திருமுறை கண்ட சோழர்.


சோழப் பேரரசின் கொடி வெற்றிக் காற்றில் பறந்துகொண்டிருந்த காலம் அது.
மிக சமீபத்தில் தான் சோழ தேசம், திருப்பதியை சுற்றி இருந்த சீட் புலி நாடு, நுளம்ப தேசம் ஆகியவற்றை வெற்றி கொண்டு இருந்தது.
அந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர் பரமன் மழபாடியார்.
மன்னர் இராஜராஜ சோழனுக்கு நெருக்கமான வீரத் தலைவன் மட்டுமல்ல; இளவரசி குந்தவைப் பிராட்டியாருக்கும், அவரது கணவர் வந்தியத்தேவனுக்கும் மிகவும் நெருக்கமானவர்.
நுளம்ப தேச வெற்றிக்குப் பின்னர், அந்த வெற்றியை அளித்த அவரது இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்தி கடன் நிறைவேற்றும் பொருட்டு பரமன் மழபாடியார் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் ஜஜ்ஜந்தி துர்க்கைக்கு ஆயிரம் ஆடுகளை சாவா மூவா பேராடுகளாக காணிக்கையாக அளிக்க முடிவு செய்தார்.
அந்த விழாவிற்காக அவருடைய மனைவி கங்கம்மாளும் உடன் வந்திருந்தாள்.கங்கம்மாளின் பிறப்பிடம் தில்லைச் சிதம்பரம்.
ஆனால் அவளது பிறப்பின் பெருமை தில்லைவாசி என்பதோடு முடிந்துவிடவில்லை.
அவள் வந்த மரபின் நினைவு இன்னும் தொன்மையானது.
சோழ நாட்டின் எருக்கத்தம்புலியூரில் பிறந்து, யாழின் நரம்புகளில் சிவபக்தியை இசையாக்கிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மரபின் வழித்தோன்றலாகக் கங்கம்மாள் தன்னை அறிந்திருந்தாள்.
எருக்கத்தம்புலியூர்—திருநீலகண்டேஸ்வரரும் நீலமலர்க்கண்ணம்மையும் அருள்பாலிக்கும் திருத்தலம். அங்கே பாணர் மரபில் தோன்றிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்க சூளாமணியுடன், யாழிசையால் சிவபெருமானைப் பாடிப் பரவியவர் என்று சைவ மரபு போற்றுகிறது.
திருஞானசம்பந்தருடன் தலயாத்திரை மேற்கொண்டு, அவர் அருளிய பதிகங்களுக்கு யாழிசை அமைத்து பாடிய அந்த இசை மரபு, தலைமுறைகளைத் தாண்டி வந்ததாகக் கங்கம்மாளின் குடும்பம் நம்பி வந்தது.
அவளது பாட்டி அடிக்கடி கூறுவாள்:
“நம் முன்னோர் யாழை மீட்டவர்கள் மட்டுமல்ல, தமிழின் பண்களைத் தலைமுறைகளுக்குக் கொண்டு சென்றவர்கள்.”
அந்த வார்த்தைகள் கங்கம்மாளின் சிறுவயது முதலே அவள் நெஞ்சில் பதிந்திருந்தன.
அவளது நினைவில் தில்லை எப்போதும் இருந்தது.
தில்லை நடராஜர் கோயிலின் மணியோசை அவளது சிறுவயது நினைவுகளோடு கலந்திருந்தது.
சிறுமியாக இருந்தபோது கோயிலின் பிரகாரங்களில் ஓடிய நாட்கள்.
தீபாராதனையின் ஒளியில் மின்னிய நடராஜரின் திருமேனி.
மண்டபங்களில் ஒலித்த தேவாரப் பதிகங்கள்.
பழைய சிவாச்சாரியார்கள் சொல்லிய கதைகள்.
கோயிலின் எங்கோ ஒரு பகுதியில் பழைய ஓலைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகக் கேட்ட இரகசியமான பேச்சுகள்.
அவற்றுள் ஒரு செய்தி மட்டும் அவளது நினைவில் ஆழமாகப் பதிந்திருந்தது.
