ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி6)
ஆதித்த கரிகாலன் கொலை குற்றவாளி குந்தவையா?குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும்,சுந்தர சோழரின் மகளுமாவாள். திருச்சி மாவட்டம் பாச்சல் என்ற ஊரில் உள்ள கல்வெட்டும், வேலூர் மாவட்டம் அவனிஷ்வரம் அருகில் உள்ள கல்வெட்டு குந்தவை பிறந்த அவிட்டம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் செய்ய ராஜ ராஜ சோழன் உத்தரவிட்டார் என்பதை தெரிவிக்கிறது.
சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவள். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.
இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது.
இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இம்மூன்று தேவாலங்களுக்கும் அவள் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. குந்தவை தேவி அளித்த நகைகளின் பட்டியல்களில் தங்கத்தால் ஆனதும், வைணவர்கள் நெற்றியும் இட்டுக் கொள்ளும் சின்னமாகிய 'நாமம்' என்னும் இறுதிச் சொல்லுடன் முடிவடையும் நகைகளின் பெயர்களும் உள்ளன. இப்படி பல தானங்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் வலமிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.
அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. சமணர்களுக்கான ஒரு சமணர் கோயிலை திருச்சிராய்ப்பள்ளிமாவட்டம் திருமழபாடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
சோழ ராஜ குடும்பத்தில், இளவரசிகளுக்கு மன்னருடன் கொண்ட உறவுமுறை அடிப்படையில் குறிப்பிட்ட அளவு கிராமங்கள் சொத்து உரிமையாக வழங்கப்பட்டது. அந்த கிராமத்தின் வரி வருவாய் எந்த இளவரசிக்கு அந்த கிராமம் வழங்கப்பட்டதோ அவரையே சேரும். மற்ற அரசிகளும் இளவரசிகளும் கோயில் திருப்பணிக்கு அந்த செல்வத்தை செலவிட, குந்தவை வித்தியாசமாக தனக்கு வந்த செல்வத்தை மக்களுக்காக செலவிட்டாள். குந்தவை நாச்சியாரின் புத்தியில் உதித்தது தான் ஆதுலர் சாலை திட்டம்.இன்றைய அரசு மருத்துவமனையை போன்றது அதுலர் சாலை. பொது மக்களுக்கான இலவச மருத்துவமனை. அதுலர் சாலைப் பற்றி புரிந்து கொள்ள காஞ்சிப் பகுதியில் கிடைத்த ஒரு கல்வெட்டை பற்றி காண்போம்.
மருத்துவ மனை பற்றி உள்ள கல்வெட்டுச் செய்தி:
பல்லவர் காலக் கோவிலான திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசன் கோவிலில் மொத்தம் 17 கல்வெட்டுகள் உள்ளன. இராஜராஜர், இராஜேந்திரர்,வீர ராஜேந்திரர்,விக்கிரம சோழன் என பல்வேறு புகழ்பெற்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களை உடைய இக்கோவிலில் மிக முக்கியமான கல்வெட்டாகக் கருதப்படுவது வீர ராஜேந்திர சோழரின் கல்வெட்டுதான்(1063-1068).
55 வரிகளுடைய இக்கல்வெட்டினில் இக்கோவில் வளாகத்தினில் நடத்தப்பட்ட வேத கல்லூரி பற்றியும், இங்கு கற்பிக்கப்பட்ட ரிக், யஜூர் மற்றும் பல்வேறு வேத பாடங்கள் பற்றியும் இங்குப் பயிலும் மாணாக்கர்க்காக( ஆசிரியர்களையும் சேர்த்து சுமார் 60 பேர்) இங்கேயே தொடங்கி நடத்தப்பட்ட 15 படுக்கை வசதியுடைய ஆதுர சாலை பற்றியும், அங்கு பணியிலமர்த்தப்பட்ட மருத்துவர்கள் பற்றியும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிற்காக அளிக்கப்பட்ட 147 கழஞ்சு மற்றும் 9 மஞ்சாடி பொன் பற்றியும் வருடா வருடம் இக்கோவிலுக்கு அனுப்பப்பட வேண்டிய நெல்மூட்டைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக இங்கேயே பணியிலமர்த்தப்பட்ட நாவிதர் மற்றும் பிற பணியாளர் பற்றியும் கூட தனித் தனியாக கூறப்பட்டுள்ள இக்கல்வெட்டு சோழர்களின் நாகரிகத்தின் மேன்மையை விளக்கும் அற்புதத் தகவல் பொக்கிஷம் என்றால் மிகையில்லை.
