கிளிஞ்சல் கூடு

வித விதமான  யாத்ரீகர்கள் அலையும் ராமேஸ்வரம் தீவு. கோவிலுக்கு எதிரில் கடல் அக்னி தீர்த்தமாக விரிந்து இருந்தது. அன்று தை அம்மாவசை கூட்டம் அதிகம் இருந்தது. ராமேஸ்வரம் தீவின்  ஒரு கரையில் டீசல் படகுகளும், வள்ளங்களும், கட்டுமரங்களும் நிறைந்து கிடந்த மீனவ குப்பத்தின் ஒரு குடிசையில் தான் அவன் கண்மூடி படுத்து இருந்தான். அவன் பெயர் அய்யனார். கடலாடும் மீனவன். நீண்ட கடற்கரை கொண்ட இந்திய தீபகற்பத்தின் கடற்கரை நெடுக நிறைந்த , ஆனால் சமவெளி மக்களால் அதிகம் கண்டு கொள்ளப்படாத மீனவ கூட்டத்தில் அய்யனாரும் ஒருவன்.  ஓலை குடிசையின் இடுக்குகளில் புகுந்து, மதிய கதிரவன் கண்களை கூச செய்தான். இன்னும் தூக்கம் கண்களில் மிச்சம் இருந்தது அய்யனருக்கு. ஆனாலும் உறங்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தான். புழக்கடையில் அவன் தாய், காட்டாரி பத்து தேய்த்து கொண்டு இருந்தாள். முகங்கழுவி கொண்டு வந்து, சோறு எடுத்து வை ஆத்தா என குரல் கொடுத்தான்.
“ இன்னிக்கு கப்பா சோறு தான் டா. ரேசன் அரிசி வடிச்ச தான் உனக்கு ஆகாது. கடை அரிசி வாங்க தான் சரியா பாடு இல்லியே,பொங்க வேற வருது. உன் அய்த  வேற போன் அடிச்சு, ஊருக்கு வாங்க மதினினா , என்ன செய்றது ஒண்ணும் விளங்கள.”
“மீன் பொரிச்சியா?”
“பொரிக்கல னா உனக்கு சோறு இறங்காதே. அந்த வெஞ்சன கின்னியில் இருக்கு எடுத்து போட்டு தின்னு”
மீனை எடுத்து வேக வைத்த மரவள்ளி கிழங்கு உடன் பிசைந்து தின்றான். அவனுக்கு அது தான் தேவாமிர்த்தமாக இருந்தது. அய்யானாரின் அப்பா சின்ன வயதிலேயே இலங்கை  கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்து விட்டார். அவர் இறந்த போது அய்யனார் ஆறு வயது சிறுவன். சின்ன வள்ளத்தில் ரத்த சகதியில் மீனோடு கிடந்த அப்பாவின் சடலம் அய்யனாருக்கு ஆயுசுக்கும் மறக்காது.  நியாமாக  அய்யானருக்கு கடலை பார்த்தால் கோவம் வரவேண்டும். குறைந்தபட்சம் அருவருப்பு வர வேண்டும்.ஆனால் வாராது. கடல் அவர்களுக்கு மாதா.  மேரி மாதா, அம்மா மாதா எல்லாமே கடல் தான். உடம்பில் படியும் உப்பு காற்றும், ஓங்காரமிடும் கடலின்  அலைகளும் அவர்கள் மூச்சில் கலந்தது.
விறு விறு வென சாப்பிட்டு முடித்து அலையோடும் கடல் ஓரம் அவன் வள்ளத்தை நோக்கி வந்தான். நீல கடலின் அலையில், தூரத்தில் ஒரு டீசல் படகு கடகட விஞ்ச் சத்தத்துடன் கடலில் சென்று மறைந்து கொண்டு இருந்தது. அய்யானாருக்கு அவன் அறியாமல் பெரு மூச்சு வந்தது. இது போல ஒரு டீசல் படகு வாங்கி அதில் தன் அப்பா முத்துக்காளை பேரை எழுதி கடலில் செலுத்த அய்யானாருக்கு ஆசை. அய்யனாருக்கு மட்டும் அல்ல, ஏழ்மையில் உழலும் எல்லா மீனவனின் கனவு அது. ஒரு விசைப்படகு இருந்து ஒரு நடைக்கு 30,000 திற்கு செலவு செய்து டீசல் அடித்தால் போதும், அந்த விசைபடகில் சென்று கிடைக்கும் பாடு என்னும் மீன் பிடிப்பில் ஐம்பது சதவீதம், அந்த விசைப்படகு முதலாளிக்கு தான் சேரும். மீதி ஐம்பது சதவீதம் அந்த படகில் சென்ற மீன் பிடி தொழிலாளர்கள் பிரித்து கொள்வார்கள்.விசை படகு இல்லாத நாட்டு படகு வைத்திருக்கும் மீனவர்கள், கரை வலை மீன் பிடிப்பு என்னும்  வகையில் மீன் பிடிப்பார்கள். இதில் அவ்வளவாக பாடு கிடைக்காது. ஆனால் யாருக்கும் கைக்கட்டி வேலைப் பார்க்க வேண்டாம். ஒரு வகையில் மீனவர்கள் சுதந்திர எண்ணம் கொண்டவர்கள். அதனால் தான் அடக்குமுறை தலை விரித்தாடும் சமவெளி பகுதியில் அவர்களால் நிலை கொள்ள முடியவில்லை. அவர்களை பொருந்தவரை கடல் மாதா ஒரு பொக்கிஷம். அதன் செல்வங்கள் எல்லாருக்கும் பொது. உனக்கு வல்லமை இருக்கா பாடு எடுத்துக்கோ,. இது தான் அவர்கள் கொள்கை. ஆனால் கடாலாடும் மீனவர்கள் தவிர வேறு கடல் சார்ந்த தொழில் புரியும் இடை தரகர்கள், வள்ளம் கட்டுபவார், இவர்கள் மீனவன் என்று அழைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. டீசல் படகு குறித்து யோசித்து கொண்டே தன் சிறு வள்ளத்தின் கயிறுகளை அவிழ்த்தான் அய்யனார். அவன் சேக்காளி பாண்டியும் சேர்த்து கொண்டான். வள்ளத்தை கடலில் தள்ளி,வெண்ணிற அலைகள் அவர்களின் கருத்த மேனியில் சிதறி அடிக்க, இடுப்பளவு தண்ணீர் வந்த பிறகு, பக்கவாட்டு கட்டையை பிடித்து வள்ளத்தில் ஏறி உட்கார்ந்தார்கள். மெல்ல மெல்ல அந்த சிறு வள்ளம் தகாடாய் தெரிந்த ஆழ்கடல் நோக்கி சென்றது. அலையின் ஆட்டம் எல்லாம் கரையில் தான் நடு கடலில், நீல தகடாய் அமைதியாக இருக்கும் ஆழ்கடல். நிலத்திற்கு கரை கடலா, கடலுக்கு கரை நிலமா என்று மனது குழப்பும். நாற்புறமும் சூழ்ந்த நீலகடல் அந்த பாமர மக்கள் அறியாத மோன ஞானத்திற்கும் அழைத்து செல்லும்.
தூரத்தில் அய்தாம் திட்டு, இந்திய எல்லை என்னும் போர்டு தெரிந்தது. அதற்கு நேராக புளோரன்சன்ட் பெயிண்ட் அடித்த பேரல்கல் மிதந்து கொண்டு இருந்தன. அதை பார்க்கும் போது எல்லாம் அய்யனாருக்கு அவன் அப்பா ஞாபகம் தான் வரும். இருட்டில் இந்த கோட்டை வழிமாறி தாண்டி தான் , சூடப்பட்டு இறந்து போனார் அவர். அதுவும் ஒரு பொங்கல் நேரம் தான். நமக்கு உழவர்கள் வைக்கும் சூரிய பொங்கல் பற்றி தானே தெரியும். மீனவர்கள் வைக்கும் கடல் பொங்கல் பற்றி பெரும்பாலும் தெரியாது. மீனவர்கள் பெரும்பாலும் பெண் தெய்வ வழிபாடு கொண்டவர்கள். அப்படி ஒரு பெண் தெய்வம் இராமநாதபுரம்  மாவட்டத்தில், மோர்ப்பண்ணை என்னும் இடத்தில் உண்டு.  அங்கு எழு பானைகளில் பொங்கல் வைத்து மீனவர்கள் வழிபடுவார்கள். அய்யனார் அம்மா பிறந்த ஊர் அது.  அய்யனார் அப்பா குண்டு அடிப்பட்டு சாவதற்கு முன்,பொங்கலை ஓட்டி புது சட்டை வேண்டும் என்று அவன் தகப்பனிடம் அய்யனார் அழுது ஆர்ப்பாட்டம் செய்தான் . இவன் அழுகையை நினைத்து தான் ,அவர் பாடு கிடைக்காமல், எல்லை தாண்டி போனாரோ என பலசமயம் தோன்றும் அய்யனாருக்கு.