“தில்லையின் ஒரு மறை அறையில், நாயன்மார்கள் அருளிய தேவாரப் பதிகங்களின் பழைய பனை ஓலைகள் இருக்கின்றன…”
அது உண்மையா?
அல்லது பெரியவர்கள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கூறிவந்த ஒரு பழைய நம்பிக்கையா?
கங்கம்மாளுக்குத் தெரியவில்லை.
ஆனால் அவள் அந்தச் செய்தியை மறக்கவில்லை.
ஆண்டுகள் கடந்தன.
அவள் திருமணம் செய்து பரமன் மழபாடியாருடன் காஞ்சிபுரத்திற்கு வந்தாள்.ஆனால் தில்லை மட்டும் அவளது நினைவிலிருந்து ஒருபோதும் அகலவில்லை.
பரமன் மழபாடியார் ஜஜ்ஜந்தி துர்கா தேவிக்கு சாவா மூவா பேராடுகள் நிவந்தம் விடும் அந்த நாளில் கச்சபேஸ்வரர் கோயிலில் பெருவிழா நடைபெற்றது.
வேத முழக்கமும், மேளதாளமும், பக்தர்களின் கூட்டமும் கோயில் முழுவதையும் நிரப்பியிருந்தன.
அங்கே அந்த நிகழ்விற்கு வந்திருந்த குந்தவைப் பிராட்டியாரை கங்கம்மாள் சந்தித்தாள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த இருவரும் அன்புடன் உரையாடினர்.
குந்தவை கங்கம்மாளிடம் அவளது காஞ்சி வாழ்க்கையைப் பற்றி கேட்டாள்.
“கங்கம்மா, தில்லையை விட்டு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் தில்லையை நினைத்துக் கொண்டிருக்கிறாயா காஞ்சிபுர வாழ்க்கை பழகி விட்டதா?”
கங்கம்மாள் புன்னகைத்தாள்.
“அம்மா… சில ஊர்களை விட்டு வரலாம். ஆனால் அதன் நினைவுகள் நம்மை எப்போதும் விடுவதில்லை “
“தில்லை அப்படிப்பட்டதா?”
“எனக்கு அப்படி பட்ட ஊர் தான் அம்மா.”
சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்.
அப்போது கங்கம்மாளின் மனதில் பல ஆண்டுகளாக ஆழத்தில் புதைந்து கிடந்த அந்த நினைவு மீண்டும் மேலெழுந்தது.
அவள் குந்தவையின் அருகில் சற்றே நெருங்கினாள்.
“அம்மா… ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.”
“சொல்லு கங்கம்மா.”
“நான் சிறுமியாக இருந்தபோது தில்லை நடராஜர் கோயிலில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயம் என் நினைவில் இன்னும் இருக்கிறது.”
குந்தவை கவனமாகக் கேட்டாள்.
“என்ன விஷயம்?”
கங்கம்மாள் சுற்றிலும் பார்த்தாள். பின்னர் குரலைத் தாழ்த்தினாள்.
“தில்லை நடராஜர் கோயிலில் ஒரு மறை அறை இருப்பதாகக் கூறுவார்கள்.”
குந்தவையின் கண்களில் ஆர்வம் பிறந்தது.
“மறை அறையா?”
“ஆம். அந்த அறைக்குள் பழைய பனை ஓலைச் சுவடிகள் இருப்பதாகவும்… அவற்றில் நாயன்மார்கள் பாடிய தேவாரப் பதிகங்கள் இருப்பதாகவும் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”
குந்தவை சில நொடிகள் பேசவில்லை.
“நீ அதை நேரில் பார்த்திருக்கிறாயா?”
“இல்லை அம்மா.”
கங்கம்மாளின் குரலில் தயக்கம்.
“ஆனால் அந்தச் செய்தி என் மனதில் மட்டும் மறைந்து கிடந்தது. ஆண்டுகள் கடந்தாலும் அதை மறக்க முடியவில்லை.”
“ஏன் இப்போது இதை என்னிடம் சொல்கிறாய்?”
கங்கம்மாள் குந்தவையின் கண்களை நேராகப் பார்த்தாள்.