கோயிலின் உள்ளே செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த மருத்துவமனை 15 படுக்கைகள் கொண்டுள்ளது.
மருத்துவர்:
ஆலம்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாமன் பட்டர் என்பவர் நாடி பார்த்து மருந்து கொடுப்பவராக இருந்துள்ளார்.
இவருக்கான ஊதியம் தினமும் 3 குறுணி நெல் 4 காசுகள்
அறுவை சிகிச்சை செய்பவர் :
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் சல்லிய கிரியை பண்ணுவாள் என குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கான ஊதியம் தினம் 1 குறுணி நெல்லும் 2 காசுகளும்
நீர் கொண்டு வருபவர்:
மருத்துவமனைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு பணியாள் இருந்துள்ளார்.
இவருக்கான ஊதியம் ஆண்டுக்கு 15 கலம் நெல்
மருத்துவப் பணி மகளிர் :
இருவர் இருந்துள்ளனர்.
இவர்கள் மருந்து அடும் பெண்கள் என அழைக்கப் பட்டுள்ளனர்.
இவர்களுக்கான ஊதியம் தினம் 4 நாழி நெல்லும் அரை காசு
நாவிதன்:
நாவிதர் ஒருவர் இருந்துள்ளார்.
இவர்கள் கத்தியை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் சவரத் தொழிலையும், அறுவை தொழிலையும் செய்துள்ளனர். இவர் நரம்பு உடல் உறுப்புகள் பாதிக்கா வண்ணம் சிறு அறுவை சிகிச்சை செய்வதால் இவரும் மருத்துவர் என்று அழைக்கப்பட்டார்.
பிள்ளை பேற்று துறையில் நாவிதர் மனைவிமார் ஈடுபட்டதால் இவர்கள் மருத்துவச்சி என அழைக்கப்பட்டனர்.
நாவிதற்கான ஊதியம் நாளொன்றுக்கு 4 நாழி நெல்.
நோயாளிகள்:
நோயாளிகளை வியாதிப்பட்டு கிடப்பார் என்று பெயர் கொண்டு அழைத்ததாக கல்வெட்டு செய்தி குறிப்பிடுகின்றது.
இவர்களுக்கு ஒரு வேளைக்கு ஒரு நாழி அரிசி வழங்கப்பட்டது.
ஆதுலர் சாலை யில் ஒரு ஆண்டுக்கு தேவையான பலவகையாக இருந்த மருந்துகளின் வகைகள்:
1.பிராமியம் கடும் பூரி- 1 எண்ணிக்கை
2. வாசா ஹரீதகி- 2 படி
3.தச மூலா ஹரீ தகி- 1படி
4. பல்லாதக ஹரீ தகி-1 படி
5.கண்டீரம் - 1 படி
6. பலா கேரண்ட தைலம் -1 தூணி
7. லசு நாக ஏரண்ட தைலம்-1 தூணி
8. பஞ்சக தைலம் -1 தூணி
9. உத்தம கர்ணாதி தைலம் -1 தூணி
10. பில்வாதி கிருதம் -1 பதக்கு
11. மண்டூகர வடகம்-2000 எண்ணிக்கை
12. திராவத்தி -1 நாழி
13. விமலை-2000 எண்ணிக்கை
14. சுனேற்றி
-2000எண்ணிக்கை
15. தம் ராதி-2000 எண்ணிக்கை
16.வஜ்ர கல்பம்-1 தூணி 1 பதக்கு
17. கல்யாண லவணம் - 1 தூணி 1 பதக்கு
14 வகையாக பிரிக்கப்பட்ட மூலிகைக் கலவைகளின் உட்பொருள் மூலிகைகள் எவை, எந்தெந்த நோய்களுக்கு அவற்றைஅளிக்கலாம் என்பது வரை அழகாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில மூலிகைகளை இங்குக் காணலாம்..
1. பிராம்மியம் காதம்பரி:
உட்பொருட்கள்- வல்லாரை கீரை, காக்கனான் கொடி, திப்பிலி.
குணப்படுத்தும் நோய்கள்- ஞாபக சக்தி குறைபாடு, சுவாசப் பிரச்னைகள், அறிவு விருத்தி முதலியன.
2. வாச ஹரிதாகி:
உட்பொருட்கள்- எத்தட்டை , கடுக்காய்.
குணப்படுத்தும் நோய்கள்- இருமல், சுவாசப் பிரச்னைகள், இரத்தப் போக்கு பிரச்னைகள், இதய நோய்கள்.
3. தசமுள்ள ஹரிதாகி:
உட்பொருட்கள்- வில்வம், நெருஞ்சில், பாப்பாரமுள்ளி, கண்டங் கத்திரி, புள்ளாடி முதலியன.
குணப்படுத்தும் நோய்கள்- இருமல், சுரம், சீதபேதி, சுவாசக் கோளாறுகள், அளவுக்கதிகமான தாகம் முதலியன.
4. பல்லடக்க ஹரிதாகி:
உட்பொருட்கள்- செங்கொட்டை, கடுக்காய்.
குணப்படுத்தும் நோய்கள்- மூலக் கோளாறுகள், கட்டிகள், தோல் வியாதிகள் முதலியன.
5. காண்டிரா:
உட்பொருட்கள்- செங்கொட்டை, ஆனை சுண்டைக்காய், சித்திர கொடிவெளி, மிளகு, திப்பிலி, சுக்கு, வாய்விலங்கம் முதலியன.
குணப்படுத்தும் நோய்கள்- மூலக் கோளாறுகள், தோல் வியாதிகள், மூட்டு வலிகள், உடல் எடை குறைதல் முதலியன.
6. மண்டுக்கர வடிக்கை:
உட்பொருட்கள்- நெல்லிக்காய், கடுக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, அக்கம், சித்திர கொடிவெளி, இலவங்கப்பட்டை முதலியன.
குணப்படுத்தும் வியாதிகள்- நீரிழிவு நோய், கண் நோய்கள், இதய நோய்கள், அஜீரண கோளாறுகள் முதலியன.
இது போல் மொத்தம் 14 வகையான மூலிகைக் கலவைகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்த அனைத்து மருந்துகளையும் பத்திரப்படுத்தி பாதுகாக்க 40 காசுகள் வழங்கப்பட்டுள்ளது என்று திருமுக்கூடல் கோயிலின் கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது.Ref. திருமுக்கூடல். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. இந்த அதுலர் சாலைக்கான விதை முதலாம் குந்தவை போட்டது. அந்த இளவரசியின் தாயுள்ளம், பிள்ளை பேற்றுக்கு தாய் வீடு செல்ல முடியாதவர்களுக்கு ஆதுலர் சாலை அமைத்து பிரசவம் கால பராமரிப்பு அளிக்க யோசித்து இருக்கிறது. பிரசவம் மட்டும் அல்ல எல்லாவித நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகளுக்கு உணவும் பராமரிப்பும் தரப்பட்டுள்ளது. ஒன்றல்ல மொத்தம் 17 அதுல சாலைகள், தஞ்சை, நாகை திருவாரூர் பகுதிகளில் மட்டும் செயல்பட்டுள்ளது. நடுநாடு, தொண்டை நாடு தனி .கண்டிப்பாகசொல்லுவேன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி யோசித்த இளவரசி கண்டிப்பாக சுயநலவாதியாகவோ கொலைக்காரியாகவோ இருக்க முடியாது.
ராஜசர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த
பொன்மான் கலியைக் கரந்து கரவாக்
காரிகை சுரந்த முலைமிகப் பிரிந்துமுழங்கெரி நடுவணுந் தலைமகற் பிரியாத்
தையல் நிலைபெறுந் துண்டா விளக்கு . இது ராஜராஜரின் தாயார் வானமாதேவியை குறிக்கும் கல்வெட்டு. திருக்கோவிலூர் கோவிலில் உள்ளது. வானமாதேவி திருக்கோவிலூர் மலையமான் மகள். இக்கல்வெட்டை எந்த ஆதாரமும் இல்லாமல் குந்தவையோடு சம்பந்த படுத்தி கொலையாளி ஆக்கி விட்டார்கள் சங்க தாராவில். அதை அடிப்படையாக வைத்து குமுதத்தில் மற்றொரு உளறல்.
மேற்படி சங்கதாரா நாவலில் அருள்மொழிவர்மர் (ராஜ ராஜ சோழன்) கி .பி 956 ஆம் வருடம் பிறந்ததாக ஒரு தகவல் தரப்பட்டுள்ளது.ஒரு வருடம் தானே, அதில் என்ன குறை கண்டுவிட்டீர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த ஆண்டுதான் புத்தகத்தின் ஆணிவேர்.