கடலை வெறுக்க தெரியாதவன், தன்னை வெறுத்து கொள்வான் அந்த எண்ணம் தோன்றும் போது எல்லாம். எல்லையை தாண்டாமல் யு வடிவில் வலையை சொருகி வைத்தார்கள். கரைவலை மின் பிடிப்பு என்றால்,  முதலில் கடற்கரையிலிருந்து கடலில் குறிப்பிட்ட தொலைவுக்கு சிறிய படகில் (எஞ்சின் பொருத்தப்படாத) சென்று ஆங்கில 'யு' வடிவில் கரை வலையை அமைப்பார்கள்.பின்னர் வலையின் இரு புறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாக கரையில் நின்று இழுப்பார்கள் . இதிலேயே அய்யனாருக்கு நல்ல பாடு கிடைத்தால், ஒரு நாளைக்கு 1000 ரூபாய் நிற்கும். ஆனால் இப்போது பாடு சரியாக கிடைப்பது இல்லை. சில மீனவர்கள் நாகப்பட்டிணம் துறைமுகம் சென்று விட்டார்கள். சிலர் சென்னையில் காசி மேடு போன்ற இடங்களில் பெரிய விசைப்படகு வைத்திருக்கும்  மீனவர்களிடம் வேலைக்கு சென்று விட்டார்கள். எங்கு போனாலும் கடலை சுற்றி தான் அவர்கள் வாழ்க்கை. அய்யனாருக்கு அப்படி செல்ல பிடிக்கவில்லை. அவன் எண்ணம் முழுவதும் ராமேஸ்வரத்தில் இருந்தது. காரணம் ஊர் பாசம் மட்டும் அல்ல. அவன் அத்தை மகள்  நித்யா. அய்யனாரின் அத்தை கணவரான மாமாவிற்கு சொந்தமாக விசைப்படகு இருந்தது. ஒரு விசைப்படகு என்பது லட்சம் வரை செலவு பிடிக்கும். பாரம்பரிய மீனவர்கள் விசை படகு வாங்க அரசு நாற்பது லட்சம் வரை மானியம் தருகின்றது. அவர் மாமாவால் நாற்பது லட்சம் திரட்ட முடிந்தது. அவர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பட்டுக்கோட்டை பக்கம் இறால் பண்டு அனைத்து தந்தார். அதில் அப்போதே லட்சக்கணக்கில் லாபம் பார்த்தார். இந்திய கடல்களின் இறால்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆக தொடங்கிய காலக்கட்டம் அது. எந்த தொழிலும் அதன் எதிர்காலத்தை கணித்து அதற்கு ஏற்ப செயல்படுபவன் சோடை போவது இல்லை. அய்யனாரின் மாமா சிவலிங்கம் அப்படிப்பட்டவர். முதலில் அவர் ஊர் தாண்டி இறால் பண்டு அமைத்தது, அந்த பகுதி மீனவ குப்பங்களில் சலசலப்பை கிளப்பியது. ஆனால் சிவலிங்கத்தின் பணம் ஊர் நாட்டாம்மைகளின் வாயை அடைத்தது.
அய்யனாரும் நித்யாவின் சிறு வயதில் கடற்கரையில் கிளிஞ்சல் கூடு வைத்து, விளையாடுவார்கள். கிளிஞ்சல் கூடுகள் கண்டால், அய்யனாருக்கு நித்யா ஞாபகம் தான் நெஞ்சில் நிறையும்.  அய்யனாரும் நித்யாவும் ராமேஸ்வர தீவின் அரசு பள்ளியில் தான் படித்தார்கள். அப்பாவின் இறப்பிற்கு பின் இரவில் தன் தாய்மாமாவோடு கடலாட சென்றுவிடுவதால் பள்ளியில் நன்றாக தூங்கி விடுவான். அய்யனார். அப்போது எல்லாம் அய்யனாருக்கு புரியாத பாடங்களை நித்யா தான் சொல்லி தருவாள். சொல்லி தரும் போது தலையில் குட்டுவாள். அது அய்யனாருக்கு  தன் தலையில் தட்டும் அப்பாவின் பாசத்தை நினைவுபடுத்தும். அய்யனாரால் படிப்பை தொடர முடியவில்லை. படிப்பை நிறுத்திய உடன் நித்யா வந்து கெஞ்சினாள். அப்பாவிடம் காசு வாங்கி தருவதாக கூறினாள். அது அய்யனாரின் அம்மா காட்டாரி கோபத்தை கிளற நன்றாக வாங்கி கட்டி கொண்டு சென்றவள் தான். அதன் பிறகு நித்யாவை எப்போதாவது இராமநாதபுரம் செல்ல பேருந்துக்கு நிற்கும் போது பார்ப்பான். அவள் இப்போது திருச்சி கல்லூரியில் பொறியியல் படிப்பதாக கேள்விப்பட்டான். அவள் தனக்கு கிடைக்கும் உயரத்தில் இல்லை என்றாலும் நித்யா வின் நினைவு தான் எப்போதும்.
