காந்தளூர் சாலை கலமறுத்தல்
காந்தளூர்ச் சாலை கலமறுத்தல்
நான் சோழ வரலாற்றில் , குறிப்பாக முதலாம் இராஜராஜ சோழரின் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். எனது பணியின் காரணமாக நாஞ்சில் நாட்டில் வசிக்கும், இந்த காலகட்டத்தில் இந்த மண்ணோடு ஏற்பட்ட நெருக்கமே, காந்தளூர்ச் சாலை கலமறுத்தல் என்ற இராஜராஜ சோழனின் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது.
பார்த்திவபுரம், விழிஞ்ஞம், காந்தளூர் போன்ற இடப்பெயர்கள், ஆய் அரசர்கள், பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள் ஆகியோரின் நீண்ட அரசியல் தொடர்புகளை நினைவூட்டுகின்றன.
அந்த வரலாற்றின் மையத்தில் நிற்கும் புகழ்பெற்ற கல்வெட்டு வரி:
“காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீராஜராஜதேவர்.”
முதலாம் இராஜராஜர் தன் மெய் கீர்த்தி யில் முதலில் குறிப்பிடுவது காந்தளூர் சாலை கலமறுத்த நிகழ்வு தான்.
காந்தளூர் சாலை பற்றிய வரலாற்றின் பக்கங்களை ஆராய்ந்தால், அது பண்டைய ஆய் வேள் அரசர்களுடன் தொடர்பு உடையது. இன்றைய கன்னியாகுமரி மற்றும் தென் கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த நிலப்பரப்பு, கிழக்கு–மேற்கு மலைப்பாதைகளுக்கும் மேற்குக் கடற்கரைக்கும் இடையே அமைந்திருந்ததால் தனித்துவமான அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அவை பண்டைய காலத்தில் ஆய் வேள் அரசர்களால் ஆளப்பட்டது.
ஆய் அரசர்களில் குறிப்பிடத்தக்கவர் கருந்தடக்கன் ஸ்ரீவல்லபன். கி.பி. 865/866 காலத்தைச் சேர்ந்த பார்த்திவபுரம் செப்பேடுகள் அவரது ஆட்சியைப் பற்றிய மிக முக்கியமான முதன்மை ஆதாரமாகும்.
இந்தச் செப்பேடுகள் பார்த்திவபுரத்தில் ஒரு கோயிலும் அதனுடன் ஒரு சாலையும் அமைக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. மேலும் அந்தச் சாலை காந்தளூர் சாலை மரபை முன்மாதிரியாகக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
இதிலிருந்து தெரிய வருவது, என்னவென்றால், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் காந்தளூர் சாலை ஏற்கெனவே புகழ்பெற்ற மற்றும் ஒழுங்கமைந்த நிறுவனமாக இருந்திருக்க வேண்டும்.
ஆய் அரசர்கள் பாண்டியர்களுடன் நெருங்கிய அரசியல் தொடர்பு கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை பாண்டியர்களின் சாதாரண நிர்வாக அதிகாரிகள் என்று கருத முடியாது .
காந்தளூர் சாலையைப் புரிந்துகொள்ள பார்த்திவபுரம் செப்பேடுகள் மிக முக்கியமானவை.
பார்த்திவபுரம் சாலையில் 95 மாணவர்கள் தங்கிக் கல்வி கற்றனர். அவர்கள் பல வேதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். சாலைக்கு நிலங்களும் வருவாய்களும் வழங்கப்பட்டன; உணவு, தங்குமிடம் மற்றும் நிர்வாகத்திற்கான ஏற்பாடுகளும் இருந்தன.
இதனால் சாலை என்பது வெறும் அன்னசத்திரம் அல்ல; குடியிருப்பு அடிப்படையிலான வேதக் கல்வி நிறுவனம் என கொள்ளலாம்.
காந்தளூர் மட்டும் இத்தகைய நிறுவனமல்ல. திருவல்லா, முழிக்குளம், பார்த்திவபுரம் போன்ற இடங்களிலும் சாலை மரபு காணப்படுகிறது.
காந்தளூர் வரலாற்றை விழிஞ்ஞத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது.
விழிஞ்ஞம் மேற்குக் கடற்கரையின் முக்கிய துறைமுகமாக இருந்தது. அரபிக்கடல் வணிகத்திற்கும் கடற்படை இயக்கத்திற்கும் அதன் புவியியல் அமைவு சாதகமாக இருந்தது.
திருவாலங்காடு செப்பேடுகள், இராஜராஜனின் ஒரு தளபதி விழிஞ்ஞத்தை கைப்பற்றியதாக குறிப்பிடுகின்றன.
கி.பி. 865 முதல் இராஜராஜரின் காலமான 10ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தென் கேரளத்தின் அரசியல் நிலை மாறியது.
