ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)

வீரபாண்டியனுக்கும், காந்தளூர் சாலைக்கும் உள்ள தொடர்பை அறிய வீரபாண்டியன் பூர்வீகத்தை அறிய வேண்டும். வீரபாண்டியன் தந்தை மூன்றாம் ராஜசிம்மன்.
மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனான இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன், இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான்.
வெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான். பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான். ஐந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும், வாள், குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான். மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான். பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது.
வீரபாண்டியன் கி.பி. 946 முதல் 966 வரை ஆட்சி புரிந்தவனாவான். மூன்றாம் இராசசிம்மனின் மகனான இவன் கி.பி. 946 ஆம் ஆண்டில் தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டான். சோழாந்தகன், பாண்டி மார்த்தாண்டன் போன்ற சிறப்புப்பெயர்களை இவன் பெற்றிருந்தான் என திருப்புடைமருதூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, இராமநாதபுரம், திருவாங்கூர் போன்ற இடங்களில் வீரபாண்டியனைப் பற்றியக் கல்வெட்டுகளைக் காணலாம். வீரபாண்டியனின் 9 மற்றும் 10 ஆம் ஆண்டு ஆட்சிக் காலங்களில் குறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திருமங்கலம் வட்டம், கீழ்மாத்தூர்க் கோயில் போன்ற பகுதிகளில் காணலாம். வீரபாண்டியனின்  தந்தை மூன்றாம் ராஜ சிம்மன் தன் இறுதி காலத்தை தன் தாய் வீடான சேர தேசத்தில் கழித்ததால், இயல்பாகவே வீரபாண்டியன் தன் பால்யத்தை சேர தேசத்தில் கழித்திருப்பதற்கும்,               காந்தளூர் சாலையில் கல்வி கற்று இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. பாண்டிய நாட்டை வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட வீரபாண்டியன், முதலாம் பராந்தகன் காலத்தில், சோழ நாட்டின் மீது கண்ணாரதேவன் படையெடுத்ததை பயன்படுத்திக் கொண்டு, தெற்கே வெள்ளுர் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தி மதுரையை சோழர் அதிக்கத்தில் இருந்து மீட்டான். இந்த போரில் தான் முதலாம் பராந்தக சோழனின் மகனான உத்தமசீலி தலை துண்டிக்கப்பட்டு இறந்தான். வீரபாண்டியனும் சோழன் தலை கொண்ட பாண்டியன் என பட்டம் கொண்டான். இதற்கு தான் ஆதித்த கரிகாலன் பழி வாங்கி, வீரபாண்டியனை கொடூரமாக கொலை செய்து, அவன் தலையை தஞ்சை கோட்டையில், ஒரு மாத காலம் மாட்டி வைத்து, பாண்டியன் தலைக் கொண்ட சோழன் என பட்டம் பெற்றான். வீரபாண்டியனின் தந்தை வழி பாட்டி வானமாதேவி, சேர இளவரசி யாக இருந்த போதும், முதலாம் பராந்தகன் சேரமான் பெருமாள் மகளை மணம் செய்ததால், சேர தேசம் பாண்டிய சோழ சண்டையில் யார் பக்கமும் சாராமல் நடுநிலை வகித்து வந்தது. ஆனால் சேர இளவரசி வயிற்றில் பிறந்த இராஜாதித்தர் தக்கோலம் போரில் கொல்ல பட்டவுடன் சேர தேச ஆதரவு பாண்டியர் வசம் சென்றது. இந்நிலையில் வீரபாண்டியனின் கொடூர மரணம் காந்தளூர் சாலை பட்டர்களின் எகோவை கிளறி இருக்க வேண்டும். தங்களிடம் பயிற்ற மாணவன் தோற்றது மட்டும் அல்லாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டது, தங்கள் அளித்த போர் பயிற்சி மீதான அவமானம் என்றே கருதி இருக்க வேண்டும். எனவே தான் ஆதித்த கரிகாலனுக்கு அடுத்து பட்டம் பெற போட்டியில் இருந்த மதுராந்தகன் உடன் அந்த சாலையின் பட்டர்கள் உடன்படிக்கை செய்து கொண்டு,  ஆதித்தனை வர்மம் மூலம் கொலை