திரும்ப கரைக்கு வந்தார்கள் நாளை மதியம் தான் தூண்டிலை இழுக்க வேண்டும். கடற்கரையில் பதிந்த கிளிஞ்சல் காலை எரடியது. நித்யாவின் நினைவு நெஞ்சில் அலை மோத, ஆசையாக அந்த கிளிஞ்சலை கையில் வைத்து மூடினான். இதை கவனித்த பாண்டி சட்டென்று சொன்னான்.
“எலெய் உன் அய்த மக நித்யாவுக்கு காரைக்கால்ல கண்ணாலம் பேசி முடிச்சு இருக்காங்களாம். மாபுள்ள நல்ல வசதியாம்டே.”
கையில் பிடித்த, கிளிஞ்சல் சிலுவையாக குத்தியது. எதிர்பார்த்த விஷயம் தான் ஏற்று கொள்ள தான் இந்த மனதால் முடியவில்லை.
கல்யாண நாளும் வந்தது. மணமேடையில் நித்யா வேறு ஒருவன் மனைவி ஆகி போனதை கூட அவனால தாங்கி கொள்ள முடிந்தது. ஆனால் யாரோ போல் நித்யா பார்த்த பார்வையை அவனால் தாங்க முடியவில்லை. அவன் பெத்த தகப்பன் அவனை நிராகரித்தது போல் ஒரு வலி நெஞ்சில் கிளர்ந்து. வலியை மறக்க குடிக்கு அடிமையானன். குடியில் அவன் கஷ்டம் அனைத்திற்கும் பணம் தான் காரணம் என்ன தோன்றியது. நித்யா தனக்கு கிடைக்காமல் செய்த பணம் தனக்கு வேண்டும் என அராற்றினான். இவன் நிலை கண்டு இவன் அம்மா துவண்டு போனாள்.  குடித்து விட்டு நட்சத்திரம் மின்னும் கடற்கரை வானை பார்த்து கொண்டு இருந்த போது தான் அவனை அனுங்கினான் சூசை.
“அய்யானரு, சூளுவா துட்டு பார்க்க ஒரு வழி சொல்லட்டா”
“என்னா” வாய் குளரினாலும் புத்தி தெளிவாக இருந்தது அய்யனாருக்கு.
“இங்க பவள பாறை கிடைக்கும் அய்யானாரு. சத்தம் கேட்காத டேட்டநெட்டர் நான் வாங்கியாரென். நீ பவள பாறை கொண்டு வந்தா போதும். ஒரு நடைக்கு ரெண்டு லட்சம்.”
ஆசை கூடு கட்டியது அய்யானருக்கு.சூசையின் திட்டத்திற்கு ஒத்து கொண்டான். ஆனால் போகும் வழியிலேயே, கையில் டேட்டனெட்டர்கள் உடன் கடலோர காவல் படையிடம் மாட்டி கொண்டான். தன் பிள்ளை பெயரும் கெட்டு, சிறைக்கு சென்றதும் தாளாமல் மருகியே அவன் தாய் காட்டாரி செத்தாள்.
சிறையில் இருந்து வந்த அய்யனாரை வரவேற்க யாரும் இல்லை. தாய்க்கு பின் தாய் மாமா என அவர் வீட்டுக்கு சென்றான். மாமா பக்கவாதம் வந்து கிடந்தார். அவர் மகள் செல்லி அப்பனுக்கு வெந்நீர் வைத்து ஊற்றி கொண்டு இருந்தாள். செல்லி ஒட்டி கொள்ளும் கருப்பு. செல்லி மீது அய்யனாருக்கு எந்த காதல் உணர்வு வந்தது இல்லை. இந்த பொச கெட்ட காதல் அழகு பார்த்து தானே வரும். அய்யானரை பார்த்தவள், வா மாமா என ஓடி வந்தாள். சாப்பிட்டியா என கேட்டாள். உள்ளே அழைத்து தட்டில் சோறு போட்டு கொடுத்தாள். அவள் கைப்பக்குவத்தில் அவன் அம்மா தெரிந்தாள். என்றோ ஒரு அம்மாவாசையில் அய்யனாரின் கையில் சிலுவையாய் குத்திய கிளிஞ்சல் கூடு, இப்போது அவன் மனதில் ரோஜாவாக மலர தொடங்கியது. அந்த மலர்தலை அங்கு வீசிய உப்பு காற்றும் உணர தொடங்கியது.
(முற்றும்)

.

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)