ஆய் அரசர்களின் பழைய அரசியல் வலிமை குறைந்தது. சேரப் பெருமாள் ஆட்சி தென் கேரளத்தில் செல்வாக்கு பெற்றது. பாண்டிய–சேர–ஆய் அரசியல் உறவுகள் புதிய வடிவம் பெற்றன.
இதனால் கி.பி. 988-இல் காந்தளூர் யாருடைய நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது என்ற கேள்விக்கு ஒருமித்த பதில் இல்லை.
ஆய்–பாண்டிய தொடர்பு இருந்த பழைய காந்தளூர், பின்னர் சேர அரசியல் உலகுடன் இணைந்திருக்கலாம்.
பிற்கால சோழ கல்வெட்டுகள் காந்தளூரை “சேரலன்” உடன் தொடர்புபடுத்துவது இந்தக் கருத்துக்கு முக்கியமான பின்னணி.
கி.பி. 985-ல் அருண்மொழிவர்மன் இராஜராஜ சோழனாக அரியணை ஏறினார்.
அவரது ஆட்சியின் ஆரம்ப நோக்கம் என்பது சோழ நாட்டை ஒரு வலிமையான பேரரசாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதாகும் . பாண்டிய நாடு, ஆய் நாட்டின் பழைய பகுதிகள், சேர நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் மேற்குக் கடற்கரை ஆகியவை இந்த விரிவாக்கத்தில் முக்கியமானவை.
இந்தப் பின்னணியில் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற காந்தளூர் நடவடிக்கை சோழ வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.
இராஜராஜனின் கல்வெட்டுகளில் மீண்டும் மீண்டும் வரும் புகழ்மொழி:
"காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய...”
இதுவே அவரது ஆரம்பகால இராணுவப் புகழின் அடையாளமாகியது.
“கலம்” என்ற சொல்லுக்கு கப்பல் என்ற பொருள் இருப்பதால், பாரம்பரிய விளக்கம் ,காந்தளூர் சாலையில் இருந்த எதிரியின் கப்பல்களை இராஜராஜன் அழித்தார் என்பதாகும்.
Epigraphia Indicaயில் வெளியான ஆய்வுகளும் காந்தளூர் நிகழ்வை கப்பல் அழிப்புடன் தொடர்புபடுத்துகின்றன. ஒரு கல்வெட்டு இராஜராஜன் தன் படைக்கு ஆணையிட்டு காந்தளூரில் கப்பல்களை அழித்ததாகப் பொருள்படும் வகையில் வாசிக்கப்பட்டுள்ளது.
அதனால் “கலம் = கப்பல்” என்பது வெறும் பின்னாளைய கற்பனை அல்ல; அதற்குக் கல்வெட்டு ஆதரவு உள்ளது.
ஆனால் மாற்றுக் கருத்தாக “கலம்” என்பது சாலையில் உணவு வழங்கும் பாத்திரம் அல்லது உணவு அளவைக் குறிக்கும் சொல் என்றும் சிலர் கருதியுள்ளனர்.
பார்த்திவபுரம் செப்பேடுகளில் சாலையின் உணவு மற்றும் மாணவர் நிர்வாகம் மிகவும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த விளக்கம் உருவானது.
ஆனால் இராஜராஜனின் காந்தளூர் புகழ்மொழி மற்ற இராணுவ வெற்றிகளுடன் இணைந்து வருவதையும், கப்பல் அழிப்பு குறித்த விரிவான கல்வெட்டு வாசிப்புகளையும் கருத்தில் கொண்டால், கடல்சார் போர் தாக்குதல் விளக்கம் வலுவானதாகத் தோன்றுகிறது.
இருப்பினும் “கலம்” என்பதன் இறுதி பொருள் குறித்து வரலாற்றாய்வில் விவாதம் தொடர்கிறது.காந்தளூர் நிகழ்வுக்குப் பிறகு சோழர்கள் மேற்குக் கடற்கரை அரசியலில் தொடர்ந்து தலையிட்டனர். விழிஞ்ஞம், வேணாடு, சேர நாடு போன்ற பகுதிகள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இதனால் காந்தளூர் கலம் மறுத்தல், ஒரு தனிப்பட்ட போர் என்று கருதுவதை விட, சோழ–சேர நீண்டகால மோதலின் ஆரம்பக் கட்டம் என்றே கருத வேண்டும்.
காந்தளூர் கலம் மறுத்தல், இராஜராஜனுடன் முடிவடையவில்லை.
இராஜேந்திரன் காலத்திலும் மேற்குக் கடற்கரை மற்றும் சேர நாட்டின் மீது சோழ நடவடிக்கைகள் தொடர்ந்தன.
