#வாசிப்பு

Lock down diaries  நான் படித்த புத்தகங்களில் எனக்கு தாக்கம் ஏற்படுத்திய புத்தகங்கள் பற்றி அசை போட்டு கொண்டு இருக்கிறேன்.
என்னமோ சின்ன வயதில் இருந்து ராஜ ராணி கதை தான் ரொம்ப பிடிக்கும். நான் 6 வது படிக்கும் போது என் அப்பாவுடன் சென்னை சென்றேன். மயிலாப்பூர் அழைத்து சென்றார்கள்.  புத்தகம் வேண்டும் என்றேன். வாங்கி கொள் என்றார் என் அப்பா. ஒரு புத்தகத்தை எடுத்தேன் கீரிடம் உள்ள ராஜா தேர் தட்டில் உட்கார்ந்து இருந்தான் . எனக்கு இது வேண்டும் என்றேன். உனக்கு இது புரியுமா என்றார் என் அப்பா. எனக்கு படிக்க தெரியுமே. நான் நல்லா படிப்பேன் எனக்கு இது வேண்டும் என்று அடம் பிடித்து நான் வாங்கிய புத்தகம் #பகவத்கீதை.
உண்மையில் கீதையின் சாரம் அந்த வயதில் எனக்கு புரியவே இல்லை. ஆனால் அது கீதையின் ஸ்லோகங்களை தமிழ் ஆக்கத்துடன் கொடுத்த புத்தகம். கீதையில் 18 அத்தியாங்கள் உண்டு . ஒவ்வொரு அத்தியாயம் முடிவில் அத்தியாயம் பாராயணம் செய்தததல் கிடைக்கும் புண்ணியம் பற்றிய கதைகள் இருக்கும். அந்த வயதில் எனக்கு அந்த கதைகள் தான் புரிந்தது. பின்னாட்களில் கீதாசாரத்தை புரிந்து கொள்ளும் வயது வந்தாலும், ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு பொருள் உணர்த்தும் ஞான கண்ணாடி அது
பள்ளி பருவத்தில் படித்த காந்திஜியின் #சத்தியசோதனை புத்தகமும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொய் சொல்வது குறித்து எனக்கு அருவருப்பு உண்டானது அந்த புத்தகத்தினால் தான். வாழ்வில் அவமானங்களை சந்திக்கும் போது எல்லாம் அவர் தென்னாப்பிரிக்காவில் சந்தித்த அவமானங்களையும் அதை அவர் துணிவுடன் எதிர் கொண்டத்தையும் யோசித்து என்னை நானே தேற்றி கொள்ளுவேன். உலகமே விழினும் சத்தியத்தின் பக்கம் நிற்றல் என்ற அறத்தை ஆழ்மனத்தில் பதித்த புத்தகம் அது.
#பொன்னியின்செல்வன்.  எல்லாரையும் மயக்கும் போதை வஸ்து . நான் மட்டும் விதிவிலக்கா என்ன? சோழர் வரலாற்று தேடல் பக்கம் என்னை தள்ளிய நாவல். என்னை உலுக்கி போட்ட புத்தகம் என்று s.ராமகிருஷ்ணனின் #உபபாண்டவம் நூலை சொல்லுவேன். மகாபாரதத்தை அதன் கதை மாந்தர் கண்ணோட்டத்தில் ஒரு கதை சொல்லி சொல்வது போல எழுதி இருப்பார். மனித மனங்களில் இருட்டு பக்கங்கள் வெளிப்படும் தருணம், அருவருப்பும் அச்சமும் தானே தலை தூக்கும்.  துரியனின் மனைவி பானுமதியின் காதலும் கண்ணீரும் என்னை உலுக்கியது. திரௌபதி மட்டும் என்ன பாவம் செய்தாள்? குந்தியின் சூழ்ச்சிக்கு பலி  ஆகி, ஐவரை மணந்து, அவமானப்பட்டு, தம் பிள்ளைகளான உப பாண்டவரையும் இழந்து, அவள் விட்ட கண்ணீர் என்னை உலுக்கியது.
ஜெயமோகனின் #அறம் சிறுகதைகள் தொகுப்பும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில்.எனக்கு மிகவும் பிடித்த கதைகள் #வனங்கான்.  #சோற்றுக்கணக்கு. அடிப்பட்ட சமூகம் வீறி எழும் கம்பீரத்தை வனங்கானில் தரிசித்தேன்.  அன்னம் வழி அன்னை ஆகும் ஆண் மகனின் தாய்மை உணர்வை சோற்றுக் கணக்கில் தரிசித்தேன்
எழுத்து சித்தரின் எண்ணற்ற புத்தகங்கள் என்னை பக்குவ படுத்தி உள்ளது. ஆனால் முன்னோரை கொண்டாட வேண்டிய அவசியம் மற்றும் தம் வேர்களை மறக்காமல் இருப்பதை பற்றி போதித்த #அப்பம்வடைதயிர்சாதம் நாவல் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். அடுத்து #ஆனந்தவயல் நாவல்,நம் அறியாது நம்மை சுற்றும் கர்ம கணக்கு பற்றி சொல்லும் நாவல்
யோசித்து பார்த்தால் பாலகுமாரனின் நாவல்கள் எல்லாமே கீதாஸாரத்தை வேறு வகையில் கற்பனை தடவி சொல்கின்றன.
கல்லூரி தோழியின் பரிந்துரையின் பேரில் கல்லூரி காலத்தில்  #SidneyShelton நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன் . சோகம் இழையோடும் அதிரடி twists உள்ளவை இவரது கதைகள். முதலில் நான் படித்த சிட்னி ஷெல்டனின் நாவல், #rageofangels.  அதன் சட்ட பின்னணிக்காகவே படித்தேன். வாழ்ககையில் போராடும் இளம் அட்டார்னியின் கதை. அதில் வரும் court room scenes கல்லூரி காலத்தில் சட்ட படிப்பு குறித்த ஒரு பெருமித உணர்வை ஏற்படுத்தியது. இப்போதும் Jennifer என்ற பெயரை கேட்டால், ஜெனிஃபர் பார்க்கர் என்னும் அந்த இளம் அட்டர்னி கதையின் முடிவில் அனைத்தையும் இழந்து, இழப்பை கடந்து, பனி படர்ந்த சாலையில் தன் லாங் கோட்டை அணிந்து கொண்டு, செல்லும் காட்சி தான் நினைவுக்கு வரும். Whatever happens;life has to move on..

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)