வீரபாண்டியன் வாள் ( குறு நாவல்)
*வீரபாண்டியன் வாள்*
காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவில் உள்ள கானகத்தில் நதியை ஒட்டி, மண் சாலையில் விரைந்து கொண்டு இருந்தது ஒரு வெண் புரவி. புரவியின் மீது ஆரோகணத்து இருந்தவன் பரமன் மழபாடி, சோழ மறவர் குடி வீரன். முகத்தில் சிரிப்பு இல்லை, கவலைகளின் கோட்டோவியம். அந்தி மயங்கும் வேளை. காவிரியும் கொள்ளிடமும் வகுத்த நீர் கரையின் நடுவில் செழித்து வளர்ந்து இருந்தது அந்த காட்டு பகுதி. குணசீலத்தை கடந்தான். சிந்தையில் கொங்காள்வார் செய்தி எதிரொலித்து கொண்டே இருந்தது. ஆதித்த கரிகாலன் கொலையில் சேரர் தொடர்பு. இருப்பதாகவும், பாண்டியர் போர்வையில் முதுகில் குத்திய சேரர்கள்.என செய்தி அனுப்பி இருந்தார். என்ன ஒரு ஈன புத்தி. வீரனை போரில் கொல்ல முடியாமல் சூதில் கொன்றனர். சேரரை பற்றி,குறிப்பாக அந்த முன்குடுமி நம்பூதிரிகள் பற்றி அருவருப்பு மண்டியது மனதினுள். சோழ தேசம் இப்போது முன்குடுமி நம்பிகள் ராஜ்ஜியம் ஆகிவிட்டது . விஜயாலய சோழரின் பேரன் பராந்தகன் பொற் கூரை வேய்த தில்லையி இப்போது அவர்கள் ராஜ்ஜியம் தான். பொது மக்களை அனுமதிப்பது இல்லை. இவர்கள் கொட்டத்தை ஆட்சி செய்யும் உத்தம சோழனும் கண்டு கொள்வது இல்லை. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பார்த்தால் தர்க்க ரீதியாக ஆதித்த கரிகாலனின் கொலையாளி களுக்கும் இந்த முன் குடுமி நம்பிகளுக்கும், உத்தம சோழனுக்கும் தொடர்பு இருப்பது எளிதில் விளங்கும்.
ஆனால் எதற்கும் ஆதாரம் இல்லை. கை புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல , ஆதித்த கரிகாலன் கொலையில் முன் குடுமி நம்பி கூட்டத்திற்கும் எதிரான ஆதாரம் தேடி அலைந்து கொண்டிருந்தான் அவன். அத்தனையும் இளைய பிராட்டி குந்தவைக்காக. உடன் பிறக்காவிட்டாலும் அவள் , அவனது அக்கா அல்லவா? எத்தனை நாட்கள் தம்பி, தம்பி என்று பாசத்தை பொழிந்து இருப்பாள். அவளுடைய கணவன் வந்திய தேவரை, ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்பு படுத்தி சிறையில் அடைத்த விட்டார்களே . அவள் உடன் பிறந்த தம்பியான அருள் மொழி கூட ஒன்றும் செய்ய முடியாமல், சிவனடியார் போல் சுற்றி திரிகிறார். அருள்மொழியை கரூரில் சந்திக்க தான் விரைகின்றான் பரமன்.
:வழியில் முக்கொம்பு தீவினில் எக்காள வாத்தியம் ஒளி கேட்டது. இன்று ஆடி பௌர்ணமி அல்லவா? அந்த பகுதி கானகத்தில் உள்ள சாஸ்தா கோவிலில் பூஜை போடுகிறார்கள் போல தெரிகின்றது. காலையில், திருவையாறில் கிளம்பிய குதிரையும் சோர்ந்து விட்டிருந்தது. அந்த சாஸ்தா கோவிலில் குதிரையை நிறுத்தினான் பரமன். புதியவன் வரவை கண்டு அங்கு இருந்தவர்கள் மிரண்டார்கள். எல்லாரும் ஆண்கள் தான் காட்டு பகுதி கோவிலுக்கு பெண்களை அழைத்து செல்வது கிடையாது.