“இன்று உங்களைப் பார்த்தபோது… இந்தச் செய்தி உங்களிடம் சொல்லப்பட வேண்டிய செய்தி என்று என் மனம் சொன்னது.”
அந்தச் சொற்கள் குந்தவையின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன.
“தெய்வ தமிழ் மறையின் குரல்… இன்னும் தில்லையில் மறைந்திருக்கிறதா?” இதை பற்றி தன் ஆருயிர் தம்பி அருள்மொழி யிடம் உடனடியாக பேச வேண்டும் என குந்தவை பிராட்டி முடிவு செய்தார்.
காஞ்சியிலிருந்து தஞ்சைக்குத் திரும்பியவுடன் குந்தவை நேராக இராஜராஜனைச் சந்தித்தாள்.
“தம்பி, உன்னிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்.”
“என்ன அக்கா?”
குந்தவை கங்கம்மாள் கூறிய அனைத்தையும் விவரித்தாள்.
“தில்லையில் தேவார ஓலைகள் மறைந்திருப்பதாக கங்கம்மாள் கூறுகிறாள். அவை உண்மையில் இருந்தால், அவை நம் தமிழின் அரிய பொக்கிஷம்.”
இராஜராஜன் சிறிது நேரம் சிந்தித்தார்.
“தேவாரம்…” “ நாயன்மார்கள் பாடிய தேவாரம்” அவை வெறும் பக்தி பாடல்கள் அல்ல. இந்த சோழ நாகரிகத்தின் ஆன்மா. அவை கண்டிப்பாக மீட்க பட வேண்டும்.
அவரது முகத்தில் உறுதி தோன்றியது.
“அந்தப் பாடல்கள் நம் கோயில்களில் மீண்டும் ஒலிக்க வேண்டும்.”
“அதற்காகத்தான் உன்னிடம் வந்தேன் தம்பி.”
இராஜராஜன் உடனடியாக முடிவு செய்தார்
“இந்தப் பணியை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.”
அவர் தனது நம்பிக்கைக்குரிய சிவபக்தரும் திருநாரையூர் பொல்லா பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியை அழைத்தார். குந்தவை பிராட்டி சொன்ன தகவலை அவரிடம் பகிர்ந்து கொண்டார்.
இராஜராஜனுடன் நம்பியாண்டார் நம்பியும், வந்தியத்தேவனும், பரமன் மழபாடியாரும் தில்லையை நோக்கிப் புறப்பட்டனர்.
பயணத்தின் போது வந்தியத்தேவன் பரமன் மழபாடியாரைப் பார்த்து சிரித்தார்.
“மழபாடியாரே, இதுவரை நாம் போர்களுக்காகப் பயணம் செய்தோம். இப்போது ஓலை தேடிப் பயணம் செய்கிறோம்.”
பரமன் சிரித்தான்.
“போர் வெற்றி காலம் கடந்து பேச படாது சமந்த நாயகரே! ஆனால் கங்கம்மாள் கேள்வி பட்ட படி உண்மையில் தேவார திருமுறைகள் தில்லையில் கண்டு எடுக்கப்பட்டால், அவை காலம் கடந்து பேச படும். " பரமன் பதிலுரைத்தான். 
இராஜராஜன் அவர்களின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு சொன்னார்:- 
“உண்மை தான். திருத்தொண்டர் புராணம் சைவத் தொண்டர்களின் தன்னலமற்ற வாழ்வைச் சொல்லும் பெரும் களஞ்சியம். மகள், மனைவி, மகன், செல்வம், உடல் எனத் தமக்குப் பிரியமான அனைத்தையும் சிவனடியாருக்காகத் தியாகம் செய்த நாயன்மார்களின் கதைகள், “எதுவும் நமக்குச் சொந்தமல்ல” என்ற உயர்ந்த நெறியை உணர்த்துகின்றன.

செல்வமும் அதிகாரமும் நிலையற்றவை; இறைத்தொண்டும் பற்றின்மையுமே நிலையானவை. வெற்றியைப் பெற்றும் அதில் மமதை கொள்ளாமல், தாமரை இலைத் தண்ணீர்போல் வாழ்ந்த இந்த இறையாண்மையே சோழ தேசத்தின் உயர்ந்த நாகரிகம். அந்த உயர்ந்த நாகரிகத்தின் ஊற்று கண்ணான  தேவார பாடல்கள் நம் காலத்தில் மீட்க பட்டால் அது நம் பாக்கியம்”

 “ என்றார்.