செய்து இருக்க வேண்டும். மதுராந்தகன் ஆதித்தன் கொலையை நேரடியாக தூண்டிவி்டாவிட்டாலும், அந்த கொலையின் பலனை அனுபவித்தான். சதாசிவ பண்டாரத்தார் இக்கூற்றை மறுத்து, மதுராந்தகன் கெட்டவன் என்றால், ஏன் ராஜராஜன் தன் மகனுக்கு இயற்பெயராக மதுராந்தகன் என்ற பெயர் வைக்க வேண்டும் என்று கேள்வி எழு ப்புகிறார் . ஆனால் மதுராந்தகன் என்பது சோழ அரசர்கள் சூடும் பொது பெயர். மதுரைக்கு அந்தகன் அதாவது மதுரைக்கு எமன் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வைத்துக்கொள்வார்கள் இதை வைத்து மதுராந்தகன் நல்லவன் என்று சான்று அளிக்க முடியாது. திருவாலங்காடு செப்பேடுகள் மதுராந்தக உத்தம சோழனின் ராஜ்ய ஆசையை தெளிவாக எடுத்து கூறுகிறது. அது மட்டும் அல்லாமல் மதுராந்தகனின்‌ 14 ஆண்டு ஆட்சி   காலத்தில் போர் எதுவும் நடைபறவில்லை. சும்மாவே மதுரையை மீட்க துடிக்கும் பாண்டியரின் அமைதி புருவத்தை உயர்த்துகிறது. ராஜராஜன் தன் ஆட்சிக்காலத்தில் இருமுறை பாண்டிய படையெடுப்பை முறியடித்து இருக்கின்றான். அப்படியானால் உத்தம சோழன் காலத்தில் பாண்டியர் அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? திருவண்ணாமலை பகுதியில் கண்டு எடுக்கப்பட்ட  கல்வெட்டு பாண்டிய இளவரசி மிலாடு உடையார் என்பவரை  திருமணம் செய்து, அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு நந்தா விளக்கு தானம் அளித்ததை கூறுகிறது. அந்தளவு பாண்டியருடன் அனுக்கமாக உத்தம சோழன் ஆட்சி புரிந்தான். ரவிதாசனின் பஞ்சவன் பிரம்மாதி ராஜன் என்னும் பட்டம் சோழ குலத்தில் தலைமை பொறுப்பு வகிக்கும் பிராமணர் பெறும் பட்டம். ரவி தாசன் உத்தம  சோழன் காலத்தில் தான் பொறுப்பில் இருந்து இருக்க வேண்டும். மக்கள் புரட்சி வெடித்து, அருண்மொழி பட்டம் ஏற்றதும் தலைமறைவு ஆகி இருக்க வேண்டும். சிலர் ரவிதாஸன் பிராமணர் என்பதால் அவன் மரண தண்டனைக்கு உள்ளக்கப்படவில்லை என்றும் இராஜராஜன் பார்ப்பன அடிமை என்றும் எழுதுகிறார்கள். அவர் சிவனுக்கு மட்டும் தான் அடிமை. காந்தளூர் சாலை மீது படையெடுத்து நூற்றுக்கணக்கான பட்டனையும் சட்டனையும் கொன்றவருக்கு ஒரு பிராமணனை கொல்ல பயமா? இல்லை. அவன் அவர் கையில் அகப்படாமல் தப்பித்தாலேயே அவன் சொத்து அவனுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்தவர் சொத்து அகியற்றை பறிமுதல் செய்து, அவன் உறவினரை கூட்டத்தோடு நாடு கடத்த உத்தரவிட்டார். ஆதித்த கரிகாலன் கொலையை பற்றி நாம் இருக்கும் தரவுகள் கொண்டு இப்படி நடந்து இருக்கலாம் என அனுமானிக்காலாமே  தவிர அறுதி இட்டு சொல்ல முடியாது. கையில் கிடைத்த ஒரு கூந்தலின்  நுனியை கொண்டு அதற்கு உரியவர் உருவத்தை வரையும் முயற்சி போல் தான் இது. ஆதித்த கரிகாலன் கொலையை பற்றி பல்வேறு நூல்களை நான் படித்த போது, படிக்க நேரிட்ட ஒரு நாவல் தான் சங்கத்தாரா. அதன் நூல் ஆசிரியர் ஒரு விநோத கோணத்தை முன் வைக்கிறார். அருண்மொழி என்னும் ராஜராஜரை குந்தவையின் மகன் ஆக்கி குந்தவை தன் குழந்தையையும், தன் தாயாருக்கு பிறக்கும் குழந்தையையும் மாற்றி வைத்து, தன் கணவர் வந்தியத்தேவன் உதவியுடன்  ஆதித்த கரிகாலனை கொன்றதாகவும், பின் பழுவேட்டரையரின் தலையீட்டில் மதுராந்தகன் பட்டம் ஏறி உடன்படிக்கையின் படி மதுராந்தகனுக்கு அடுத்து அருமொழி பட்டம் ஏறியதாகவும், உத்தமனை குந்தவையின் தம்பி என்றும் அதிரடியாக எழுதி உள்ளார்.  மேற்படி கற்பனை உண்மையா? மதிநுட்பமும் கருணையும், பெருந்தன்மையும் கொண்ட சோழ இளவரசி என வரலாற்று ஆசிரியர்கள் புகழும் குந்தவை, தன் சொந்த அண்ணனை கொல்லும் கல்நெஞ்சக்காரியா  ?
( தொடரும்)

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு