கோவில்களும் மருத்துவமனையும்

பெரிய கோவில் கட்டிய காலத்திலும் ஆதுர சாலை என்னும் அரசு மருத்துவமனை உண்டு. கோவில்கள் வேறு விதமாக மானுட உதவி செய்கின்றன. இதை உடையாரில் பாலகுமாரன் அழகாக விவரித்து இருப்பார். பெரிய கோவில் கட்டுமானம் மூலம், காசு ஓரிடத்தில் முடங்காமல், காசு புழக்கம் அதிகரித்து, சோழ நாட்டில் ஒரு economical surge ஏற்பட்டது என்று.  கோவில்களையும் மருத்துவமனையும் போட்டு குழப்பி கொள்ளவே கூடாது, இரண்டும் வேறு வேறு வகையில் மனிதருக்கு தேவை. கோவில்கள் இல்லா இந்தியா எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கலாச்சார அடையாளம் எதுவும் இல்லா பெரும் நிலப்பரப்பு. கோவில்கள் ஒரு வரலாற்று கடத்திகள். அவை இல்லை என்றால், நம் வரலாறு தெரியாத அனாதைகளாக நின்றிருப்போம
இன்றும் புதர் மண்டி காரை பெயர்த்து நிற்கும் சோழ நாட்டு கோவில்கள் பல நான் அறிவேன். வவ்வால் எச்சம் நிறைந்து, இருட்டில் முழ்கி கிடக்கும் அந்த கோவில்களை விட்டு விலகாமல், ஏழ்மை நிலையிலும் அதில்  ஒரு வேளை விளக்காவது போடும் பெரிய உள்ளங்களையும் நான் அறிவேன். அந்த கோவில்களின் காரை விழ்ந்த சுவர்களில் விழாமல் ஒட்டிக்கொண்டு உள்ளது பழைய வரலாறு. அதில் அந்த கோவிலை அல்லும் பகலும் உழைத்து உருவாக்கிய சிற்பிகளும், கோவில் கட்ட பொருளாதாரத்தை உருவாக்க உழைத்த மன்னனும் மக்களும், எங்கள் உழைப்பை, எங்கள் நாகரீகத்தை காப்பாற்றுங்கள்;அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கெஞ்சுவது போலவே இருக்கும். கையறு நிலையில், என்னால் ஆன பூஜை பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு, கனத்த இதயத்தோடு நகர்ந்து விடுவேன்.
பெரிய, பிரசித்தி பெற்ற கோவில்களின் உண்டியலில் போடும் பணத்தை, சிதிலம் அடைந்த பழமையான கோவில்களுக்கு, கொடுக்கலாம். இதுவும் தர்மம் தான். வயதான ஆதரவு இல்லாத யாரோ ஒரு தாய் தந்தைக்கு ஆதரவாக நிற்பது போல ஒரு தர்மம். அந்த பழமையான கோவில்களின் உள்ளே கலந்து நிற்கும் நம் முன்னோரின் உழைப்பை காப்பாற்றி அடுத்த தலைமுறை கைகளில் கொடுக்கும் தர்மம். இதுவும் முக்கியம் தான்.ஏன் என்றால் முகவரி தொலைத்தவன், முகம் இல்லாதவனுக்கு சமம். நம் முகவரி ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆக நம் மண்ணில் கிளர்ந்து எழுந்து நிற்கும் பண்பாடு. அந்த பண்பாட்டை பிரதிபலிக்கும் கண்ணாடி, கோவில்கள்.  ❤❤❤

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு