ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)
முதலாம் பராந்தகன் ஒரு கேரள இளவரசியை திருமணம் செய்ததாக உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றது. லால்குடி சப்தரிஷி ஈஸ்வரர் கோவிலில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு சேரமான் மகளார் கோக்கிழானடிகள் சார்பில் கொடுக்கப்பட்ட நந்தா விளக்கு தானம் பற்றி குறிப்பிடுகிறது. முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியின் முழு பெயர் கோக்கிழனடிகள் ரவிநீலி ஆகும். ஆதித்த கரிகாலன் கொலை குற்றவாளிகளில் முதல் குற்றவாளி பெயர்ரவிதாசன் ஆகும். அந்த ரவி நீலியின் தாசன் ரவிதாசனோ?
ஆதித்த கரிகாலனின் குற்றவாளிகள் இருந்த இடம் வீரநாராயன சதுர்வேதி மங்கலம்.
சோழ மன்னர் முதலாம் பராந்தகச் சோழன் (907-935) "வீர நாராயண சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் ஒரு ஊரினை உருவாக்கினார். (வீர நாராயணன் என்பது அவரது சிறப்புப் பெயர்) அதுவே இன்று காட்டு மன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊருக்கு அருகிலேயே அவருடைய மகன் ராஜாதித்திய சோழனால் விவசாயிகளின் நலன் கருதி, "வீர நாராயணன் ஏரி' என்ற பெரிய ஏரி ஒன்று வெட்டப்பட்டது! அந்த ஏரிதான் இன்று "வீராணம் ஏரி' என்று அழைக்கப்படுகிறது. எனவே புதிதாக உருவாக்கப்பட்ட சதுர் வேதிமங்கலத்தில் சேர இளவரசியும் சோழ பட்டதரசியமான கோக்கிழானடிகள் ஏன் அவரது தாய் நாட்டை சேர்ந்த பிராமணரை குடி வைத்து இருக்க கூடாது?
இராஜாதித்யர் இறந்த பின்பு சோழ மணிமகுடம் அவரது சகோதரர் கண்டாரத்திதன் வசம் சென்று, அவரும், மேற்கு எழுந்தருளிய பின் அரிஞ்சயர் வசம் சென்று, அரிஞ்சய சோழர் இறப்பிற்கு பின், கண்டாரத்தித சோழரின் மகன் பாலகனாக இருந்ததால், அரிஞ்சய சோழனின் மகன் இரண்டாம் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி வசம் வருகின்றது. கண்டாரத்திதரின் மகன் மதுராந்தகன் பழுவேட்டரையர் மகளை மணம் செய்திருப்பான். எனவே மதுராந்தகன் வசம் சோழ அரியணை செல்ல வேண்டும் என பழுவேட்டரையர் சூழ்ச்சி செய்வதாக கல்கியின் பொன்னயின் செல்வன் கதை அமைந்து இருக்கும். பழுவேட்டரையரின் பூர்வீகம் சேர நாடு. மீண்டும் சேர இளவரசி சோழ அரசியாக விளங்க தடையாக இருக்கும் ஆதித்த கரிகாலனை போட்டியில் இருந்து விலக்க ஏன் சேர தேச அரசியல் சக்திகள் முயற்சித்து இருக்க கூடாது? ஆதித்த கரிகாலனின் கொலை என்பது மதுராந்தகன் என்னும் உத்தம சோழனை பட்டம் ஏற்ற மட்டும் நடைபெற்றது அல்ல. வீரபாண்டியன் கொலைக்கு பழி வாங்க செய்யப் பட்டது. காரணம் வீரபாண்டியன் கொடூரமாக கொல்ல பட்டான். ஏசாலம் கல்வெட்டுகள் வீரபாண்டியன் தலையை ஆதித்தன் வெட்டி எடுத்து வந்து ஒரு மாத காலம் தஞ்சை கோட்டையில் மாட்டி வைத்து இருந்தாக குறிப்பிடுகிறது. வீரபாண்டியன் ஒரு வகையில் சேர தாய் வழி மரபை சேர்ந்தவன் என்பதால், அவனது கொடூர மரணம் கண்டு பாண்டிய தேசம் மட்டும் அல்ல, சேர தேசமும் கலங்கி தான் போயிருக்க வேண்டும். ஆனால் சேரமான் பெருமாள் ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்தப்பட்டதாக சான்றாவனம் இல்லை. ஆனால் காந்தளூர் சாலை சம்பந்தப்பட்டதாக அனுமானிக்க சான்றுகள் உள்ளது. வீரபாண்டியனுக்காக
ஏன் காந்தளூர் சாலை துடிக்க வேண்டும்? பல நாவல் ஆசிரியர்களின் அனுமானம் வீரபாண்டியன் காந்தளூர் சாலையின் முன்னாள் மாணவனாக இருக்கலாம் என்பது ஆகும். மேற்படி அனுமானத்தின் சாத்திய கூறுகள் என்ன? ( தொடரும்)
Comments
Post a Comment