தில்லை நடராஜர் கோயிலை அடைந்த அவர்கள், கங்கம்மாள் கூறிய பழைய அடையாளங்களின் அடிப்படையில் அந்த மறை அறையைத் தேடினர்.
பல இடங்கள் ஆராயப்பட்டன.
இறுதியில் பழமையான கல் அமைப்பின் பின்னால் மறைந்திருந்த ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கோயிலின் அந்தப் பழமையான பகுதிக்குச் சென்றனர்.
அங்கே சில தில்லை மூவாயிரவர் அவர்களை எதிர்கொண்டனர்.
நம்பியாண்டார் நம்பி பணிவுடன் கூறினார்:
“அரசரின் ஆணைப்படி சில பழைய ஓலைச் சுவடிகளைத் தேட வேண்டியுள்ளது.”
ஒரு மூத்த தில்லை அந்தணர் முன்னே வந்தார்.
“அரசரின் ஆணை என்றாலும், இந்தப் பகுதி தலைமுறைகளாக எங்கள் பாதுகாப்பில் உள்ளது. இங்கே யாரும் விருப்பம்போல் நுழைய இயலாது.”
வந்தியத்தேவரின் கை இயல்பாக வாளின் பிடியைத் தொட்டது.
ஆனால் இராஜராஜர் கையசைவால் அவரைத் தடுத்தார்.
இராஜராஜர் அமைதியாகக் கேட்டார்:
“அப்படியானால், அதைத் திறப்பதற்கான முறை என்ன?”
மூத்த அந்தணர் சிறிதும் தயங்காமல் பதிலளித்தார்:
“இந்தக் கதவுக்குப் பூட்டு இட்டவர்கள் மூவர் முதலிகள். அவர்கள் நேரில் வந்து கதவைத் திறக்கச் சொன்னால்தான் நாங்கள் திறப்போம்.”
நம்பியாண்டார் நம்பியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
“மூவர் முதலிகள்…”
அவர் மெதுவாக உச்சரித்தார்:
“திருஞானசம்பந்தர்… திருநாவுக்கரசர்… சுந்தரமூர்த்தி நாயனார்…”
அந்தணர் தலையசைத்தார்.
“ஆம். அவர்களே.”
ஒரு கணம் அங்கே அமைதி நிலவியது.
இராஜராஜர் சிரித்தார்.
அந்தச் சிரிப்பில் கோபம் இல்லை.
அறிவுக்கூர்மை இருந்தது.
“அப்படியா?”
என்று மட்டும் கேட்டார்.
அந்தணர்கள் அமைதியாக நின்றனர்.
இராஜராஜர் திரும்பி நம்பியாண்டார் நம்பியைப் பார்த்தார்.
“நம்பி அடிகளே…”
“அரசே?”
“மூவர் முதலிகள் வர வேண்டும் என்கிறார்கள்.”
நம்பி குழப்பத்துடன் பார்த்தார்.
“ஆம் அரசே. ஆனால்…”
இராஜராஜர் புன்னகைத்தார்.
“அவர்களை நாம் அழைத்து வருவோம்.”
அடுத்த சில நாட்களில் தில்லையில் ஒரு வியப்பான ஏற்பாடு தொடங்கியது.
சிற்பிகள் அழைக்கப்பட்டனர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரின் பொற்சிலைகள் உருவாக்கப்பட்டன.
அவை வெறும் சிலைகள் அல்ல.
ஒவ்வொரு முகத்திலும் அவர்களின் பக்தியின் தனித்தன்மை பிரதிபலிக்க வேண்டும் என்று இராஜராஜர் அறிவுறுத்தினார்.
சம்பந்தரின் முகத்தில் குழந்தைத் தெய்வீகம்.
அப்பரின் முகத்தில் தவத்தின் ஆழம்.