பின்னர் இராஜாதிராஜன் கால கல்வெட்டுகளில்:
"சேரலன் ... காந்தளூர் சாலை"
என்ற தொடர்பு காணப்படுகிறது.
இதன் மூலம் 11ஆம் நூற்றாண்டில் காந்தளூர் சாலை சேர அரசியல் உலகுடன் தொடர்புடையதாக இருந்தது தெளிவாகிறது.
பின்னர் குலோத்துங்க சோழன் காலத்திலும் காந்தளூர் மீண்டும் சோழ வெற்றிகளின் நினைவில் தோன்றுகிறது.
அதாவது,காந்தளூர் மீது சோழர்களின் ஆர்வம் ஒரு தலைமுறையோடு முடிந்துவிடவில்லை. 100 ஆண்டுகளாக தொடர்ந்தது.
ஏன் காந்தளூர் மீண்டும் மீண்டும் முக்கியமானது?
மூன்று காரணங்கள் குறிப்பிடத்தக்கவை.
1. புவியியல்
கிழக்கு–மேற்கு நிலப்பாதைகளுக்கு அருகாமை.
2. கடல்
விழிஞ்ஞம் மற்றும் மேற்குக் கடற்கரை வணிக உலகத்துடன் தொடர்பு.
3. அரசியல்
ஆய்–பாண்டிய–சேர அரசியல் மாற்றங்களின் மையப்பகுதி.
எனவே காந்தளூர் சாலை கலம் மறுத்தல் நிகழ்வு, இப்பிராந்தியத்தில் சோழர் ஆதிக்கத்தை நிறுவுவது உடன் தொடர்பு உடையது.
இராஜராஜன் காந்தளூர் வெற்றியை தனது கல்வெட்டுகளில் ஒருமுறை மட்டும் குறிப்பிடவில்லை.
அதை தனது அரச அடையாளமாகவே மாற்றினார்.
“காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீராஜராஜதேவர்.”
ஒரு அரசன் தனது பெயருடன் ஒரு குறிப்பிட்ட வெற்றியை நிரந்தரமாக இணைத்துக் கொள்வது அந்த வெற்றியின் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அதனால் காந்தளூர்,
இராஜராஜனின் வெற்றி
என்பதிலிருந்து
சோழ அரச மரபின் வெற்றிச் சின்னம்
என்ற நிலைக்கு உயர்ந்தது.
காந்தளூர் பற்றிய ஆய்வில் சில விஷயங்கள் உறுதியானவை:
காந்தளூர் சாலை பழமையான நிறுவனம்.
பார்த்திவபுரம் சாலை அதன் மரபுடன் தொடர்புடையது.
இராஜராஜன் காந்தளூர் மீது முக்கிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்டார்.
“காந்தளூர்ச் சாலை கலமறுத்த” என்பது அவரது அதிகாரப்பூர்வ புகழ்மொழியாகியது.
கப்பல் அழிப்பு தொடர்பான கல்வெட்டு வாசிப்பு உள்ளது.
விழிஞ்ஞம் சோழ இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையது.
ஆனால் இன்னும் விவாதத்தில் உள்ளவை:
காந்தளூரின் சரியான அமைவிடம்.
கி.பி. 988 அல்லது பின்னர் நடந்த குறிப்பிட்ட நிகழ்வுகளின் கால வரிசை.
அந்த நேரத்தில் காந்தளூர் யாருடைய நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது.
“கலம்” என்பதன் இறுதியான பொருள்.
விழிஞ்ஞத்தை கைப்பற்றிய தளபதியின் பெயர்.
காந்தளூர் மற்றும் விழிஞ்ஞம் ஒரே படையெடுப்பின் பகுதிகளா? என்பதாகும்.
காந்தளூர், இராஜராஜனின் வரலாற்றில் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அவர் உருவாக்கிய சோழப் பேரரசின் தென்மேற்கு வாசலில் பொறிக்கப்பட்ட முதல் பெரிய வெற்றிக் குறியீடுகளில் ஒன்று.
மேற்கண்ட பதிவிற்கு துணை நின்ற ஆதரவுகள்
Parthivapuram Copper Plates
South Indian Inscriptions இராஜராஜ சோழன் கல்வெட்டுகள்.
Epigraphia Indica, Vol. XXII — காந்தளூர் கப்பல் அழிப்பு தொடர்பான கல்வெட்டு ஆய்வு.
திருவாலங்காடு செப்பேடுகள்
செங்கம் வீரக்கல்
M.G.S. Narayanan, Perumals of Kerala
K.A. Nilakanta Sastri, The Colas
Travancore Archaeological Series — காந்தளூர், ஆய் நாடு, தென் கேரள கல்வெட்டுகளுக்கான ஆரம்பகால epigraphic ஆய்வுகள்.
Comments
Post a Comment