யாரப்பா நீ? இந்த அந்தி பொழுதில் அச்சம் இல்லாமல் கானகத்தில் செல்வது? அந்த கூட்டத்தில் வயதில் மூத்தவர் முன்னே வந்து பரமனை கேட்டார்.
மடியில் கனமில்லை பயம் இல்லை ஐயா. என் பெயர் முத்தண்ணன். எந்தன் சொந்த ஊர், கலசமங்கலம் (இன்றைய புதுக்கோட்டை) கொங்கு நாட்டின் வடகரை நாட்டுக்கு ( இன்றைய பாவனி) மஞ்சள் வியாபாரம் பேச போகிறேன் என்றான்.
கலசமங்கலம் வணிகர்கள் நானாதேசிகள் ஆயிற்றே. சிறு மஞ்சள் வியாபாரத்திற்கு இவ்வளவு தூர பயணமா? கிழவனார் சந்தேக பார்வையோடு கேள்வி தூண்டில் வீசினார்.
"என்ன ஐயா செய்வது? பெரும் சுறாக்கள் வாழும் கடலில் தான் சிறு மீன்களும் வாழ்கின்றன. எல்லாரும் பெரிய கை ஆகிவிட முடியுமா?
"உண்மை தான். ஆனாலும் பெரிய கைகளை அனுசரித்து சென்றால், நீ அயல் தேசத்து வியாபாரமே முடிக்கலாமே. இந்த கொசு பிடிக்கும் வேலை என்னதுக்கு? தூண்டிலை வித விதமாக வீசி பார்க்கின்றார் கிழவர். சிக்குபவனா பரமன்? ஆலமரத்தின் அடியில் விருட்சம் வளராது ஐயா. சிறிதோ பெரிதோ என் முதல் போட்டு ஒரு வியாபாரம் என்றான்.
சரிதான். மிகவும் களைத்து இருக்கிறாய். வா வந்து படையல் சோறு சாப்பிடு என்று அழைத்தார். ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் அமைந்த சாஸ்தா கோவில். வேல்களும் ஈட்டியம் சுற்றிலும் நடப்பட்டு இருக்க, விழிகளை உருட்டி மிரட்டி கொண்டு இருந்தார் சாஸ்தா. முன்னிரவின் இருளை விரட்டி கொண்டு இருந்தன சுளுந்திகள். மஞ்சள் தீப்பந்த ஒளியில் ஒரு கஜ தூரத்தில் ஒரு பாம்பு புற்று. என்னவோ அந்த புற்றையே பார்க்க தோன்றியது பரமனுக்கு. அதனுள் இருந்து அவன் குலதெய்வம் ஜஞ்சந்தி துர்கா சிரிப்பது போல ஒரு பிரமை.
தீடிரென அடைமழை பிடித்து கொண்டது. கோவிலுக்கு பக்கத்தில் இருந்த காவல் குடிசையில் புகுந்து கொண்டனர் எல்லாரும்.
பரமனை விசாரித்த பெரியவர் சொன்னார்
“ ஆடியில் மேகம் கரு கொள்ள வேணும். கர்போட்ட நாளில் மழை பெய்தால், ஐப்பசி, கார்த்திகையில் மழை பொய்த்து விடும். இது நல்லத்துக்கு இல்லை என்றார்.”