சுந்தரரின் முகத்தில் இறைவனோடு கொண்டிருந்த நெருக்கத்தின் உரிமை.
சிலைகள் தயாரான நாள் தில்லை நகரமே திருவிழாக் கோலமெடுத்தது.
மேளதாளங்கள் முழங்கின.
வேத முழக்கங்கள் எழுந்தன.
தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டன.
மூன்று பொற்சிலைகளும் அழகிய அலங்காரத்தில் பல்லக்குகளில் வைக்கப்பட்டன.
இராஜராஜர் தானே அந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்.
தில்லை வீதிகளில் மக்கள் திரண்டனர்.
“சம்பந்தர் வந்தார்!”
“அப்பர் வந்தார்!”
“சுந்தரர் வந்தார்!”
என்று முழக்கங்கள் எழுந்தன.
நம்பியாண்டார் நம்பியின் கண்களில் கண்ணீர்.
அவர் மெதுவாகக் கூறினார்:
“அரசே… பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் தில்லையின் வீதிகளில் நடந்து செல்கிறார்கள் போலிருக்கிறது.”
இராஜராஜர் பதிலளித்தார்:
“அவர்கள் எப்போதும் இங்கேதான் இருந்தார்கள், நம்பியே.
அவர்களின் உடல் மட்டும் இல்லை. அவர்களின் குரல் இருக்கிறது.”
ஊர்வலம் மெதுவாக அந்த மறை அறையின் வாசலை அடைந்தது.
அங்கே தில்லைவாழ் அந்தணர்கள் காத்திருந்தனர்.
இராஜராஜர் மூன்று பொற்சிலைகளையும் நோக்கினார்.
பின்னர் அந்தணர்களை நோக்கி உரக்கக் கூறினார்:
“இதோ… மூவர் முதலிகளும் வந்துவிட்டார்கள்.”
அந்தணர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
மன்னன் மீண்டும் கூறினார்:
“நீங்களே சொன்னீர்கள் அல்லவா?
மூவர் முதலிகள் நேரில் வந்தால் கதவைத் திறப்போம் என்று.
இதோ சம்பந்தரும் வந்துவிட்டார்.
அப்பரும் வந்துவிட்டார்.
சுந்தரரும் வந்துவிட்டார்.
இனி கதவைத் திறக்கலாமே?”
அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் அமைதியாக நின்றனர்.
அந்தணர்களிடம் இனி மறுப்பதற்குச் சொல் இல்லை.
மூத்த அந்தணர் மெதுவாக முன்வந்து கதவின் பூட்டைத் தொட்டார்.
பல ஆண்டுகளாகத் திறக்கப்படாத அந்தப் பூட்டு அசைந்தது.
கடக்…
என்ற ஓசையுடன் கதவு திறந்தது.
அறைக்குள் நுழைந்த நம்பியாண்டார் நம்பி விளக்கை உயர்த்தினார்.
உள்ளே பழைய பெட்டிகள்.
பல ஆண்டுகளாக யாரும் தொடாததுபோல் தூசிப் படிந்திருந்தன.
ஒரு பெட்டி திறக்கப்பட்டது.
அதற்குள் பனை ஓலைகள்.
நம்பியாண்டார் நம்பி நடுங்கிய கைகளால் ஒரு ஓலையை எடுத்தார்.
எழுத்துகளைப் பார்த்ததும் அவரது கண்கள் கலங்கின.
“அரசே…”
இராஜராஜன் அருகில் வந்தார்.
“என்ன நம்பியே?”
“இவை… தேவாரத் திருப்பதிகங்கள்!”
இராஜராஜன் சில நொடிகள் அமைதியாக நின்றார்.
பின்னர் அந்த ஓலைகளை இரு கைகளாலும் ஏந்தி,
“இவை இனி இருளில் இருக்கக் கூடாது,” என்றார்
“தமிழகத்தின் ஆலயங்களில் மீண்டும் தேவார பதிகங்கள்ஒலிக்க வேண்டும். நம்பி அடிகளே! நீங்களே இந்த தேவார பாடல்களை தொகுக்கும் பெரும் பணியை ஏற்க வேண்டும். தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து இசைப்பதற்காக ஓவ்வொரு கோவிலிலும் பிடாரர்கள் நியமனம் செய்ய வேண்டும் மேலும் நாம் தற்போது எழுப்பி கொண்டு இருக்கும் பெருவுடையார் கோவிலிலும் தினமும் தேவார பதிகம் ஓத பிடாரர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும் ” என்றார். மன்னரின் உத்தரவு ஓலை நாயகத்தால் பதிவு செய்யப்பட்டது.