ராஜ ராஜ சோழன் கி.பி 956 ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஆசிரியர் எடுத்துரைப்பதை நாம் உண்மை என்று வைத்துக்கொள்வோம். ராஜ ராஜ சோழன் கி.பி 986 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருகிறார். அப்படி என்றால் அவர் தனது 30 ஆம் அகவையில் ஆட்சிக்கு வருகிறார். ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலம் கி.பி 986-1012 என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1014 ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழன் இறக்கிறார். அதாவது இந்த புத்தகத்தின் படி ராஜ ராஜ சோழன் தனது 58 ஆம் வயதில் சிவனடியை அடைகிறார்.
ராஜ ராஜ சோழரின் திருக்குமரனான ராஜேந்திர சோழன் கி.பி 1012 ஆம் ஆண்டு சோழ சிம்மாசனத்தில் அமர்கிறார். தமிழ்நாட்டின் பொற்காலம் என்று வர்ணிக்கக்கூடிய ஆட்சியை கி.பி 1044 ஆம் ஆண்டு வரை அளிக்கிறார். இவர் இறக்கும் பொழுது இவருடைய அகவை 82 என கல்வெட்டுகளில் மிகத்தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கி.பி 1044 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழரின் வயது 82 என்றால் கி.பி 1014 இல் அதாவது ராஜ ராஜ சோழர் இறக்கும் பொழுது ராஜேந்திர சோழரின் வயது சரியாக 52.
முன்னர் தான் ராஜ ராஜ சோழரின் வயதை யாம் கூறியிருந்தோம். அதாவது தனது 58 ஆம் வயதில் அவர் சிவனடியை அடைந்ததாக கூறியிருந்தேன். அதே வருடத்தில் ராஜேந்திர சோழரின் வயது 52. அதாவது தந்தைக்கும் மகனுக்கும் வெறும் 6 வயது வித்தியாசம். இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. அடுத்து ராஜ ராஜ சோழன் பிறந்தது ஆவணி சதயம் என்றும் அவர் பிறந்த இரண்டு மாதம் கழித்து, குந்தவை தன் தாய்க்கு ஐப்பசி சதயத்தில் பிறந்த ஆண் குழந்தையை மாற்றி தன் குழந்தையை வைத்து விட்டாள் என்று எழுதுகிறார். பிறந்த குழந்தைக்கும் இரண்டு மாத குழந்தைக்கும் வித்தியாசம் தெரியாதா? சோழ ராஜ குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அதன் அங்க அடையாளங்கள் பதிவு செய்ய மாட்டார்களா? திருவாலங்காடு செப்பேடுகள், ராஜ ராஜ சோழன் கையில் சங்கு சக்கர ரேகை உடன் பிறந்ததாக சொல்கிறதே. எந்த ஆதாரமும் இல்லாமல் போற போக்கில் குற்றவாளி பட்டம் கட்ட வேண்டியது. இறந்தவர் வந்து மறுக்கவா போகின்றார் என்ற தைரியம். ஆனால் இதை படிக்கும் போது நான் மிகவும் வேதனைப்பட்டேன். சமய மாச்சரியம் இன்றி அன்று புழக்கத்தில் இருந்த அனைத்து மதஙகளையும் ஆதரித்து கோவில் கட்டிய இளவரசி, ஆதுலர் சாலை கண்ட மாதரசி இறந்து 1000 ஆண்டுகள் பிறகு இப்படி கொலைக்காரி பட்டம் பெறுகிறாள் என்று. ஆதித்த கரிகாலன் கொலை என்பது சேர பாண்டிய சுக்ஷும சக்திகள் இணைத்து நடத்திய பாதகம். அதன் பலனை அனுபவித்த மதுராந்தக உத்தம சோழனை கூட இதில் நாம் நேரிடையாக தொடர்பு படுத்த முடியாது. விண்ணில் உள்ள ஆதித்தன் வந்து சொன்னால் தான் மர்மம் விலகும்.
( முற்றும்)
Thanks 😊
ReplyDeleteWhere is part 1 ?
ReplyDeleteWhat a Brilliant Analysis! You may have also added the imprisonment of Vanthiyathevan for 12 years during Uthamachozhan regime . I particularly liked ur argument of naming Rajaraja son as Mathuranthagan citing that it is nothing but a generic name to denote one who defeats the rulers of Madurai and not just his chittappa's name.
ReplyDeleteExcellent,, I had the same thought when I read sangatara. More like the author was very intrested in cleaning Ravidasan and co's image. Rajaraja's birth story was directly taken from TED BUNDY's( american seral killar) birth story.
ReplyDelete