பரமனுக்கு அவர்கள் பேச்சில் ஈடுபாடு இல்லை. அவன் சிந்தை முழுவதும் அந்த பாம்பு புற்றே ஆக்ரமித்து இருந்தது. சட்டென அதில் இருந்து ஒரு பச்சை வெளிச்சம் வருவது போல அவனுக்கு தோன்றியது. சந்தாதம் வந்தது போல புற்றை நோக்கி ஓடினான் அவன்
*********
கருவூரின் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் கூட்டம் அதிகம் இல்லை. மேக மூட்டத்துடன் பூரண நிலா ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டு இருந்தது. சிவனடியார் போல ஒருவர் அர்த்த மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தார். அவர் உடை தான் காவி கோலம் காட்டியது. முகமோ ராஜனுக்கு எல்லாம் ராஜன் இவன் என்று பறை சாற்றியது. அவருக்கும் எதிரில் மெலிந்த தேகத்துடன் கௌபினம் மட்டும் தரித்த அடியார் விழிகளை மூடி உட்கார்ந்து இருந்தார். அவர் தான் கருவூரார். கொங்கு நாட்டு மக்கள் கொண்டாடும் பெருச்சித்தர். கவியும் புனைவார். போகரின் சீடர். மெல்ல கண்விழித்து கருவூரார் பேச தொடங்கினார்.
“ அருள்மொழி உன் காத்திருப்பு முடிய போகின்றது. உன் குடும்பத்தை சூழ்ந்த காரிருள் விலக போகிறது. உன் அண்ணனை கொன்ற கொலை காரர்கள் மக்களின் முன் வெளிப்பட போகின்றார்கள். இதைவிட பெரிய விஷயம் இறை உன்னை குருவியாக கொண்டு, தன் விஸ்வரூபத்தை தஞ்சை தரணியில் வியாபிக்க போகிறது அருள்மொழி!”.
ஐயா நாடாளும் ஆசை கிஞ்சித்தும் இல்லை எனக்கு. எனக்கு என் அண்ணனை கொன்றவர்கள் யார் என்று தெரிய வேண்டும். 12 வயதிலேயே போர்க்களம் புகுந்த வீரனை பேடிகள் போல் இருட்டில் தாக்கி கொன்ற நயவஞ்சகர்கள் அழிய வேண்டும். இது அத்தனைக்கும் மேல் என் தமக்கை குந்தவையின் வாழ்வு மலர வேண்டும். சதிகாரர்கள் என் அண்ணனையும் கொன்று பழியை தூக்கி என் மைத்துனர் மேல் போட்டு விட்டார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வந்தியருக்கு ஆதரவாக நான் இறங்கினால், அண்ணனின் கொலையோடு என்னையும் சேர்த்து பேசுவார்கள். எனக்காக தான் குந்தவை அவள் கணவனோடு சேர்ந்து இந்த படுபாதகத்தை செய்தாள் என அவளையும் சிறையில் அடைப்பார்கள். குந்தவை அறிவு மிகுந்த இளவரசியாக தான் இந்த நாட்டுக்கு தெரியும். ஆனால் அவள் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் குழந்தை தன்மையும், வந்தியர் மேல் கொண்ட காதலையும் நான் மட்டுமே அறிவேன். ஒரே நேரத்தில், அண்ணனையும் அப்பாவையும் இழந்து, கணவனை சிறை கொட்டடியில் தள்ளிய விதியை நினைத்து, தலைவிரி கோலமாக கண்ணீரின் வடிவாக இருக்கும் என் சகோதரியை காண சகியாமலேயே தஞ்சையை விட்டு நீங்க்கினேன். ஐயா எனக்கு ஒன்றும் வேண்டாம். என் தமக்கையின் வாழ்வு சீரானால் போதும். என் அண்ணனின் கொலையில் வந்தியருக்கு சம்பந்தம் இல்லை என்னும் ஆதாரம் கிடைத்தால் போதும்.”
அருள்மொழி வர்மரின் ஆதங்க பேச்சை கேட்ட கருவூரார் புன்னகைத்தார். “ஆதாரம் பரமன் உன் கையில் சேர்ப்பான். ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும்”.
“என்ன சத்தியம் அய்யா?”
