயல்பிலேயே சோழ காதல் கொண்ட எனக்கு, சடையவர்மன் சுந்தரபாண்டியரின்  வரலாற்றில் ஏற்றுக் கொள்ள முடியாத இடமும் அதுதான். இருப்பினும் வரலாற்றின் சக்கரங்கள் சுழன்று கொண்டே இருப்பது. வளர்ச்சி என்று ஒன்று இருந்தால் வீழ்ச்சி இருந்தே தீரும். 
ஆனால் சடையவர்ம சுந்தரபாண்டியன் வரலாற்றில் என்னை மிகவும் கவர்ந்தது அவர் அரங்கன் மீது கொண்ட பகுதி.  ஸ்ரீரங்கம் பெருமாள் மீது ஆழ்ந்த பக்தி‌கொண்டவர். இவர் அரங்கனுக்கு‌ அளித்த கஜ துலாபாரம் சரித்திரத்தில் பிரசித்தி‌ப் பெற்றது. அவர் அரங்கனிடம் கொட்டிய பொன் தான் மாலிக்கபூரை தென்னகம் நோக்கி‌ வரவழைத்தது. அளவுக்கு மீறிய செல்வமும் ஆபத்தை தரும் என்ற பாடத்தை அரங்கன் இவர் மூலம் நடத்தி காட்டினான். 
பிற்கால தமிழ் மன்னர்களில் தவிர்க்க முடியாத ஆளுமையான சடையவர்மன் சுந்தர பாண்டிய மன்னரை அவர் பிறந்தநாளில் வாழ்த்தி போற்றுவோம்.

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு