மகளிர் தினம்
மகளிர் தினம் என்பதே மேற்கத்திய சிந்தனை தான். தமிழ் சமூகத்தின் பெண்கள் பற்றி நினைத்து பார்க்கின்றேன்.
சங்க காலத்தில் காக்கைபாடினியர், அவ்வையார் போன்ற பெண் பால் புலவர்கள் இருந்தார்கள். தமிழ் சமூகம் பெண்களை அடிமை படுத்த வில்லை. அதனால் தான் ஒரு மன்னனின் அவையில் சாதாரண பெண், அதுவும் வேறு நாட்டு பெண் தன் கணவன் மரணம் குறித்து கேள்வி எழுப்பி நியாயம் கேட்க முடிந்தது. அடல்மகளிர் கொடுத்த பல தானங்கள் குறித்து பல கல்வெட்டுகள் உள்ளன. அவர்களும் தனக்கு பிடித்த ஒருவனை கணவராக ஏற்று அவனோடு வாழ்ந்தார்கள். உதாரணம் கோவலன், மாதேவி. இடைக்காலத்தில் கூட பெண்கள் அதிகாரிச்சிகளாகஆக அரசு அமைப்பில் அதிகாரம் செலுத்தி உள்ளார்கள்.தாய் வழி சமூகமான தமிழ் சமூகம் என்றும் பெண்ணை ஏத்தியே தொழுதுள்ளது. கொற்றவை என அன்னையரில் மூத்தவள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளாள். குமரியாகவும் அவள் வணங்கப்பட்டுள்ளாள். உறையூரில் வெக்காளி அம்மன் கோவிலும், கமலவள்ளி நாச்சியார் கோவிலும் எல்லாருக்கும் தெரியும். செல்லாண்டி அம்மன் பற்றி சிலருக்கு தான் தெரியும். யதார்த்தமாக அந்த கோவில் பற்றி தெரியாமலேயே அங்கு சென்று நின்றேன். சேர, சோழ, பாண்டியருக்கு நிலம் பிரித்து தந்தவள் அந்த தேவி. தன்னையும் தன் மக்களுக்கு, தலை, முண்டம், பாதம் ஆக பங்கு போட்டு தந்துவிட்டாள். மூத்தகுடி பாண்டிய குடியாம் அதனால் தலை மதுரையில் இருக்கின்றதாம். அடுத்த குடி சோழர் குடி என்று உறையூரில் உடல் ,சோழனுக்கு ஒதுக்கப்பட்ட கீழ் திசை பார்த்து உள்ளது. சேரனுக்கு உரிய பாதம் வஞ்சியில் உள்ளதாம். தொன்ம கதை தான். இருந்தாலும் சிலிர்ந்து விட்டது எனக்கு. தாய் வழி சமூகம் என்பதை மறந்து விட்டாலும், அதன் எச்சங்கள் கொற்றவையாக, செல்லாண்டியாக இந்த பூமியில் நிலைப்பெற்றுவிட்டது. இது நித்தம் மகளிர் தினம் கொண்டாடும் தாய் பூமி.
Comments
Post a Comment