“ நீ கேட்டது போல, உன் அண்ணன் கொலையின் மர்மம் விலகினால், உன் தமக்கை குந்தவையின் வாழ்வு மலர்ந்தால், இளமைமையில் உன் கை விட்டு போன சோழ ராஜ்ஜியம் உன் கையில் மீண்டும் சேர்ந்தால், உன் அண்ணன் கொலை பாதகர்கள் நாட்டு மக்கள் முன் வெளிப்பட்டால், விஸ்வயம் ஆக எங்கும் நிறைந்து இருக்கும் சிவத்துக்கு அதன் விஸ்வரூபத்தை காண்பிக்கும் வகையில் சித்த ஆகம படி ஒரு பெருங்கோயில் நீ ஏழுப்ப வேண்டும். செய்வாயா? உன்னால் முடியுமா? முடியும் என்றால் என் கையில் அடித்து சத்தியம் செய்து கொடு. என் யோக வலிமையில் சூழ்ச்சியின் திரையை இப்போதே மறைய செய்கின்றேன்”.
“சத்தியம் அய்யா! சத்தியம்! என் அண்ணன் கொலையில் சம்பந்தபட்ட கொலை பாதகர்கள் மக்களின் முன் வெளிப்பட்டால், இந்த உலகம் முழுவதும் விஸ்வரூபம் காட்டி நிற்கும் அந்த சிவனுக்கு, அதே விஸ்வரூப வடிவாக, சித்த ஆகம படி பிரமாண்ட கோவில் எழுப்புவேன் இது சத்தியம்!”
அருள்மொழி யின் வார்த்தைகளை வெட்டி சென்ற மின்னல் பிரதிபலித்தது.
அதே நேரம் முக்கொம்பில், கரைந்த பாம்பு புற்றில் இருந்து பிளக் என்ற ஒலியுடன் பரமன் கையில் தஞ்சம் புகுந்தது ஒரு வாள். மரகத கல் பதித்த, மீன் சின்னம் கொண்ட வாள். மின்னல் வெளிசத்தில் பார்த்ததும் கண்டு கொண்டு விட்டான் பரமன் அது, வீரபாண்டியன் வாள் என்று.
*******
மழை விட்டு சில்லிட்டு இருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் அந்த முக்கொம்பு காட்டின் அமைதியை கிழித்து கொண்டு இருந்தது. சுளுந்தின் ஒளியில் அந்த வாளை புரட்டி பார்த்த பரமன், அதில் ஒரு தங்க சங்கிலி மாட்டியிருப்பதை கண்டான். அந்த சங்கிலி.. எங்கோ பார்த்து இருக்கிறோமே.. சட்டென பரமனின் மூளையில் ஞாபகம் துளிர் விட்டது. இது ஆதித்த கரிகாலனின் சங்கிலி. இந்த வாள், மதுரை போரில் வீரபாண்டியனை கொன்ற பிறகு வெற்றியின் நினைவாக ஆதித்தர் வைத்திருந்த வாள். சங்கிலி வாளில் மாட்டியிருக்கும் அமைப்பை பார்த்தால் அவர் நெஞ்சை துளைக்கும் போது மாட்டியிருப்பது போல தோன்றுகிறது. அவர் நெஞ்சில் வாள் இறக்கும் வல்லமை உள்ளவனும் இப்புவியில் உண்டா? கண்டிப்பாக அவரை பலவீன படுத்தி தான் கொன்று இருக்கின்றார்கள். யார் அவர்கள்? அப்போது அவன் கண்ணில் தட்டு பட்டது அந்த வஸ்து. உற்று பார்த்ததும் பரமனுக்கு , அருவருப்பின் உச்சத்தில் சாப்பிட்ட பொங்கல் தொண்டைக்கு வந்தது. அந்த வஸ்து வேறு ஒன்றும் இல்லை. ஒரு சுண்டு விரலின் எலும்பு ஆதித்தனுக்கும் கொலையாளிக்கும் நடந்த தள்ளு முள்ளில் அவன் சுண்டு விரல் வெட்டு பட்டு இருக்க வேண்டும். அந்த விரல் எலும்பில் ஒரு நீலக்கல் மோதிரம். அதை எடுத்து பார்த்தான் பரமன் அதில் ஜாங்கிரியை பிழிந்தது போல நாகரி எழுத்துக்கள். அதில் பரமனுக்கு பரிச்சயம் இல்லை. அப்போது பரமனை முதன் முதலில் விசாரித்த பெரியவர் அவன் அருகில் வந்தார்.
“தம்பி உன்னை முதலில் பார்த்த போதே நீ வியாபாரி இல்லை என சந்தேகப்பட்டேன். என் சந்தேகம் உறுதியாயிற்று. உன்னில் ஏதோ மர்மம் . சொல்லப்பா என்ன விஷயம். “ என கேட்டார்.
பரமன் அப்போது இருந்த குழப்பமான மனநிலையில் அதியோடு அந்தம் அனைத்தும் சொன்னான். அந்த பெரியவரின் கண்களில் கண்ணீர்.
தம்பி என்னை ஏதோ கிராமத்தான் என நீ நினைத்து கொண்டு இருக்கிறாய். ஆனால் நான் அருள்மொழியின், முப்பாட்டன் இருந்தாரே பராந்தக சோழன், அவரோடு நெருங்கிய நண்பர் வெள்ளாங்குமாரணின் வாரிசு. பாரந்தகரின் முத்த மகன் ராஜாத்திதர் உடன் எங்க சீயான் ( தாத்தா) போர் செய்து இருக்கார். ராஜாதித்தர் தக்கோலம் போரில் இறந்த பிறகு எங்க சீயான் ராஜ குடும்பத்து தொடர்பில் இருந்து விலகி விட்டார். ஆனாலும் ஏதோ சோழ ராஜ்ஜியம் ரகசியம் எங்க குலதெய்வம் கோவிலில் வெளிப்பட அந்த தெய்வம் முடிச்சு போடுத்து.தம்பி இந்த சாஸ்தா தர்ம சாஸ்தா. இவரை சாட்சியா வைத்து கேட்கிறேன், என்னை நம்பி அந்த நீலக்கல் மோதிரத்தை தா . அதில் உள்ள நாகரி எழுத்துக்கள் எனக்கு படிக்க தெரியும்.”
பரமனும் நம்பி அந்த நீலக்கல் மோதிரத்தை கொடுத்தான். அவர் கூர்ந்து பார்த்து வாசிக்காலானார்.
“ து ஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய
துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யஸாம்ஸி
உத்பாததாப விஷபீதிமஸத்க்ரஹார்தி
வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ”
தம்பி இது பரமேஸ்வரணை குறிக்கும் ஸ்லோகம். இந்த மாதிரி நவரத்தின கற்களில் , சுலோகங்கள் பொறித்து வைப்பது காந்தளூர் சாலை வழக்கம் என் அனுமானம் சரி என்றால் இது முன்னாள் காந்தளூர் சாலை பட்டனும் இந்நாள் சோழ பிராம்மாதி ராஜனான பரமேஸ்வரனின் அடையாள மோதிரம்.
பெரியவர் சொன்னதும் சுரீர் என அந்த பரமேஸ்வரனின் நினைவு வந்தது. தில்லையில் பொது மக்களை விரட்டி அடித்தானே பரமேஸ்வரன். அப்போது அவனிடம் பிரம்படி பட்ட கூட்டத்தில் பரமணும் இருந்தான்”. பொன்னம்பலம் புலையர்களான உங்களுக்கு இல்லா.. கேட்டியோ என கத்திக் கொண்டு, பிரம்பை சுழற்றினான் அவன். அவனது கரம் சிந்தையில் வந்து சென்றது. அய்யோ என அலறியே விட்டான் பரமன். ஆம் பரமேஸ்வரன் கையில் சுண்டு விரல் இல்லை என்பது, பரமனுக்கு நினைவு வந்தது.
“அய்யா. என்ன சொல்கிறீர்கள். காந்தாளூர் சாலை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும். பரமேஸ்வரன் உடைய மோதிரம் இது என்று எப்படி உறுதியாக சொல்கிறீர்.?”
பெருமூச்சுடன் பேச தொடங்கினார் அந்த பெரியவர்.
தம்பி நான் அந்த வலிய சாலை மாணவன். என் பெயர் மலையனூரான் . வலிய சாலைக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு எங்க முப்பாட்டன் வெள்ளங்குமரன் காலத்தில் ஆரம்பித்தது. விஜயாலயசோழர் பேரன் பராந்தகன் சேர இளவரசி கோக்கிழான் அடிகளை திருமணம் செய்து இருந்தார். பராந்தகனின் நெருங்கிய நண்பர் என் தாத்தா வெள்ளாங்குமரன். அதனால் அவருக்கு மலை நாட்டு உறவு ஏற்பட்டதால் அவர் வலிய சாலை மாணவர் ஆனார். அப்படி தான் எங்கள் குடும்பமும் காந்தளுர் சாலையில் வழி வழியாக கல்வி கற்று வந்தது. வீரபாண்டியனின் தந்தை வழி பாட்டி வானமாதேவி, சேர இளவரசி யாக இருந்த போதும், முதலாம் பராந்தகன் சேரமான் பெருமாள் மகளை மணம் செய்ததால், சேர தேசம் பாண்டிய சோழ சண்டையில் யார் பக்கமும் சாராமல் நடுநிலை வகித்து வந்தது. இன்னும் சொல்ல போனால் சேர தேச இளவரசி வயிற்றில் பிறந்த ராஜாத்தித்தர் சோழ அரசனாக ஆக வாய்ப்பு இருந்ததால், மலையாளிகள் சோழ தேச படையில் பெரும் அளவு சேர்ந்தார்கள். மலையாளிகள் சேனை என்றே ஒன்று அந்நாட்களில் சோழர் படைப்பிரிவில் இருந்தது. காரணம் சோழர், பாண்டியர் போல் அல்லாது, சேரர்கள் தாய் வழி வாரிசு உரிமை கொண்டவர்கள். அதனால் தங்கள் இளவரசி பெற்ற மகனை தங்கள் வாரிசாக தான் அவர்கள் பார்த்தார்கள். ஆனால் சேர இளவரசி வயிற்றில் பிறந்த இராஜாதித்தர் தக்கோலம் போரில் கொல்ல பட்டவுடன் சேர தேச ஆதரவு பாண்டியர் வசம் சென்றது.
தொடர்ந்து வீரபாண்டியன் கொல்லப்பட்ட பின் பிறகு சாலையின் பட்டர்கள் போக்கு சோழ துவேசமாக போய் விட்டது. வீரபாண்டியன் அந்த சாலையின் மாணவன் தான். அவன் அங்கு படித்த போது நானும் உடனே படித்தேன். வீர்பாண்டியன் வெகுளி என்றே சொல்லலாம். மனதில் எதையும் வைத்து கொள்ள தெரியாது. அந்த சாலையின் பட்டர்களை தன்னிடம் உள்ள குறைந்த செல்வத்தை கொண்டும் அராதித்தான். உண்மையில் நான் சோழ ஒற்றனாகவே அறிஞ்சய சோழரால் அனுப்ப பட்டேன் ஆனால் என்னால் வீரபாண்டியன் பற்றி அரிஞ்சயசோழரி டம் சொல்ல முடியவில்லை. காரணம் அவன் வெகுளி தனத்தால் அவன் பால் ஏற்பட்ட அன்பு.
ஆனால் வீரபாண்டியன் சோழரின் மேல் உடனே போர் தொடுத்தான். அரிஞ்சய சோழனின் சகோதரன் உத்தமசீலி சிரம் அறுத்தான். சோழர் குடும்பத்துக்கு துரோகம் செய்து விட்டேன் என தோன்றியது. மெல்ல இராஜாங்க விவகாரத்தில் இருந்து விலகினேன். சோழர் குடும்பமும் பழைய உறவை மனதில் வைத்து வீரபாண்டியன் பற்றி காட்டி கொடுக்காத தவறை மன்னித்தார்கள். சில காலம் கழித்து ஆதித்தன் வீரபாண்டியன் தலை கொண்டான். ஆதித்தனும் மர்மமாக இறந்தான். சோழ தேசமும் பழைய சோழ தேசமாக இல்லை. எங்கும் முன் குடுமி நம்பிகள் ராஜ்ஜியம் இனியும் வாய் மூடி மவுணியாக இருந்தால் என் முப்பாட்டன் ஆன்மா என்னை மன்னிக்காது தம்பி. அதான் அனைத்தையும் சொல்லி விட்டேன்.