காலம் நகர்ந்தது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் விண்ணைத் தொடும் பெருமையுடன் எழுந்தது.
ஐப்பசி சதய விழா பெரிய கோவில் குடமுழுக்குடன் சிறப்பாக நடைபெற்றது.
மன்னர் இராஜராஜன் அரியணையில் அமர்ந்திருந்தார்
அருகில் குந்தவை. வந்தியத்தேவன். நம்பியாண்டார் நம்பி.
பரமன் மழபாடியார்.அவரருகில் கங்கம்மாள்.
மன்னன் கங்கம்மாளையும் பரமன் மழபாடியாரையும் அழைத்தான்.
“கங்கம்மா…”
அவள் தலைவணங்கினாள்.
“தில்லையில் நீ கேட்ட செய்தியை குந்தவையிடம் கூறினாய். அந்த ஒரு செய்தி மறைந்திருந்த தேவார ஓலைகளைத் தேடும் ஒரு பெரிய முயற்சிக்கு வழிவகுத்தது.அது மட்டும் அல்ல எருக்கத்தம் புலியூர் யாழ்ப்பாணர் வழி வந்த உன் உதவியினால் நம்பியாண்டார் நம்பியால், கண்டுபிடிக்கப்பட்ட திருமுறைகள் இசைக்க பண் வரிசையில் தொகுக்கபட்டது ”
கங்கம்மாள் அமைதியாக நின்றாள்.பரமனுக்கு தனது காதல் மனைவி குறித்து பெருமை முகிழ்ந்தது.
குந்தவை கங்கம்மாளை அணைத்துக்கொண்டாள்.
“உன் வாயால் வந்த அந்தச் செய்தியால்  இவ்வளவு பெரிய செயல் நடைபெறும் என்று அப்போது உனக்குத் தெரியாது அல்லவா? .” என்றார். 
கங்கம்மாளின் கண்களில் கண்ணீர்.
“அம்மா… நான் கேள்வி பட்டத்தை தான்  உங்களிடம் சொன்னேன்.”
குந்தவை புன்னகைத்தாள்.
“சில நேரங்களில் ஒரு சிறிய செயல் தான் வரலாற்றில் பெரும் திருப்பு முறையை உருவாக்கும்”
தொலைவில் பெருவுடையார் கோயிலின் மணி ஒலித்தது.
நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள் பிடார்ரகளின் குரலில் தேன் தமிழ் இசையாக காற்றில் கலக்க, தஞ்சையின் பெருவுடையார் கோயில் வானளாவிய வகையில் கதிரவனின் பொன் காரணங்களின் ஒளியில் தட்சிண மேருவாக மிளிர்ந்தது.
இராஜராஜர் போர்க்களங்களில் மட்டும் வெற்றி கண்ட ஒரு சராசரி அரசன் அல்லர்.கல்வெட்டுகளில் தன்னை “தண்டமிழ் நாடன்” எனப் பதிவு செய்த தகைசால் தமிழர்.
காலத்தின் இருளில் மறைந்திருந்த தெய்வத் தமிழ் திருமறையைத் தேடி மீட்டெடுத்து, அதைத் தலைமுறைகள் தாண்டியும் ஒலிக்கச் செய்த “திருமுறை கண்ட சோழர்”.
(ராஜராஜரின் சதய விழாவை ஓட்டி, திருமுறைகள் மீட்க பட்ட வரலாற்றை கூறும் 14-ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாசாரியாரால் அருளப்பட்ட “திருமுறை கண்ட புராணம்” என்னும் சைவ வரலாற்று நூலின் தகவல்கள் துணை கொண்டு நான் எழுதிய சிறுகதை) 

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆலிலை

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி6)