ஒரு பட்டாம்பூச்சியின் கதை
*ஒரு பட்டாம்பூச்சியின் கதை*
இப்படி தலைப்பு வைத்தால், ஒரு பெண்ணின் கதை என்று தானே நினைப்பீர்கள். ஆனால் இல்லை இது ஒரு நிஜ பட்டாம்பூச்சியின் கதை. அவள் பெயர் குழலி. ( பாலினமும் பெயரும் மனிதருக்கு மட்டும் தானா😉) அழகர் மலையில் அவள் குடியிருப்பு. உங்களுக்கு தெரியுமா? குழலியின் முன்னோர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள்😄😄. ஆம் ஒரு பட்டாம் பூச்சி 3000 கிமீ பறக்கும். ஆண்டு தோறும், ஈழத்தில் இருந்து 70 வகையான பட்டாம்பூச்சிகள் மதுரை வரும். குழலிக்கு ஒரு வயதாக போகிறது. அதன் ஆயுள் முடிய போகிறது. அழகனை தினமும் கண்டாலும் அவளுக்கு ரங்கனை பார்க்க ஆசை. அவளின் அம்மா காவிரி கரை காடுகளை பற்றி பேசி கொண்டே இருப்பாள். குழலியும் கிளம்பி விட்டாள் ஸ்ரீரங்கம் நோக்கி. ஆனால்?
போகும் வழியெல்லாம் மனிதர்களை அரிதாகவே கண்டாள். என்னாயிற்று இந்த மனிதர்களுக்கு ? மனிதர்களை குழலிக்கு பிடிக்காது. அழகான இந்த பூமியை நாசம் செய்கின்றார்கள் என தோன்றும். அவளின் அப்பாவை ரெக்கையை கட்டி காயப்படுத்தி கொன்றான் ஒரு பொடியன். மனிதர்கள் என் குழந்தைமையில் கூட இரக்கம் அன்று திரிக்கின்றார்கள் என்று தோன்றும் குழலிக்கு. ஸ்ரீரங்கம் வந்துவிட்டாள். அதோ ரங்க கோபுரம். பரவசமாக பறந்த குழலியின் மீது கொரானாவை கட்டுபடுத்த பீய்ச்சி அடித்த கிருமி நாசினி பாய்ந்தது. ஏற்கனவே முதிர்ந்த குழலி, கிருமி நாசினி வீரியத்தில் விழ்ந்து விட்டாள். தொலைவில் அந்த ரங்க கோபுரம், குழலியின் முன்னோர் பூமியான ஈழத்தை பார்த்தபடி.
சூரியனின் பொன்னொளி கிரணங்களுடன் அவள் உயிரும் கலந்தது. ரங்கனை நினைத்தே மாண்டதால், அவள் வைகுந்தம் போவாளோ என்பது தெரியாது. ஆனால் மனிதர்களால் நாரகம் ஆக்கப்பட்ட, இயல்பில் சொர்க்கமான இந்த பூமியில் இருந்து விடுதலை பெற்று குழலி வானவீதியில் பரவினாள்🦋🦋🦋
Comments
Post a Comment