ஆனால் பெரியவர் அனைத்தையும் சொல்லியதாக பரமனுக்கு தோன்றவில்லை.
பெரியவரே நீங்கள் அனைத்தையும் சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. ஏதோ ஒரு சரடு இன்னும் மீதம் உள்ளது. இந்த வாள் வீரபாண்டியன் வாள். அதை வெற்றியின் சின்னமாக ஆதித்த கரிகாலன் வைத்து இருந்தார். அந்த வாள் இங்கு பாம்பு புற்றுக்குள் வந்த காரணமும் நீங்கள் அறிவீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது” என்றான்.
பெரியவரின் முகம் அந்த இருட்டிலும் கருத்தது.
“நீ மதி நுட்பம் பொருத்தியவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது ஒரு ஐப்பசி பவுர்ணமி. இடையில் நான் கொஞ்சம் ரசவாத பிதது பிடித்து அலைந்தேன். பச்சை மலை பக்கம் அதற்கான பூமி உப்பு தேடி அலைந்து கொண்டு இருந்தேன் அப்போது தான் கரும் புரவியில் ஒருவனை வந்தியர் துரத்தி சென்று கொண்டு இருந்தார். முன்னால் ஒருவன் வெள்ளை புரவியில், விரைந்து சென்று கொண்டு இருந்தான். ஏதோ வில்லங்கம் என தோன்றியது தம்பி. புதரின் ஓரம் சென்று நின்று விட்டேன். முன்னால் சென்றவன் இந்த வாளை புதர் அருகில் போட்டு விட்டு புரவி யில் விரைந்து விட்டான். பின்னல் வந்த சோழ படைகள் வந்தியரை கைது செய்து அழைத்து போய் விட்டன. நான் அந்த வாளை கொண்டு வந்து இந்த தர்ம சாஸ்தா கோவில் அருகே உள்ள புற்றில் போட்டு விட்டேன் தம்பி.”
அய்யா, அந்த வாளை சோழற்படைகளிடம் ஒப்படைக்க ஏன் உங்களுக்கு தோன்றவில்லை. ஆதித்த கரிகாலன் கொலையில் பழியை வந்தியர் சுமப்பது தெரிந்தும் ஏன் அமைதி காத்தீர்கள். ? பெரியவரிடம் பதில் இல்லை
நான் சொல்லவா? அந்த கொலைக்கு நீங்களும் உடந்தை. இந்த வாள் என்னிடம் பிடிப்பட்ட பிறகு, உங்கள் தப்பை லாவகமாக மறைத்து கதை சொல்லி கொண்டு இருக்கின்றீர்கள். எல்லாம் இந்த தர்ம சாஸ்தாவின் வேலை . உங்கள் வாயால் பாதி உண்மையை சொல்ல வைத்தார் மீதி உண்மையை நான் வரவழைகின்றேன். பரமன் தன் உடைவாளை தூக்குவதற்கு முன்பு, அந்த பெரியவர் வர்ம் கலையை அவன் மீது பாச்ச ஆயத்தம் ஆனார்
அப்போது நூறு குதிரைகளின் குளம்படி ஓசை கேட்டது. திரும்பி பார்த்தால் அருள்மொழி வர்மன் கொங்காள்வான் அனுப்பிய படைகளோடு அந்த கானகத்தில் பிரவேசித்து இருந்தார். மலையனுராணுக்கு இனி தப்ப முடியாது என தோன்றி விட்டது. சரட்டென தன் குறுவாளை எடுத்து கமுத்தில் பாய்ச்சினான். பிறீட்ட இரத்தம் அந்த வீரபாண்டியன் வாளை நனைத்தது. ஆதித்தன் தன் சாவுக்கு பல காலம் காத்து இருந்து பழி வாங்கி விட்டதாகவே தோன்றியது.
அந்த பெரியவர் மலையனூரனின் கையாள் ரேவ தாசன் ஓட பார்த்தான் அவனை பிடித்து விசாரித்த போது அவன் ஆதித்தன் கொலையில் காந்தளூர் வலிய சாலையின் தொடர்பையும் , அதன் பட்டர்களான ரவி தாசன், பரமேஸ்வரன், சோம்பன் சாம்பவன் ஆகியோர் மலையனுறான் உதவியுடன் வர்ம களை பயன்படுத்தி ஆதித்தனை கடம்பூரில் வைத்து கொலை செய்ததையும் , அந்த பழியை வந்தியர் மேல் போட்டதையும், அதற்கு உத்தம சோழனின் மறைமுக ஆதரவையும் ஒப்புக் கொண்டான்.
மெதுவாக ஒரு மக்கள் புரட்சி அந்த காவிரி கரையில் புயலாக உருவெடுத்தது. அருள்மொழி மக்களுடன் வரும் விபரம் தெரிந்து உத்தமன் கடல் வழி மேற்கு திசை நோக்கி ஓடி போனான். ஆட்சி பீடம் வெறுமையாக வரவேற்றது அருள்மொழியை. உத்தமனின் தாயார் செம்பியன் மாதேவி குழி விழுந்த, கள்ளம் பொதிந்த கண்களோடு அருள்மொழியை வரவேற்றாள் தனக்கு ஒன்றும் தெரியாது என சாதித்தாள். . அவர்களை அருள்மொழி யால் வெறுக்க முடியவில்லை. ஆயிரம் இருந்தாலும் அவர்களும் தன் தந்தையின் கிளை வழி உறவல்லவா? ஆனால் அவர்களை அருகே வைக்கவும் மனம் ஒத்து கொள்ள வில்லை. உடனே தஞ்சையை விட்டு வெளியேற சொன்னான். அவளும் உரையூருக்கு வடக்கே நகர்ந்து சிறுவாச்சூரில் காளி கோவில் கட்டி கொண்டு நகர்ந்து விட்டாள். கடைசி வரை அவளுக்கு அருள்மொழி மேல் கோபம் குறையவே இல்லை. அருள்மொழி யின் அழிவை பார்க்க விரும்பியே செத்தாள்.
அருள்மொழி முதல் காரியமாக வந்திய தேவரை சிறை மீட்டான். அவரை சோழ தேசத்தின் சாமந்த நாயகராக ஆக்கினார். ராஜ ராஜன் என்று முடி சூடிய அருள்மொழி ஆட்சியில், குந்தவையும் வந்தியதேவரும் மிகவும் மதிக்கப்பட்டார்கள். முதல் போராக காந்தாளூர் சாலையை அடித்து நொறுக்கினார். கருவூராருக்கு கொடுத்த வாக்கையும் அவர் மறக்கவில்லை. தஞ்சையில் விஸ்வமயமாக இருக்கும் சிவனுக்கு, விஸ்வரூபமாக பெருங்கோவில் ஒன்றை சித்த ஆகமம் படி தட்சிண மேருவாக கட்டினார் இன்றும் அந்த தட்சிண மேரு ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையை, பாசத்தை, சத்தியம் தவறா பேராண்மை யை பறை சாற்றி கொண்டே உள்ளது.
(முற்றும்)
மறவகுடி என ஜாதிய வார்த்தைகள் தேவையற்றது...வீரபாண்டியன் கொன்றது ராஜராஜன் தந்தை சுண்தர சோழனைத்தான்....வரலாற்றில் அது மறைக்கப்பட்டுள்ளது...ராஜராஜமள்ளன் அண்ணன் ஆதித்தன் கொன்றது வீரபாண்டியனை என்பதை ஏற்க மனதில்லாத பாண்டிய விசுவாசிகள் ஆதித்தனை தென்பாண்டிவர்ம தாக்குதல்மூலம் பழிதீர்க்க வாய்ப்புள்ளது
ReplyDelete