உலக வன நாள்

இன்று உலக வன நாள். காடுகள் இன்றி அமையாதது உலகு. காடுகளின் ராஜா சிங்கம் என்றாலும், என்னை பொருத்தவரை காடுகளின் பிதாமகன் யானை தான். யானை, தனது வலசை பாதையில், தன் சாணத்தின் மூலம் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் அளவிற்கு, வனப்பரப்பின் எல்லையை விஸ்தரிக்க, விதைகள் தூவி செல்லும் . வேழக்காடுகள் என்றே ஊட்டி மலை பகுதியை பழம் கல்வெட்டுகள் குறித்து இருக்கின்றன. ஓடுகின்ற நதிகளின் மூலம் எல்லாமே காடுகள். காடுகள் அழிந்தால், நீரும் உணவும் இன்றி பஞ்சத்தில் மாள வேண்டியது தான். அடர்த்தியான வேழ காடுகள் மட்டும் அல்ல, கடற்கரை ஓரம் வளரும் குட்டை மரங்கள் உள்ள அலையாத்தி காடுகள், ஊசி முனை காடுகள் என காடுகளிலும் எத்தனை வகை. 
தனிப்பட்ட முறையில் எனக்கு காடுகளின் அமைதி, தாய்மடியை போன்றது. மதுரையில் இருக்கும் போது பழமுதிர்ச்சோலை அடிக்கடி செல்வது வழக்கம். சூரிய ஒளிக்கூட எளிதாக ஊடுருவமுடியாத பழமுதிர்ச்சோலை மலையும், அங்கே ஓடி விளையாடும் வானரங்களும், தனி சந்நிதி கொண்டுள்ள வேலும் என்னை சங்க காலத்திற்கே அழைத்து போய்விடும். சங்க கால வேல் கோட்டத்திற்கு இன்றும் சாட்சியாய் இருப்பது பழமுதிர்சோலையும், சாளுவகுப்பம் முருகன் கோவிலும் தான். அதற்கு அடுத்து என்னை ஈர்த்தது, கோடியக்கரை. குட்டை மரங்கள் உள்ள கடற்கரை ஒட்டிய காடு. எந்த நூற்றாண்டிலோ கப்பலில் இருந்து தப்பி காடுக்குள் புகுந்த குதிரைகளின் வாரிசுகள் காட்டு குதிரைகளாய் கனைத்து கொண்டு ஓட , புள்ளி மான்களும் ஓநாய்களும் சுற்றி திரியும் காடு. வழி கண்டுப் பிடிப்பது கடினம்.
 ஒரு மழை பெய்யும் நாளில், கோடியக்கரை காட்டின் வாட்ச் டவரில் இருந்து கடலின் மேல் பெய்யும் மழையை ஒருபுறமும், புயல் காற்றில் ஆடும் குட்டை மரங்களின் நர்த்தனம் ஒருபுறம் என நான் கண்ட காட்சி இறுதி வரை என்னால் மறக்க முடியாது. வனம் உலகின் பொக்கிஷம். ஒரு குருவிக்கு நீங்கள் வைக்கும் நீரும், கடற்கரை, வனம் ஆகிய பகுதிகளில்  நெகிழியை தவிர்த்தலும் கூட வனப்பாதுக்காப்பை  உறுதி செய்யும். உலகின் உயிர்முடிச்சு வனங்கள் தான். வனம் காப்போம்.
#உலக_வன_நாள்

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு